ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆன்லைன் வணிகம்: மாறுங்கள்... தகுதியானவர்களாக!

ஆன்லைனில் பொருள்களை வாங்குவது இப்போது அதிகரித்து உள்ளது. அதிலும் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தே எல்லாப் பொருள்களையும்

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 12:30 am

ந. ஜீவா

ஆன்லைனில் பொருள்களை வாங்குவது இப்போது அதிகரித்து உள்ளது. அதிலும் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தே எல்லாப் பொருள்களையும் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. அமேஸான் போன்ற உலக அளவில் ஆன்லைன் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மிக அழுத்தமாக, ஆழமாக, பரவலாக தம் வேர்களை நம்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஊன்றிவிட்டன.

"மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் ஆன்லைன் வணிகம் செய்ய முடியுமா? நாம் செய்ய முடியாதா?' என்ற கேள்வி திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சையைச் சேர்ந்த பழனிராஜன் என்ற இளைஞருக்குள் எழுந்திருக்கிறது. அதன் விளைவாக தோன்றியதுதான் அவருடைய ரூரல்பாஸ்கெட், ரூரல்ஷாப்.காம் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள்.

என்றாலும், இந்த ஆன்லைன் வணிக நிறுவனங்களைத் தொடங்கி நடத்த அவர், ஏற்கெனவே தன்னை அதற்குத் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது அவரிடம் பேசியபோது தெரிந்தது.

ஆன்லைன் வணிக நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்பும் இளைஞர்கள் அவருடைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருப்பதால், அது தொடர்பாக பழனிராஜனிடம் கேட்டோம்.

""வசதி அதிகம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2012 இல் பிஇ (இஇஇ) படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தேன். பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் வேலை செய்தபோது, நிறைய வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. புதிய மனிதர்களின் தொடர்புகள் நிறையக் கிடைத்தன.

எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்றதும், நான் பெங்களூருவிலிருந்து ஊருக்குப் போகும்போதெல்லாம் "திருநெல்வேலி அல்வா' வாங்கித் தரச் சொல்லி வாடிக்கையாளர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய நண்பர்களுக்கு, அவர்கள் வேலை செய்யும் நிறுவன மேலதிகாரிகளுக்கு என நிறைய அல்வாவை திருநெல்வேலியில் இருந்து சுமந்து வந்து நான் அவர்களிடம் கொடுக்க வேண்டியிருந்தது.

அல்வா தவிர, மசாலாப் பொருள்கள், பிற தின்பண்டங்கள், ஸ்நாக்ஸ் என்று வாங்கித் தந்து கொண்டிருந்தேன். தின்பண்டங்கள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை வாங்கித் தரும்போதுதான் அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தொடர்புகள் எனக்கு நிறைய கிடைத்தன. மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் தின்பண்டங்களைத் தயாரித்துவிட்டு, அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு உதளம் விதமாக அவர்கள் தயாரிக்கும் பொருள்களை வாங்கி நிறையப் பேருக்கு விற்பனை செய்து வந்தேன்.

ஒருபுறம் வேலையைப் பார்த்துக் கொண்டு, கூடுதலாக இந்தப் பொருள்களை வாங்கி தரும் வேலையையும் "பகுதி நேர' வேலையாக இதைச் செய்து வந்தேன்.
அப்போதுதான் ஃபிலிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்யும்முறையில் வேகமாகத் தடம் பதிக்கத் தொடங்கியிருந்தன. அதைப் பார்த்த எனக்கு நாமும் ஏன் அதைப் போல ஆன்லைன் மூலம் விற்பனை செய்யக் கூடாது என்று தோன்றியது.

2016 - ஆம் ஆண்டு "ரங்கோலி டாட்காம்' என்ற ஓர் இணையதளத்தை இதற்காகத் தொடங்கினேன்.

பகுதி நேர வேலையாகச் செய்து கொண்டிருந்தது சூடு பிடிக்கத் தொடங்கியதும், பெங்களூருவில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை 2017- இல் விட்டுவிட்டேன். திருநெல்வேலிக்கு வந்து முழுநேரமாக ஆன்லைன் வணிகத்தில் இறங்கினேன்.

நிறைய ஆர்டர்கள் வந்து குவிந்தன. பெங்களூருவில் இருந்து மட்டுமல்ல, பல வெளியூர்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்தன. இதனால் 9 கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருள்களை கூரியர் மூலமாக அனுப்பி வைத்தேன்.

வெறும் அல்வா, தின்பண்டங்கள், மசாலாப் பொருள்கள் என்ற எல்லைக்குள் சுழன்று கொண்டிருந்த என் வணிகத்தை விரிள படுத்தினேன். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களைத் தவிர, விவசாயிகளிடம் இருந்து அவர்கள் விளைவிக்கும் பொருள்களை வாங்கி, தூய்மையாக்கி, நல்ல முறையில் பேக் செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன். காய்கள், பழங்கள் போன்ற அழுகும் பொருள்களைத் தவிர, பிற பொருள்களை விற்கத்
தொடங்கினேன்.

"ரூரல் ஷாப்டாட்காம்' மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்கிறேன். "ரூரல் பாஸ்கெட்' மூலமாக விவசாயிகளிடம் இருந்து பொருள்களை வாங்கி விற்கிறேன்.

மளிகைப் பொருள்கள், பாரம்பரிய அரிசி வகைகள், நவதானியங்கள், பருப்பு என ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படாத இயற்கைமுறையில் விளைவித்த பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறேன். செக்கு எண்ணெய்களையும் விற்பனை செய்கிறேன், ஒவ்வோர் ஊரிலும் ஏதாவது சிறப்பான, தரமான பொருள்களைத் தயாரிப்பார்கள். உதாரணமாக பத்தமடையில் செய்யப்படும் பாய்களைச் சொல்லலாம்.

பத்தமடை பாய் வேண்டும் என்று யாராவது ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அவர்கள் வீட்டில் பத்தமடை பாய் போய்ச் சேர்ந்துவிடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் பெயர் பெற்ற வண்ணம் தீட்டப்பட்ட சிப்பிகளை வாங்கி விற்பனை செய்கிறோம்.

கரோனா பாதிப்பு ஏற்பட்டதில் ஆன்லைன் வணிகம் அதிகமானது உண்மை. அதேசமயம் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்க அச்சப்பட்ட மக்களும் அதிகம். "யார் யார் தொட்டு இந்தப் பொருள் நம் வீட்டுக்கு வந்திருக்கிறதோ' என்று பயந்தவர்களும் அதிகம்.

Story image

அப்போதுதான் சிறிய அளவில் கடைகளைத் திறக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. திருநெல்வேலி, சென்னை, தர்மபுரி ஆகிய நகரங்களில் சிறிய கடைகளைத் திறந்தேன். ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கூரியர் மூலமாக பொருள்களைப் பெறத் தயங்கியவர்கள் இந்தக் கடைகளில் வந்து நேரடியாக பொருள்களை வாங்கிக் கொண்டார்கள்.

நான் விற்பதைப் போன்ற ஆர்கானிக் பொருள்களை விற்கும் கடைகள் எல்லா ஊர்களிலும் உள்ளன. அந்த கடைக்காரர்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களுடைய பொருள்களை எங்களுடைய ஆன்லைன் தளத்தின் மூலமாக விற்பனை செய்யளம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

என்னுடைய இந்த ஆன்லைன் வணிகத்தின் மூலமாக விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். விவசாயிகளின் விளை பொருட்கள், பெரிய மண்டிகள், புரோக்கர்கள், மொத்த வியாபாரிகள், சிறுவணிகர்கள் மூலமாக என பல கைகள் மாறி மக்களைச் சென்றடையும்போது, பலரும் அவர்களுக்குத் தேவையான லாபத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதனால் மக்களுக்கு பொருள்களின் விலை அதிகமாகிவிடும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கான விலையோ மிகளம் குறைவாக இருக்கும். இந்நிலையை மாற்ற விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி மக்களுக்கு விற்கும் எங்கள் ஆன்லைன் வணிகம் உதவியிருக்கிறது.

இத்துறையில் இறங்கி செயல்பட நினைக்கும் இளைஞர்கள் முதலில் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் துறை சார்ந்த நிறுவனங்களில் சில ஆண்டுகளாவது வேலை செய்து தொழில்நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து எந்த பொருள்களை ஆன்லைன் வணிகம் செய்ய நினைக்கிறார்களோ,அந்தப் பொருள்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பொருள்களைத் தயாரிப்பவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு எது தேவை என்பதை நன்கு ஆராய்ந்து அவற்றைத் தரமாகளம், விலை மலிவாகளம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை இலக்காகக் கொண்டு எப்போதும் செயல்பட வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.