அர்ப்பணிப்பு... விடாமுயற்சி... சாதனை!
படித்தவர்கள் தாங்கள் படித்த துறைகளில் சாதனைகளை நிகழ்த்துவது வழக்கமான ஒன்று.


படித்தவர்கள் தாங்கள் படித்த துறைகளில் சாதனைகளை நிகழ்த்துவது வழக்கமான ஒன்று.
படிக்காத பல இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் தங்கள் வாழ்க்கைப் பாதையை தேர்வு செய்ய முடியாமல் வாழ்க்கையை வீண் அடித்து வரும் நிலையும் உலகம் முழுவதும் நடந்தேறி வருகிறது.
அத்தகைய நிலையில் படிக்காதவர்களும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.
ஹரியாணா மாநிலம் சோனிபேட்டை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் தான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர். மிகப்பெரிய
உயரிய கல்வி பெற்றவர்கள் கூட உரிய முயற்சி இல்லாமல்
தாங்கள் இருக்கும் நிலையிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து விடும் இன்றையச் சூழலில், பத்தாம் வகுப்பை பாதியில் விட்டு வெளியேறிய சதீஷ்குமார், இன்று மிகப் பெரிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து இந்திய அளவில் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
உலகம் முழுவதும் கட்டுமானத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கட்டுமானம் நிகழாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த கட்டுமானத்திற்கு மிக அடிப்படை தேவையான செங்கல் உற்பத்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இப்படி அதிகம் தேவைப்படும் செங்கல் உற்பத்தி என்பது மனிதர்களைக் கொண்டு நடைபெற்று வருவதால் தினமும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செங்கல்களை உற்பத்தி செய்ய முடிகிறது.
சதீஷ்குமாரின் பெற்றோர் இத்துறையில் ஈடுபட்டு வழக்கமான முறையில் செங்கல்களை உற்பத்தி செய்து வந்தனர்.
அப்போது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செங்கல் வேண்டும் என்று கூறி முன்
பணமும் கொடுத்துச் செல்வார்கள்.
தேவையான வேலை ஆள்கள் கிடைக்காததால் குறிப்பிட்ட நாள்களுக்குள் செங்கல்களை உற்பத்தி செய்ய முடியாமல், வாடிக்கையாளர்களுக்கு செங்கல்களை குறிப்பிட்ட நாளில்
விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மனிதர்களால் செய்யப்படும் செங்கல்களின் தரமும் ஒன்றுபோல இல்லாமல் மாறுபட்டு இருந்திருக்கிறது.
இத்துறையிலும் இயந்திரமயமாக்கல் மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்த சதீஷ்குமார், செங்கல்களைத் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதற்காக 2009 -2010ஆம் ஆண்டு வாக்கில் இதற்கான திட்டமிடலை அவர் தொடங்கி, 2014 - ஆம் ஆண்டில் இயந்திரத்தை சதீஷ்குமார் வடிவமைத்தார் . இதற்கு அவரது சகோதரர் விலாஸ் சிகிராவும் உதவியாக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் நான்கு இயந்திரங்களை அவர்கள் இதற்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இயந்திரங்கள் மூலம் செங்கல்களை அவர்
உற்பத்தி செய்தார்.
இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட செங்கல்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். இதனால்
மீண்டும் அவருக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
எனவே தானாக நகர்ந்து கொண்டே செங்கல்களை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரத்தை சதீஷ்குமார் வடிவமைத்து வெற்றி கண்டார்.
""இப்படி உருவாக்கிய இயந்திரம் ஒரு நிமிடத்தில் 300 செங்கல்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன் உடையதாக இருந்தது. சுமார் 120 பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த ஓர் இயந்திரம் செய்ய முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம். இதன் மூலம் உற்பத்தி செலவும் 45% மிச்சம் ஆனது. இந்த
இயந்திரம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பிரபலமடைந்து வருகிறது'' என்கிறார் சதீஷ்குமார்.
இவரின் இந்த திறமையைப் பாராட்டி இந்திய அரசு 2020- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்ஸ்ட்ரக்ஷன் டெவலப்மென்ட் மானிட்டரிங் சர்வீஸஸ் என்ற பிரிவின்கீழ் சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.
மேலும் செங்கல் உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர்
களின் விருப்பத்திற்கு ஏற்ப பலவகையான இயந்திரங்களை
உருவாக்கி அதை சந்தைப்படுத்தியும் வருகிறார் சதீஷ்குமார்.
எத்தனையோ இளைஞர்கள் அரசு தரும் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே என்பதை நிரூபிக்கும் சதீஷ்குமார், நம் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...