பணியிடமாக மாறிய வீடு!

நாட்டின் வளர்ச்சியில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பணியிடமாக மாறிய வீடு!


நாட்டின் வளர்ச்சியில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முக்கியமாக, சேவைத்துறை நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான நபர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றன. தகவல் - தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பணியில் இணைவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
பணியாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் ஆகியவை அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு கரோனா தொற்று பரவலுக்கு முன்பே காணப்பட்டாலும் கூட, அது மிகவும் அவசர காலத்தில் மட்டுமே நிறுவனங்களால் வழங்கப்பட்டது.
தற்போது பணியிடங்கள் தலைகீழாக மாறியுள்ளன. கரோனா தொற்று பரவல் அதைச் சாத்தியமாக்கியுள்ளது. தகவல் - தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களின் வீடுகளே தற்போது பணியிடங்களாக மாறியுள்ளன. கரோனா தொற்றின் முதல் அலை பரவியபோது ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தன.
பெரும்பாலான நிறுவனங்கள், பணியாளர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்கத் தயாரான சூழலில், கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியது. அதில் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்ததால், பணியாளர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி, பணியாளர்கள் பலரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 66 சதவீதப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றுவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சில ஐடி நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவீதப் பணியாளர்களை நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்றும்படி செய்ய முடிவெடுத்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வசதியை வழங்க முடிவெடுத்துள்ளன. மற்ற நிறுவனங்களும் இதேபோன்று பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து பணியாற்றும் வசதியை ஊக்குவிப்பதன் மூலமாக நிறுவனங்களுக்குப் பல்வேறு பயன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பணியாளர்களுக்கென மிகப் பெரிய அலுவலகத்தை அமைக்க வேண்டிய அவசியம் நிறுவனங்களுக்குக் குறைந்துவிடும். பணியாளர்களுக்குத் தேவையான உணவகவசதி, நிறுவனம் செயல்படுவதற்கான கணினி, இயந்திரங்கள் இயங்கத் தேவையான மின்சாரப் பயன்பாடு, அலுவலகம் இயங்கத் தேவையான இட வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இதனால் இல்லாமல்போய்விடும்.
வீட்டில் இருந்தே பணியாற்றுவதன் மூலமாக பணியாளர்களின் பணித்திறனும் பெருமளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பணிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே பணியாளர்கள் முடித்துவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, கலப்புவகை பணியிடங்களை நிறுவனங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சில பணியாளர்களை மட்டும் அலுவலகத்துக்கு வரவழைத்து, மற்றவர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்கலாம்.
பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். எந்தவித இடையூறுமின்றி வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு ஏற்ற சூழலை பணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மிகவும் முக்கிய பணியாளர்களைத் தவிர, மற்றவர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்கலாம். அதே வேளையில், அவர்களது பணித்திறனை முறையாகக் கண்காணிக்க வேண்டியதும் அவசியமாகும்.
மேலும் இந்தப் புதிய நடைமுறையால் வாடிக்கையாளர்களின் சேவையில் எந்த
விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.
வீட்டில் இருந்து பணிபுரியும் சூழல் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற தயார்நிலையை நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். வீட்டில் இருந்தே பணியாற்ற இளைஞர்களும் தயாராகிக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com