முந்தி இருப்பச் செயல் - 49: தன் மேலாண்மைத் திறன் - 9
வணக்கத்திற்குரிய தலாய் லாமா ஒரு முறை ஹானலூலூ நகருக்கு வருகை புரிந்தார்.


வணக்கத்திற்குரிய தலாய் லாமா ஒரு முறை ஹானலூலூ நகருக்கு வருகை புரிந்தார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த நானும், என்னுடைய மனைவியும் அவர் உரையாற்றிய நிகழ்வு ஒன்றில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டோம். என்னுடன் அரசியல் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டத்துக்காகப் பயின்றுகொண்டிருந்த சில அமெரிக்க வகுப்புத் தோழர்களும் உடன் வந்திருந்தனர்.
தலாய் லாமா தனது உரை முழுக்க மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசிய ஒரே ஒரு கருத்து: கருணை என்பதுதான். "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' எனும் ஒப்பற்ற அருள் முழக்கத்தால், கடவுள் என்பதே கருணையுணர்வுதான் என்ற பேருண்மையை வழங்கிச் சென்றிருக்கும் வள்ளலார் பெருமானை வணங்கி மகிழும் எனக்கும், என் மனைவிக்கும் அவரின் உரை அத்தனை ஆழமானதாக அமைந்திருந்தது.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வருந்திய வள்ளலார், வாடிய குதிரை ஒன்றிடம் வருத்தம் தெரிவித்த நிகழ்வு ஒன்றுண்டு.
ஒருமுறை வள்ளலார் பெருமானைச் சந்திப்பதற்கென ஒரு செல்வந்தர் தனது குதிரை வண்டியில் வந்திறங்கினார். பெருமானை விரைவாகச் சந்திக்க வேண்டுமென்பதற்காக, தான் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்தை அவர் விவரித்தார். தன்னுடைய ஊரிலிருந்து வள்ளலார் இருந்த ஊருக்கு குதிரை வண்டியில் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகுமென்றும், அடிகளாரைச் சந்திக்கும் ஆர்வப்பெருக்கால் வண்டிக்காரரிடம் சொல்லி, குதிரையைச் சாட்டையால் அடித்து விரைந்து செலுத்தி, தான் ஒரே மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டதாகவுமெல்லாம் விவரித்து செல்வந்தர் புளகாங்கிதம் அடைந்தார்.
விரைந்து சந்திக்க வேகமாக வந்த செல்வந்தரை அப்படியே விட்டுவிட்டு, "விருட்'டென்று எழுந்து குதிரையிடம் சென்ற வள்ளலார், அதனைக் கட்டித்தழுவி, தடவிக் கொடுத்தவாறே, "என்னால் நீ அடிபட்டிருக்கிறாயே' என்று கண்கலங்கினாராம்.
கருணை என்பது வாடிய பயிரிடமும், வாயில்லாச் சீவனிடமும் காட்டும் இரக்கம் மட்டுமல்ல; அது ஓர் அரசியல் மார்க்கமும்கூட என்றறிந்தவர் வள்ளலார். அதனால்தான் "கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக! அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!' என்றார்.
கொல்லாமை, புலால் மறுத்தல் பற்றியெல்லாம் பாடுகிறது நம் தமிழர் வேதம். "நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்று அஃறிணைப் பொருட்களிடமும் அன்பு காட்டுகிறவர்கள் தமிழர்கள். கவியரசு கண்ணதாசனும் இப்படித்தான் பாடியிருக்கிறார்:
ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்.
இந்த இரக்கமிகு தமிழ்ப் பின்புலம் கொண்ட எனக்கும், என் மனைவிக்கும் தலாய் லாமாவின் கருத்து எளிதில் புரிந்தது. உண்மையில் கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர் அந்த உரையை பக்தியுடனும், மரியாதையுடனும் உள்வாங்கி நின்றனர்.
ஆனால், என்னுடைய அதிபுத்திசாலி வகுப்புத் தோழர்கள் அந்த உரையை கிண்டலும், கேலியுமாகவே எதிர்கொண்டனர். ""கருணையின் தத்துவார்த்த பின்புலம் என்ன? கருணை என்பதை எப்படி ஒரு கோட்பாடாக மாற்ற முடியும்? இப்படியான பல்வேறு கேள்விகளோடு, அந்த உரையில் அரசியல் அறிவியல் அடித்தளம் அறவே இல்லை'' என்று அறிவுஜீவித்தனமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், 1915-ஆம் ஆண்டு வாக்கில் மனிதப் பண்பாட்டின் குறைபாடுகள் குறித்து வெறுமனே விமர்சனம் செய்தால் மட்டும் போதாது; நேர்மறையாகக் கடமையாற்ற வேண்டும் என்றெண்ணிய பிரான்சு நாட்டு மருத்துவர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் (1875-1965) "வாழ்வினை வணங்குவோம்'
(ரெவரென்ஸ் ஃபார் லைஃப்) எனும் முழக்கத்தை முன்வைத்து இயங்கினார். இந்தக் கொள்கையோடு ஆப்பிரிக்காவில் மருத்துவச் சேவையாற்றிய அவருக்கு 1952-ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஸ்வைட்சரின் கொள்கை நம்முடைய பாரதியாரின் (1882-1921) ஃபார்முலாவேதான்:
"உயிர்களிடத்தில் அன்பு வேணும்!'
கோட்பாடுகள், தேற்றங்கள் என்றெல்லாம் அறிவுபூர்வமாகப் பேசி, நாம் அனைவருமாகச் சேர்ந்து கட்டமைத்து வைத்திருக்கும் சமூக - பொருளாதார-அரசியல் ஏற்பாடுகள் நம்மை மண்ணை விட்டு, மாந்தநேயத்தை விட்டு, உயிர்நேயத்தை விட்டு விலக்கி வைத்திருக்கின்றன. பயிர்களையும், உயிர்களையும் போற்றிப் பாதுகாத்து வளர்க்கத் தவறி, இன்று நோய்த்தொற்று, தடுப்பூசி, படுக்கை, பிராண வாயு என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். விதைப்பதைத் தானே அறுக்க முடியும்?
உயிர்களிடத்தில் அன்பு பாராட்டுவதற்கு ஈரமான இதயமும், குளிர்ந்த மனமும், கனிந்த அறிவும் மட்டும் இருந்தால் போதும். இன்னோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், நாம் பெற்றுள்ள அறிவினால் என்ன பயன் என்று கேட்கிறார் வள்ளுவர்:
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
""உங்கள் தலைக்கும் இதயத்துக்கும் இடையே ஓர் இழுபறி ஏற்பட்டால், உங்கள் இதயம் சொல்வதையே கேளுங்கள்'' என்கிறார் சுவாமி விவேகானந்தர். காரண காரியங்களைப் பார்க்கும் தலையை விட, கருணையோடு இயங்கும் இதயமே மேலானது.
சில ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்திலுள்ள மான்மத் பல்கலைக்கழக உணவு விடுதியில் நண்பர்களோடு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த வேளையில், அங்கே உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஓர் அமெரிக்க இளைஞன், திடீரென வெட்டிப் போட்ட மரம் மாதிரி தடாலென கீழே விழுந்தான். கைகால்கள் இழுத்துக் கொண்டிருந்தன. செய்வதறியாது அனைவரும் திகைத்து நிற்க, நான் ஓடிச் சென்று அவனைப் புரட்டி, பக்கவாட்டில் படுக்க வைத்து, அவனது வாய்க்குள் கொஞ்சம் திசுக் காகிதங்களைத் திணித்து, வாயைத் துடைத்து விட்டேன்.
என்னுடைய அமெரிக்கத் தோழர்கள் சிலர் நான் செய்தது மிகவும் ஆபத்தான செயல் என்றும், அந்த இளைஞனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், என் மீது வழக்குத் தொடுக்கப்படலாம், நான் பெருத்த இழப்பீடு கொடுக்க வேண்டி வரலாம் என்றும் எச்சரித்தார்கள். ஆனால் எனக்கு உயிர்நேயம் போற்றும் திறனும், உயிர்காக்கும் திறனும் எப்படி குற்றச் செயல்களாக முடியும் என்பது விளங்கவே இல்லை.
கருணையை அடிப்படையாகக் கொண்டியங்கும் மேற்படித் திறன்களை உங்கள் கல்வியில் சேர்க்கத் தவறிய குற்றத்தை என்னுடைய தலைமுறை செய்திருக்கிறது. ஆறுகளில், குளங்களில், கடலில் விழுகிறவர்களைக் காப்பாற்றப் போய் ஒருவர் உயிரிழக்கும்போது, மனம் உடைந்து போகிறது. மாரடைப்பால் அவதியுறும் ஒருவரை மீட்டெடுக்க முடியாமல் அருகிருப்போர் கையறு நிலையில் கைகளைப் பிசைந்து நிற்கும்போது, உள்ளம் துவண்டு போகிறது. நீச்சல் பயிற்சி, முதலுதவிக் கல்வி, உயிர்காக்கும் திறன் போன்ற பாடங்கள் இல்லாத பயனற்றப் படிப்பை உங்கள்மீது திணித்திருக்கிறோம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவவில்லை.
கடந்த 2014 , செப்டம்பர் மாதம் தில்லி உயிரியல் பூங்காவில் அமைந்திருந்த ஒரு புலி வளையத்துக்குள் ஓர் இளைஞன் தவறி விழுந்துவிட்டான். மேலே ஏறி வரவும் முடியாமல், உள்ளே எங்கும் ஓடித் தப்பிக்கவும் இயலாமல், அங்கிருந்த புலியை நோக்கி கைகுவித்துக் கும்பிட்டவாறே நடுங்கிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். பரிதவித்த அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்று பார்வையாளர்களில் யாருக்கும் நம் கல்வி முறை கற்றுத் தந்திருக்கவில்லை.
பார்வையாளர்கள் பள்ளத்துக்குள் நின்றிருந்த அந்தப் புலியின் மீது கல்லெறிந்தார்கள். அதுகாறும் வாளாவிருந்த புலியோ கோபம் கொண்டு, பார்வையாளர்களைப் பார்த்து உறுமியது. பார்வையாளர்கள் விடாமல் கல்லெறிந்து, கூச்சலிட்டார்கள். பொறுமையிழந்த புலியோ அந்த இளைஞனின் கழுத்தைக் கவ்விப்பிடித்து, தன் இடம் நோக்கி தரதரவென்று இழுத்துச் சென்றது.
அந்த இளைஞனிடம் புலியின் கண்களில் கொஞ்சம் மண்ணைத் தூவச் சொல்லியிருந்தால், அது அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கும். விலங்குகள் கூச்சல் குழப்பத்தால் மிரளும் என்பதும், கல்லால் அடித்தால் கோபம் கொள்ளும் என்பதும், ஆனால் நெருப்பைக் கண்டால் அஞ்சி விலகியோடும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அங்கே கூடியிருந்த பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பைப் பற்ற வைத்து, அதை அந்த இளைஞனிடம் எறிந்திருந்தால், புலி மிரண்டு ஓடிப்போயிருக்கும். இரண்டு உயிர்களுமே எந்தவிதமான துன்பமுமின்றி பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
கோட்பாடுகளும், தேற்றங்களும் கிடக்கட்டும்; கல்வியிலும், வேலையிலும், வாழ்விலும் கருணையை வளர்த்தெடுங்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...