குறும்படங்களிலிருந்து திரைப்படம் வரை!
கரோனா தொற்றினால் ஊரடங்கு. பல நகரங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.


கரோனா தொற்றினால் ஊரடங்கு. பல நகரங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
கொச்சி நகரில் வாழும் 15 வயது ஸ்ரீஹரி ராஜேஷால் அப்படி முடங்கியிருக்க முடியவில்லை. தனது விடியோ கேமராவைத் தூக்கிக் கொண்டு, நகர வீதிகளைப் படம் பிடித்தார். அப்படி உருவானதுதான் அவருடைய "சைலன்ட் ரோட்ஸ்' எனும் குறும்படம்.
ஸ்ரீஹரிக்கு குறும்படம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. ஒன்பது வயதிலேயே தனது செல்லிடப் பேசி கேமராவால், கண்ணில் எதிர்ப்படுவதை எல்லாம் விடியோ படம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவிதமாக தனது நண்பர்களை, உறவினர்களைப் பேசச் சொல்லி படம் எடுத்திருக்கிறார். பின்னர் அது குறும்படமாகியிருக்கிறது. அவர் எடுத்த முதல் குறும்படம், "புகா - தி கில்லிங் ஸ்மோக்'.
33 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் மாணவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஸ்ரீஹரியின் தந்தை ராஜேஷ் ராமகிருஷ்ணன், கேரள காவல்துறையில் பணியாற்றுபவர். போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தவறிழைக்கும் இளைஞர்களைப் பார்க்கும் வாய்ப்பு ஸ்ரீஹரிக்கு அதனால் கிடைத்திருக்கிறது.
ஜிஸ்னு என்கிற ஒரு மாணவனின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். வீடு - பள்ளி என்று அவன் எப்போதும் முடங்கியிருக்க வேண்டும். வெளியே செல்லக் கூடாது.
தந்தைக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் ஜிஸ்னு தீய நண்பர்களின் தொடர்பினால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். காவல்துறையினருக்கு அது தெரிய வருகிறது. அவனைப் பிடித்து, அவனுக்கு உளவியல்ரீதியிலான ஆலோசனைகள் தர காவல்துறையினர் ஏற்பாடு செய்கிறார்கள். இதுதான் ஸ்ரீஹரி எடுத்த முதல் குறும்படத்தின் கதை. போதைப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த குறும்படத்தை ஸ்ரீஹரி எடுத்திருக்கிறார்.
ஸ்ரீஹரியின் 13 -ஆவது பிறந்தநாள் பரிசாக அவருடைய பெற்றோர் அவருக்கு "கேனான் 1500' விடியோ கேமரா ஒன்றைப் பரிசளித்திருக்கிறார்கள். குறும்படங்களை எடுக்க அவருக்கு அது உதவுகிறது.
கரோனா ஊரடங்கு காலத்தில் அவர் எடுத்த இன்னொரு குறும்படம் " சார்லஸ் - தி மேன் ஹு ஃபீட்ஸ் ஸ்ட்ரே டாக்ஸ்'. கொச்சி துறைமுகத்துக்கு அருகே தெரு நாய்களுக்கு உணவளிக்கும் சார்லஸ் என்ற 58 வயது மனிதரைப் பற்றிய குறும்படம் அது. கடந்த 24 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளிக்கும் சார்லஸ், அதற்காக யாரிடமும் இதுவரை ஒரு பைசா கூட உதவியாகப் பெற்றதில்லையாம். ஒவ்வொருநாள் இரவும் 50 நாய்களுக்கு உணவளிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எலக்ட்ரிகல், பிளம்பிங் என கிடைத்த வேலைகளைச் செய்து அதில் வரும் பணத்தை நாய்களுக்காகச் செலவு செய்கிறார். இந்த குறும்படம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
""நான் குறும்படங்கள் எடுப்பதற்காக பெரிய அளவுக்கு முன் தயாரிப்புகள் எதுவும் செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக குறும்படம் எடுப்பதாக முடிவு எடுத்தவுடன், முதலில் என் நண்பர்களுக்குச் சொல்வேன். வீட்டில் உள்ள எனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் சில உறவினர்களுக்குச் சொல்வேன். எனது முதல் குறும்படம் எடுக்கும்போது 20 பேர் எனக்காக நடித்துக் கொடுத்தனர். யாரும் அதற்காகக் காசு கேட்கவில்லை. எனது தாத்தா, பாட்டி கூட ஒரு குறும்படத்தில் நடித்து இருக்கின்றனர்'' என்கிறார் ஸ்ரீஹரி.
கொச்சி புறநகர்ப் பகுதியான எரூரில் உள்ள "பவான்ஸ் வித்யா மந்திர் பள்ளி'யில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஹரி, படிப்பையும், குறும்படம் எடுப்பதையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும்தான் குறும்படம் எடுக்கிறார்.
""சிறுவயதில் இருந்தே நான் விடியோ படங்களை எடுத்துப் பழகியிருக்கிறேன். அந்த அனுபவங்கள் எனக்கு உதவுகின்றன. குறிப்பிட்ட சில திரைப்படங்களைப் பார்த்து, கதைக்கு ஏற்றவாறு காட்சிகளை எவ்வாறு எடுத்து இருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிப்பேன். கிறிஸ்டோபர் நோலன் எனக்குப் பிடித்த இயக்குநர்.
அவருடைய திரைப்படங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தவை அதிகம். ஒளிப்பதிவாளர்- இயக்குநர் ராஜீவ் ரவியுடன் எனக்குத் தொடர்பு உண்டு. அவர் எனக்குப் பல தொழில்நுட்ப ஆலோசனைகளை அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவர் எடுத்த படங்கள் எடிட் செய்யப்படும்போது என்னை அழைத்துச் சென்று அவற்றைக் கவனமாகப் பார்க்கச் சொல்வார். யூ டியூப்பில் திரைப்படம் எடுப்பது தொடர்பாக உள்ள பலவற்றை அடிக்கடி பார்த்து எனது அறிவை வளர்த்துக் கொள்கிறேன்'' என்கிறார் ஸ்ரீஹரி.
தன்னுடன் பள்ளியில் படிக்கின்ற சக மாணவனுக்கு உதவுவதைப் பற்றி இவர் எடுத்துள்ள குறும்படம் " கோல்டன் ஹேண்ட்ஸ்', கடல் மட்ட உயர்வு, உலக அளவில் வெப்பநிலை உயர்வு ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் " தி சேஞ்ச் - லெட்ஸ் மேக் இட் ஹேப்பன்', பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளைப் பற்றிய "சட்டி' குறும்படம் ஆகியவை எல்லாருடைய பாராட்டுகளையும் பெற்றிக்கின்றன.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் கொச்சி பகுதியில் உள்ள கடல்நீர் மட்டம் அதிகமாகி, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததைப் பார்த்ததும் அது தொடர்பாக ஒரு குறும்படம் எடுக்க ஸ்ரீஹரி திட்டமிட்டார். அப்படி உருவான குறும்படம்தான் " தி சேஞ்ச் - லெட்ஸ் மேக் இட் ஹேப்பன்'.
குறும்படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரி, தற்போது 60 நிமிடங்கள் ஓடக் கூடிய முழுநீளப் படம் ஒன்றை எடுத்து இருக்கிறார். நமது வாழ்க்கையில் மண்டிக்கிடக்கும் சாதி, மத, இன அரசியல் பற்றிய படம் இது. 15 பேர் நடித்து இருக்கக் கூடிய இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.25 ஆயிரத்துக்கும் குறைவு. இந்தத் திரைப்படத்தை நடக்கவிருக்கிற திரைப்பட விழாக்களில் திரையிட வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். இதற்கு அவருடைய தந்தை ராஜேஷ் ராமகிருஷ்ணனும், தாய் கவிதா ராஜேஷும் உதவியாக இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...