எளிய கண்டுபிடிப்பு... அதிக பயன்கள்!

கல்வி என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு கருவி என்று நினைக்கும் உலகில், நாம் கற்கும் கல்வியால் சாதாரண மக்கள் பயன்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு.
எளிய கண்டுபிடிப்பு... அதிக பயன்கள்!

கல்வி என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு கருவி என்று நினைக்கும் உலகில், நாம் கற்கும் கல்வியால் சாதாரண மக்கள் பயன்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. அப்படி நினைப்பவர்களில் ஒருவர்தான் நவ்ஜோத் சாவ்னி.
இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட டைசன் நிறுவனத்தில் செய்து வந்த வேலையை இதற்காக விட்டுவிட்டு, இந்தியாவுக்குத் திரும்பி, சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய துணி துவைக்கும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்.
இங்கிலாந்தில் பிறந்த இந்தியரான நவ்ஜோத் சாவ்னி, யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனில் ஏரோஸ்பேஸ் பிரிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அதற்குப் பிறகு, பொறியியல் படிப்பிற்கு சிறிதும் தொடர்பில்லாத மனிதநேயப் பிரிவில் முதுநிலை எம்எஸ்சி படிப்பையும் முடித்திருக்கிறார்.
நவ்ஜோத் சாவ்னியின் கண்டுபிடிப்புகளைப் பற்றி அவர் கூறியதிலிருந்து...
""நான் பிறந்தது இங்கிலாந்தில். எனது அப்பா ஏரோஸ்பேஸ் என்ஜினியராக வேலை செய்தவர். என்னுடைய இளம் வயதிலேயே அப்பா மரணம் அடைந்துவிட்டார். தாயின்கடுமையான உழைப்பில்தான் நான் வளர்ந்தேன். வீட்டில் பெண்கள் படும் பாடுகளை நான் சிறுவயதில் இருந்தே நேரில்பார்த்திருக்கிறேன்.
ஏரோஸ்பேஸ் பிரிவில் என்ஜினியரிங் படித்தாலும், அத்துறையில் நான் வேலை செய்யவில்லை. வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் உலகின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டைசனில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட வேலை, வசதியானவர்கள் பயன்படுத்தும் நவீன வேக்குவம் கிளீனர் இயந்திரத்தை உருவாக்குவது. என்னுடைய படிப்பு சாதாரண ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே நான் நினைத்துவந்திருக்கிறேன். அதனால் இந்த நவீன வேக்குவம் கிளீனர் தயாரிப்பு வேலையில் முழு மனதுடன் என்னால் ஈடுபட முடியவில்லை.
அதனால் அந்த வேலையை விட்டு விலகிவிட்டேன்.
இங்கிலாந்தில் உள்ள "என்ஜினியர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' என்ற தன்னார்வ நிறுவனத்தில் சேர்ந்தேன். சாதாரண மக்கள் பயன்படுத்தும் அடுப்பின் எரிபொருள் செலவை பாதி அளவு குறைக்கும்விதமாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை 80 சதவீதம் குறைக்கும் விதமாகவும் உள்ள ஓர் அடுப்பைத்தயாரித்தேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பினேன். சாதாரண மக்கள் வாழும் நிலையைத் தெரிந்து கொள்ள இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்றேன். அப்படி நான் சென்ற ஒரு பகுதிதான் தமிழ்நாட்டில் உள்ள குயிலாப்பாளையம் கிராமம்.
இந்த கிராமத்தில் நான் தங்கியிருந்தபோது, எனக்கு அறிமுகமானவர்தான் திவ்யா. திவ்யா பள்ளிப் படிப்பை முடித்தவர். ஆங்கிலத்தில் என்னுடன் பேசக் கூடியவர். அதனால் அவர் நட்பு எனக்குக் கிடைத்தது. குடும்பத் தலைவியான திவ்யா, ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளைச் செய்வதற்
காகப் படும் சிரமங்களை நான் நேரில் பார்த்தேன்.
அவர் வாரத்துக்கு பல மணி நேரங்கள் வீட்டுத் துணிகளைத் துவைப்பதற்குப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். இதனால் அவருக்கு முதுகு வலி, டிடர்ஜென்ட் சோப்புகளினால் ஏற்படும் அலர்ஜி என பல பிரச்னைகள். கைகளால் துணி துவைப்பதை எளிதாக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
அதன் பிறகு அதைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். இதற்காக எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ஈராக், லெபனான், பிலிப்பைன்ஸ், கென்யா, இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளுக்குச் சென்று மக்களை வீடு வீடாகச் சந்தித்து துணிகளைத் துவைக்கும் அவர்களுடைய வேலையைப் பற்றிக் கேட்டோம்.
உலகம் முழுவதும் உள்ள 70 சதவீத மக்களின் வீடுகளில் மின்சார வாஷிங் மெஷின் இல்லை. வாஷிங் மெஷினை வாங்கும் வசதி அவர்களுக்கு இல்லை. உலகின் பல பகுதிகளில் மின்சார இணைப்பே இல்லை. கைகளால் துணி துவைக்கும்போது அதிகத் தண்ணீர் செலவாகின்றது. உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியிருக்கிறது. இது தவிர, துவைப்பதால் ஏற்படும் உடல் வலி, தோல் அழற்சி ஆகியவையும் உள்ளன.
எனவே சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய செலவு குறைவான வாஷிங் மெஷினைத் தயாரிக்க முடிவு செய்தோம்.
அப்படி நாங்கள் தயாரித்த முதல் வாஷிங் மெஷின் 2018 ஆகஸ்ட் மாதம் உருவானது. இந்த வாஷிங் மெஷின் இயங்க மின்சாரம் தேவையில்லை. கைகளால் சுற்ற வேண்டும். நிமிடத்துக்கு 500 தடவை சுழலும் திறன் உடையது இந்த இயந்திரம் (500 ஆர்பிஎம்). 5 கிலோ எடையுள்ள துணிகளை இதில் துவைக்கலாம். 35 கிலோ எடையுள்ள இந்த வாஷிங் மெஷினை, பகுதி பகுதியாகக் கழற்றி வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லலாம். அங்கே சென்று பொருத்தி மறுபடியும் இயக்கலாம்.
கைகளினால் துணி துவைக்க 2 மணி நேரம் ஆகிறது என்றால் இந்த வாஷிங் மெஷினில் அரை மணி நேரத்திலேயே துவைத்துவிடலாம். கைகளால் துவைத்த துணியை விட விரைவில் இந்தத் துணி காய்ந்துவிடும். அதைவிட முக்கியமானது, 20 லிட்டர் தண்ணீரில் ஒருமுறை துவைத்துவிடலாம்.
இந்த வாஷிங் மெஷினைத் தயாரித்து அதற்கு நாங்கள் இட்ட பெயர் "திவ்யா 1.5'. "கேர் இண்டர்நேஷனல்' என்ற அமைப்பின் உதவியால், ஈராக்கிலுள்ள அகதி முகாம் ஒன்றுக்கு 30 வாஷிங் மெஷின்களை தயாரித்து அளித்தோம்.
குறைந்த தண்ணீர் செலவில் அதிக உடல் வலி இல்லாமல் மக்கள் எங்களுடைய வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவதைப் பார்த்தபோது, எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தற்போது 150 வாஷிங் மெஷின்கள் வரை தயாரித்து இருக்கிறோம். லெபனானுக்கும் கொடுத்திருக்கிறோம்.
"எலக்ட்ரோகாம்போனென்ட்ஸ்' என்ற நிறுவனத்துடன் வாஷிங் மெஷின் தயாரிப்பதற்கான நிதி சார்ந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறோம்.
இன்னும் 3 ஆண்டுகளில் இதைப் போன்று 7,500 வாஷிங் மெஷின்களைத் தயாரித்து 10 நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்களுடைய தற்போதைய திட்டம்'' என்கிறார் நவ்ஜோத் சாவ்னி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com