கோபம்... உங்கள் கையில்!
அனைவரது வாழ்க்கையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவது கோபம். நட்புகளையும் நல்லுறவுகளையும் சிதைக்கும் குணம் கொண்டது கோபம்.


அனைவரது வாழ்க்கையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவது கோபம். நட்புகளையும் நல்லுறவுகளையும் சிதைக்கும் குணம் கொண்டது கோபம். அதிலும் இளைஞர்களை கோபம் அதிகமாக ஆட்டிப் படைத்து வருகிறது. நல்ல விஷயங்களுக்காக கோபப்பட்டால் பரவாயில்லை. சமூகம் சார்ந்த கோபம் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
கோபம் இயல்பானதே!
அன்றாட வாழ்வில் தோன்றும் கோபம், பல்வேறு சங்கிலித் தொடர் பிரச்னைகளை ஏற்படுத்தும். உண்மையில் பார்க்கப் போனால் கோபம் இயல்பானதே. மகிழ்ச்சி, சிரிப்பு, அழுகை, துன்பம் போன்று கோபமும் ஒருவகை உணர்வுதான். ஆனால், அந்த உணர்வு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டியது அவசியம்.
கோபம் எல்லை மீறி தீவிரமாகும்போது அதைச் சரிசெய் வதற்கான முயற்சிகளை நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வாழ்வில் பல விஷயங்களை நாம் இழக்க நேரிடும். சில வழிமுறைகளைப் பின்பற்றி அதீத கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
கோபம் வந்தால் பேசாதீர்கள்!
கோபம் தலைக்கேறிவிட்டதை உணர்ந்தால், எதையும் பேசாமல் இருப்பது நல்லது. கோபத்தில் பேசும் வார்த்தைகள் அனைத்தும் மேலும் பிரச்னைகளை அதிகரிக்கவே செய்யும். எனவே, அத்தகைய சூழலில் முடிந்த அளவு எதையும் பேச வேண்டும்.
உதட்டைக் கடந்துவிட்டால் சொற்கள் பன்மதிப்பு பெறும். நமக்கு நன்மை பயக்கும் சொற்களைப் பேசுவதே நமக்குச் சிறந்தது.
ஆழ்ந்து மூச்சுவிடுங்கள்!
கோபம் நம்மைச் சீண்டினால், கண்களை மூடி அமைதியாக ஆழ்ந்து மூச்சுவிடுங்கள். பொறுமையாக நிதானமாக பெருமூச்சு விடுங்கள். இது கோபத்தினால் முறுக்கேறிய நரம்புகளையும் இறுக்கமடைந்த தசைகளையும் தளர்த்தும். அதனால், கோபம் பெருமளவுக்குக் கட்டுக்குள் வரும்.
நடந்தால் கோபம் குறையும்!
கோபம் வந்தால், கொஞ்ச தூரத்துக்கு நடக்கலாம். அமைதியாக நடப்பது பிரச்னை குறித்து மாற்றுப் பார்வையை ஏற்படுத்தும். பிரச்னை குறித்து சற்று ஆழ்ந்து யோசிக்க வைக்கும். அது கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
பிரச்னைக்கு உரிய தீர்வு காணவும் வழிவகுக்கும்.
நேர்மறை சொற்கள் நல்லது!
நேர்மறையான சில சொற்களைக் கூறுங்கள். "நடப்பதெல்லாம் நன்மைக்கே', "பொறுமையாக இரு', "அமைதியாக இரு', "இதுவும் கடந்து போகும்' போன்றவற்றை கோபம் வரும்போது கூறிக் கொள்ளுங்கள். இது மனதுக்கு சற்று ஊக்கமளித்து கோபத்தை மட்டுப்படுத்தி பிரச்னைக்குத் தீர்வு காண உதவும்.
இசையைக் கேளுங்கள்!
நல்ல இசையைக் கேளுங்கள். சிறந்த இசையும் பாடலும் பாடல் வரிகளும் மனதுக்கு இதம் கூட்டுபவை. கோபம் உள்ளிட்ட எத்தகைய உணர்வையும் மடைமாற்றும் தன்மை கொண்டவை. உங்களைக் கோபம் சூழ்ந்து கொள்ளும் சூழலில் இசையைக் கேளுங்கள். உங்களுக்குப் பிடித்தமான பாடல்களையும் இசைக் கோப்புகளையும் கைப்பேசியில் தனியே வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வந்தால் மட்டுமல்ல, துன்பத்தைக் கடக்கவும், குழப்பத்தைத் தெளிய வைக்கவும் இசை உதவும்.
சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அது கோபத்தால் இறுக்கமான தசைகளைத் தளர்த்த உதவும்.
கோபம் குறைய... குறிப்பேடு உதவும்!
கோபத்தை பகிர்ந்து கொள்வதற்கான சூழல் அமையவில்லை எனில், கோபம் வருகையில் நாள்குறிப்பிலோ கையேட்டிலோ எழுதுங்கள். மனதில் தோன்றும் அனைத்தையும் எழுதிவிடுங்கள். அது மனஇறுக்கத்தைக் குறைக்கும். கோபத்தினால் மனதில் தோன்றியுள்ள திரையை அகற்ற அது உதவும்.
பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணவும் வழிவகுக்கும்.
நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!
கோபம் வந்தால், அதை நெருக்கமான நண்பர்களிடம் வெளிப்படுத்துங்கள். ஆனால், அவர்களிடமும் கோபமாகப் பேசக் கூடாது. என்ன பிரச்னையால் கோபம் வந்தது என்பதை மட்டும் அவர்களிடம் மனம்விட்டுப் பேசலாம். அது கோபம் சார்ந்த இறுக்கத்தைக் குறைத்து உரிய தீர்வுகளை எட்ட உதவும். நண்பர்களே முறையான தீர்வுகளை வழங்குவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, பிரச்னையை நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லா பிரச்னைகளுக்கும் ஏதோவொரு காரணம் இருக்கும். அந்தக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள். ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கும் கோணம் இயல்பாக இருந்தாலும், மற்றொருவர் பார்வையில் இருந்து பார்த்தால் பிரச்னை கண்ணுக்குத் தெரியும். எனவே, ஏதேனும் பிரச்னை தோன்றினால், அதை உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் ஆராயாமல், மற்றவர்களின் கண்ணோட்டத்தில் இருந்தும் சிந்தித்துப் பாருங்கள்.
அவர்கள் அந்த விவகாரத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இத்தகைய செயல்பாடு பிரச்னைகளுக்கு சரியான தீர்வைக் காண உதவும். சம்பந்தப்பட்ட பிரச்னையால் ஏற்படும் கோபத்தைத் தீர்க்கவும் வழிவகுக்கும்.
கோபம் இயல்பானது. சில நேரங்களில் கோபம் சரியான தீர்வுகளை எட்டுவதற்கு வழிவகுக்கும். கோபத்தைத் தவிர்ப்பது இயலாத காரியம். ஆனால், சரியான வழிகளைப் பின்பற்றினால் கோபத்தை சிறப்பாகக் கையாள முடியும். எனவே, கோபத்தை முறையாகக் கையாண்டு வாழ்வை அழகாக்குவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...