கரோனா: மாறுதல்கள்... கல்வித்துறையில்!

கல்வித்துறையிலும் கரோனா தொற்றுநோய் மிக  பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. வழக்கமாக உயர் கல்வி பயில விரும்புவோர் இந்த காலகட்டத்தில்தான் நுழைவுத் தேர்வுகளை எழுதுவர்.
கரோனா: மாறுதல்கள்... கல்வித்துறையில்!

கல்வித்துறையிலும் கரோனா தொற்றுநோய் மிக பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. வழக்கமாக உயர் கல்வி பயில விரும்புவோர் இந்த காலகட்டத்தில்தான் நுழைவுத் தேர்வுகளை எழுதுவர். ஆனால், இப்போது இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலோ அல்லது வெளிநாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலோ படிப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதில் பெரும் சிரமம் நிலவிவருகிறது.

தற்போது ஆரம்ப கல்வி நிலையங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மூடப்பட்டுள்ளன. சில கல்வி நிறுவனங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வி ஆண்டை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தெரியாமல் பல கல்வி நிறுவனங்களும், கல்வியாளர்களும்பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உடனடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலைக்கு கல்வி நிலையங்கள் தள்ளப்பட்டு விட்டன. இந்த நோய்த்தொற்று காரணமாக இந்திய அளவில் கல்வி நிலையங்கள் செயல்படாத காரணத்தால் சுமார் 32 கோடி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் தொற்று நோய் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள புதிய சவால்களைச் சமாளிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முயன்று வருகின்றன. நீண்ட கால தாக்கம் இருந்தால் அதை சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக இத்தகைய தாக்கத்திலும் உயர்கல்வியை எவ்வாறு மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்ற ஆய்வில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இணைய வழிக் கல்வி: இன்று அனைவருக்கும் பொதுவான ஒரு வழிமுறையாக இணைய வழி கல்வி மாறிவிட்டது. மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது அவசியமான, அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மிக வலுவான இணையவழி தளங்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஆன்லைன் மேம்பாடு மிக அவசியமாகி வருகிறது. இருப்பினும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எல்லா மாணவர்களும் ஒரே பொருளாதாரப் பின்னணியில் இல்லாமல் இருப்பதால், அனைவருக்கும் இணையவழிக் கல்வி கிடைப்பது என்பது சிரமமான ஒன்றுதான். இருப்பினும் அதற்கானமுயற்சிகளில் அரசுகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இது எளிதான விஷயம் அல்லஎன்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் நீண்டகாலத் திட்டமாக இதை செயல்படுத்தினால் மாணவர்கள் உயர்கல்வி கற்க எளிதான சூழல் உருவாகும். அதுபோல அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே மாதிரியான கற்றல்சூழலைக் கொண்டிருப்பதில்லை. எனவே, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இணைய வழிக் கற்றலை மேற்கொள்ள ஏதுவாக கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இணையவழியில் கற்பித்தலுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை வடிவமைத்து அது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் உயர்கல்வி: லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் தங்களின் உயர் கல்வியை வெளிநாடுகளில் கற்க ஆர்வம் காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளில் சென்று கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்த அளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இதில் உள்ளது.
இந்த சமயத்தில் கரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், இந்திய மாணவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கலாம். இதன் மூலம் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் இந்தியாவிலேயே கல்வி கற்க வேண்டிய நிலையும் உருவாகலாம். எனவே, இந்த தருணத்தில் சர்வதேச தரத்திலான கல்வியை இந்தியாவில் வழங்கினால் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை இந்தியாவிலேயே கற்கும் சூழல் உருவாகும். இதனால் உலக நாடுகளில் கல்வி கற்பதற்காக செலவழிக்கப்படும் பணம் மிச்சமாகும்.
உலகப் பொருளாதாரம்: கரோனா தொற்றின் காரணமாக, பெரும்பாலான வீடுகளில் நிதி ஒரு பெரும் பிரச்னையாக உருவாகி இருக்கிறது. உயர்கல்விக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது இந்த காலகட்டத்தில் பலரால் இயலாமல் போகக் கூடும். எனவே, குறைக்கப்பட்ட கல்விக் கட்டணங்களுடன் கூடிய கல்வித் திட்டத்தை உருவாக்குவது அவசியம்.
கற்றல் கற்பித்தலில் புதிய முறைகளைப்புகுத்துதல்: இந்தியாவில் உள்ள மிகப்பெரும் கல்வி நிறுவனங்கள் உயர்தரக் கல்வியை வழங்கி வருகின்றன என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே சமயம் தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் கூட கல்வி முறையில் புதிய மாற்றங்கள்அவசியம் என்ற கோரிக்கை எழத்தான் செய்தது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் புதிய கல்வி முறைக்கு மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
"டிஜிட்டல் முறையில் கற்றல் என்பது இனி தவிர்க்க முடியாததாக மாறிவிடும். எனவே, தொற்று நோய்க்கு பிந்தைய காலங்களிலும் கூட இதுவே கற்றல், கற்பித்தலில் பிரதான இடம் வகிக்கும்' என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே, பாரம்பரிய கல்வி முறைகளில் இருந்து புதிய தொழில்நுட்பம் சார்ந்ததாகக் கல்வி முறையை மாற்ற வேண்டியது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com