தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐபிஎம்...: 2 நேனோ மீட்டர் சிப்!

கணினி, அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) உள்ளிட்டவற்றின் செயல்திறனுக்கு ஆதாரமாக விளங்குவது "சிப்'. தொடக்க காலத்தில் ஒரு மிகப் பெரிய அறையின் அளவுக்கு கணினியின் வடிவம் இருந்தது

News image
Updated On :25 மே 2021, 12:30 am

சுரேந்தர் ரவி

கணினி, அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) உள்ளிட்டவற்றின் செயல்திறனுக்கு ஆதாரமாக விளங்குவது "சிப்'. தொடக்க காலத்தில் ஒரு மிகப் பெரிய அறையின் அளவுக்கு கணினியின் வடிவம் இருந்தது. அதையடுத்து, டிரான்சிஸ்டர், மைக்ரோ பிராஸசர் உள்ளிட்டவற்றின் கண்டுபிடிப்பால் கணினியின் அளவு  குறைந்து கொண்டே வந்தது. 

அலுவலகக் கணினி, மடிக்கணினி (லேப்டாப்) என வளர்ந்து தற்போது கையடக்கக் கணினி (டேப்) வரை வளர்ந்துவிட்டது. 
தற்போதைய சூழலில், ஒரு கணினி செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட்  போன் மூலமே செய்துவிட முடியும். அந்த அளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், தொழில்நுட்பங்கள் இதே நிலையில் நின்றுவிடப் போவதில்லை. தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தகவல்-தொழில்நுட்பத்தில் 4ஜி மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 5ஜி அலைக்கற்றையை அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் ஏற்கெனவே சோதித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ஸ்மார்ட் போன் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டுவரும் அதே வேளையில், அதன் செயல்திறனை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக "சிப்'பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளில் இண்டெல், ஐபிஎம் உள்ளிட்ட 
நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

தொடர் முயற்சியின் விளைவாக  2 நேனோ மீட்டர் சிப்பை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. "சிப்' வழக்கமாக நேனோ மீட்டர் அளவில் கணக்கிடப்படுகிறது. தற்போது சந்தைகளில் 7 நேனோ மீட்டர் சிப் மட்டுமே கிடைக்கிறது. ஐபிஎம் உருவாக்கியுள்ள 2 நேனோ மீட்டர் சிப், 7 நேனோ மீட்டர் சிப்பை விட 45 சதவீதம் அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், 7 நேனோ மீட்டர் சிப்பை விட 2 நேனோ மீட்டர் சிப், 75 சதவீதம் குறைவான எரிசக்தியை மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஐபிஎம் தெரிவித்துள்ளது. 2 நேனோ மீட்டர் சிப் மூலமாக ஸ்மார்ட் போனின் பேட்டரி ஆயுளை அதிக அளவில் நீட்டிக்க முடியும். 2 நேனோ மீட்டர் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் போனை 4 நாள்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதுமானது என ஐபிஎம் நிறுவனம் தெரிவிக்கிறது. 

14 நேனோ மீட்டராக இருந்த சிப் அளவை, 10 நேனோ மீட்டராகவும் அதையடுத்து 7 நேனோ மீட்டராகவும் குறைப்பதற்கு  பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது 2 நேனோ மீட்டர் அளவுக்கு சிப்பை வடிவமைத்த உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஐபிஎம் பெற்றுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு, இண்டெர்நெட் ஆஃப் திங்ஸ், மெஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் இந்த  காலகட்டத்தில், 2 நேனோ மீட்டர் சிப் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 


மின்சார வாகனங்களின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வாகனங்களில் மின்கலனின் (பேட்டரி) செயல்திறனை அதிகரிப்பதில் 2 நேனோ மீட்டர் சிப் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஐபிஎம் தயாரித்த 5 நேனோ மீட்டர் சிப்பில் சுமார் 3,000 கோடி டிரான்சிஸ்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 2 நேனோ மீட்டர் சிப்பில் சுமார் 5,000 கோடி டிரான்சிஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப சிப்பின் செயல்திறனும் அதிகரிக்கும். 


தற்போதைய சூழலில், சிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது. சிப்புக்கு காணப்படும் தட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்கள் சிப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கருவிகளின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில், 2 நேனோ மீட்டர் சிப்பின் தயாரிப்பு, பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய  பங்கை வழங்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


2 நேனோ மீட்டர் சிப்பை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியுள்ளதை மகத்தான சாதனை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக குறைகடத்தி (செமி கண்டக்டர்), தகவல்-தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியடையும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.