ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய அரசு பணிகள் பெற... மாற்றங்கள் அவசியம்!

கல்வியில் பல்வேறு சிறப்பு நிலைகளைப் பெற்றிருந்தாலும் மத்திய அரசு வேலைகளைப் பெறுவதில் இன்றையத் தமிழகம் மிக மிகப் பின்தங்கிய  நிலையிலேயே உள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2021, 12:30 am

வி.குமாரமுருகன்

கல்வியில் பல்வேறு சிறப்பு நிலைகளைப் பெற்றிருந்தாலும் மத்திய அரசு வேலைகளைப் பெறுவதில் இன்றையத் தமிழகம் மிக மிகப்பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

இந்தநிலையில் மாற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்? என்று ஓய்வு பெற்ற பாராளுமன்ற செயலக தொலைத் தொடர்பு இயக்குநரும்,  போட்டித்தேர்வுகளுக்காக பல புத்தகங்களை எழுதி இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருபவருமான தென்காசி என்.எம்.பெருமாளிடம் கேட்டோம். அவர் கூறியதிலிருந்து...

""1980- க்குப் பிறகு தமிழகத்தில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் மாணவர்கள் தமிழகத்தில் உயர்கல்வியைப் பெறுகிறார்கள்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இருப்பது இந்தி ஆகும். துணை ஆட்சி மொழியாக இருப்பது ஆங்கிலம் ஆகும். இந்த இரு மொழிகளில் ஒன்றிலாவது சிறந்த புலமை இருந்தால்தான் மத்திய அரசு வேலைகளை நிறைந்த அளவில் பெறமுடியும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை இருப்பதால் ஆங்கிலப் புலமை திறம்பட வளர்க்கப்பட வேண்டும்.

ஐ.ஏ.எஸ் தேர்வையே தமிழில் எழுத வாய்ப்பு இருக்கிறதே... நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று ஒரு சிலர் நினைக்கலாம் . மத்திய அரசின் கீழ் அறுபதுக்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் - துறைகள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டு தோறும் 50,000 முதல் ஒரு லட்சம் பதவிகளுக்கு பணியாளர்கள் தேவைப்
படுகின்றனர். ஐ.ஏ.எஸ்.ஸில் ஆண்டு தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் பதவிகள் அளவில் மட்டுமே வருகின்றன. ஐ.ஏ.எஸ் தேர்விலும் கண்டிப்பாக ஓர் ஆங்கிலத் தாளில் தேர்வு பெற்றுத்தான் தீர வேண்டும். 95 சதவீதம் மத்திய அரசு தேர்வுகளை தமிழில் எழுத முடியாது.

கிட்டத்தட்ட 90 சதவீதம் மத்திய அரசு தேர்வுகளில் ஆங்கிலம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதுவும் கீழ்நிலைத் தேர்வுகளில் கண்டிப்பாக ஆங்கிலம் ஒரு பகுதியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு உதவியாளர் எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்கள். அதில் புத்திக்கூர்மை 40, ஆங்கிலம் 30, கணிதம் 30 மதிப்பெண்கள் ஆகும். கடலோரப்படையில் நவிக் (பொது வேலை) என்ற பதவிக்கு அடிப்படைத் தகுதி பிளஸ்-2 (அறிவியல், கணிதத்துடன்) மட்டுமே. 60 மதிப்பெண்கள் கொண்ட இந்த எழுத்துத் தேர்வில் கணிதம் 20, அறிவியல் 10, ஆங்கிலம் 15, புத்திக்கூர்மை 10 மற்றும் பொது அறிவு 5 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

இப்படி மத்திய அரசு சார்ந்த தேர்வுகளில் ஆங்கிலம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கும்போது தமிழ்நாடு அரசு சார்ந்த தேர்வாணையங்களில் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்றவை நடத்தும் தேர்வுகளில் கிட்டத்தட்ட ஆங்கிலத்துக்கு இடமே கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில்தான் தமிழகத்தில் அதிகமான அளவில் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். இதில் 1990- களின் ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாகக் கிடையாது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஓரிரு தேர்வுகளைத் தவிர வேறு எந்தத் தேர்விலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாகவோ தகுதிநிலைப் பாடமாகவோ கிடையாது.

தமிழக அரசு சார்ந்த தேர்வாணையங்களில் என்று ஆங்கிலம் ஒரு கட்டாயப்
பாடப்பகுதியாகவோ அல்லது தகுதிப்பாடப் பகுதியாகவோ மாற்றப்படுகிறதோ அன்றுதான் தமிழக இளைஞர்கள் மத்திய அரசின் கணக்கற்ற பல்துறை வேலைகளில் அடியெடுத்து வைக்க முடியும்.

பல்லாயிரக் கணக்கான தமிழக இளைஞர்கள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியில் படிப்பு போன்ற உயர்நிலைப் படிப்புகளைப் படித்து குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு நிலையில் உள்ள மத்திய அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற வழி வகுத்துக் கொடுத்தால் அதை விட சிறந்த சேவை வேறொன்றுமில்லை.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வி.ஏ.ஓ., காவலர் போன்ற தேர்வுகளுக்குக் குறைந்தபட்ச தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. இருந்த போதிலும் பொறியியல் பட்டதாரிகள் கணிசமான அளவில் இவ்வேலைகளில் சேருகிறார்கள். இவர்களைக் குறைந்தது பட்டப்படிப்பு தகுதி வேலைகளில் சேரும் அளவுக்கு இவர்களது தகுதியை வளர்க்க முயல வேண்டும்.

மத்திய அரசில் மேல்நிலைப்பட்டப்படிப்பு ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 150 மதிப்பெண்கள் உண்டு. 150 கேள்விகளும் உண்டு. பொது ஆங்கிலம் 10, இந்தி 10,பொது அறிவு 10,புத்திக்கூர்மை 10,கணினி இயல் 10, கற்பிக்கும் திறன் 20, குறிப்பிட்ட பாடம் 80 மதிப்பெண்கள் ஆகும். இதே நேரத்தில் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தேர்வில் பொது அறிவு 10, கற்பிக்கும் திறன் 30, குறிப்பிட்ட பாடம் 110 என்ற முறையில் 150 மதிப்பெண்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி (இந்திக்குப் பதில் தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும்), புத்திக்கூர்மை, கணினி இயல் இந்த நான்கு பாடப்பகுதிகளும் தமிழக மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் கிடையாது.

பெரும்பான்மையான மத்திய அரசு தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், பொது அறிவு (நடப்பு நிகழ்வுகள் உட்பட), புத்திக்கூர்மை ஆகிய நான்கு பகுதிகளும் இருப்பதால் இந்நான்கு பகுதிகளுக்கும் சம அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகத் தேர்வுகள் அமைய வேண்டும். குறிப்பிட்ட பாடம் அல்லது துறை சார்ந்த தேர்வுகளும் மத்திய அரசு தேர்வுகளை ஒட்டி அமைய வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இல்லாவிட்டாலும் ஒரு தகுதிப் பாடமாக மட்டுமாவது அமைய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வு பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு மத்திய அரசு தேர்வுகளைப் பற்றிய விரிவான தகவல்களை அளிக்க வேண்டும்.

முப்படைகளிலும் தளபதி ஆவதற்கு பிளஸ்-2 நிலையில் நடத்தப்படும் தேர்வே போதுமானது. இத்தேர்வில் கட்ஆப் மதிப்பெண்கள் மிகவும் குறைவு. 900 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வும், 900 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வும் கொண்ட இத்தேர்வில் தமிழக இளைஞர்களின் பெயர்களைக் காண்பது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நாலைந்து பள்ளிகள் இணைந்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது போல சஈஅ தேர்வுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். உடற்கட்டு வாய்ந்த 16 வயது நிரம்பிய ஆண்கள் பிளஸ்-2 தகுதியுடன் இத்தேர்வை எதிர்கொள்ளலாம். பிளஸ்-2 எழுதப்போகும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் முப்படைகளிலும் பலவித காவல்படைகளிலும் 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு தகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பதவிகள் நிரப்பப்படுகின்றன.

முதல் முறையாக தொழில்துறை சாராத மத்திய அரசு பொது வேலைகளுக்குண்டான தேர்வு வரும் செப்டம்பர் மாதத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் பிளஸ்-2, பட்டப்படிப்பு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வினை மாணவர்கள் எழுத எல்லா கல்வி நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 50 சதவீதம் மாணவர்கள்தான் உயர்கல்வி நிலையங்களுக்குச் செல்கிறார்கள். மீதமுள்ளவர்களில் பத்து சதவீத மாணவர்கள் சுருக்கெழுத்து பயின்றால் அவர்களில் அதிகம் பேர் சுருக்கெழுத்தாளராக நிறைந்த வாய்ப்புகள் உள்ளன.

இத்தகைய விஷயங்களில் இளைஞர்களும் அரசும் கவனம் செலுத்தினால் மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்கள் பிரகாசிக்க முடியும்'' என்றார் என்.எம்.பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.