வெற்றிக்கான எரிபொருள்!
"வெற்றி' என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விளக்கங்களை வழங்குவார்கள். விளக்கங்கள் மாறினாலும், வாழ்க்கையில் வெற்றி என்பதை நோக்கியே நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.


"வெற்றி' என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விளக்கங்களை வழங்குவார்கள். விளக்கங்கள் மாறினாலும், வாழ்க்கையில் வெற்றி என்பதை நோக்கியே நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
வெற்றியை நோக்கிய பயணத்தில் அனைத்து நேரத்திலும் நாம் தீவிரமாகச் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறோமா என்பது கேள்விக்குறியே. தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட சூழலில், நம் கவனத்தை திசைதிருப்புவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. நம் கைகளில் "ஆறாம் விரலாய்' முளைத்துள்ள கைபேசியே அதற்கு சிறந்த உதாரணம்.
ஆக்கபூர்வ பயன்பாட்டுக்கே அறிதிறன்பேசிகள் (ஸ்மார்ட் ஃபோன்) உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது நம் பொன்னான நேரத்தை வீணடிப்பதில் கைபேசிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கைபேசிகள் தவிர வேறு பல விவகாரங்களும் நம் கவனத்தைத் திசை திருப்பும் பணியைத் தீவிரமாக மேற்கொள்கின்றன.
இப்படியான பிரச்னைகளில் இருந்து தப்பித்து, வெற்றியை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வது சற்று சிரமமாகவே உள்ளது. ஆனால், சில விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக பயணத்தை எளிதாக நம்மால் மேற்கொள்ள முடியும்.
முதலாவது விஷயம் புத்தகங்கள். வாழ்வின் வெற்றியாளர்கள் புத்தகங்களைச் சார்ந்தே இருந்துள்ளனர். நாம் இப்படியும் மாற்றிக் கூறலாம். புத்தகங்களைச் சார்ந்திருந்த அனைவரும் வாழ்வில் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். எனவே, புத்தக வாசிப்பை இளைஞர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் கைபேசியை ஓரமாக வைத்துவிட்டு புத்தகங்களைக் கையில் எடுத்துப் படிப்பது சற்று சிரமமே. ஆனால், வாழ்வில் வெற்றி பெற வேண்டுமெனில், சில தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும். கைபேசியிலேயே மின்னணு வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்ட புத்தகங்களை (இ-புக்) படிக்கிறோம் என சில இளைஞர்கள் கூறுவார்கள்.
ஆனால், அதில் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. இ-புக்கை படித்துக் கொண்டிருக்கும்போதே சமூக செயலிகள் தொடர்பான அறிவிப்புகள் (நோடி ஃபிகேசன்) தோன்றினால், நம் கவனம் அதை நோக்கிச் சென்றுவிடும். புத்தகம் படிப்பது பாதியிலேயே நின்றுவிடும். எனவே, இ-புக் படிப்பதென்றால், அனைத்துவித நோடிஃபிகேசனையும் அணைத்துவிட வேண்டும். நம் கவனம் சிதறாமல் இருப்பதை உறுதி செய்துவிட்டு இ-புக்கைப் படிக்கலாம்.
அதையடுத்து, எந்த மாதிரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் கிடைக்கும் என்பது முக்கியம். மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்றவர்களின் வாழ்க்கைப் பயணம் நமக்குப் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் வழங்கும்.
அவற்றை வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும், அச்சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பன போன்ற படிப்பினைகளை அத்தகைய புத்தகங்கள் வழங்கும்.
நமக்குப் பிடித்தமான நபர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைத் தினந்தோறும் படிப்பது நம்மைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும்.
அத்தகைய புத்தகங்கள் நம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தும்.
அடுத்து சுயமுன்னேற்றப் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாழ்வில் வெற்றியடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அத்தகைய புத்தகங்கள் தெளிவாக விளக்கும். அத்தகைய வழிமுறைகளில் நமக்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கலாம். பல்வேறு சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் படிப்பதன் வாயிலாக ஒட்டுமொத்த யோசனை நமக்குக் கிடைக்கும். அவற்றின் அடிப்படையில் வெற்றிக்கான வழியை நாம் வகுத்துக் கொள்ளலாம்.
புத்தகங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், தினமும் நாள்குறிப்பு எழுதுவதையும் பழக்கமாக்கிக் கொள்ளலாம். அன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய விஷயங்கள் எவை, எந்தெந்த விஷயங்கள் நம் வெற்றிப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்தன என்பன போன்றவற்றை அதில் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிட்ட விவரங்களை அடுத்த நாள் காலை எழுந்ததும் மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.
இத்தகைய நடைமுறை நம்மை எப்போதும் நேர்மறைச் சிந்தனையாளராக வைத்திருக்கும். வாழ்க்கையில் வெற்றியை நோக்கி தொய்வின்றி பயணிப்பதற்கான உத்வேகத்தை வழங்கும். வெற்றியை நோக்கிய பயணத்தில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.
சுறுசுறுப்பாக பயணிப்பதே முக்கியமானது.
கவனச் சிதறல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் அவசியம். அவற்றை முறையாகக் கடைப்பிடிப்பதே வெற்றிக்கான முக்கிய எரிபொருள்.
விலை உயர்ந்தாலும் கூட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதேபோல், கடினமாக இருந்தாலும் கூட வெற்றிக்கான எரிபொருளை முறையாகக் கைக்கொள்வது நம் வாழ்வின் மதிப்பை உயர்த்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...