எரிவாயு... சமையலறை கழிவுகளில் இருந்து!

சமைத்த உணவுகளைச் சாப்பிட்டு உலகம்  பழகிவிட்டது. சமையல் செய்யாவிட்டால், உலகில் மனிதர்கள் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
எரிவாயு... சமையலறை கழிவுகளில் இருந்து!


சமைத்த உணவுகளைச் சாப்பிட்டு உலகம் பழகிவிட்டது. சமையல் செய்யாவிட்டால், உலகில் மனிதர்கள் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சமையல் செய்ய விறகு அடுப்புகள், கரி அடுப்புகள் இருந்த காலம் போய்,எரிவாயு அடுப்புகள் வந்துவிட்டன. மண்ணுக்கு அடியில் உள்ளபெட்ரோலியம் பொருள்கள், கரி போன்றவற்றை மனிதர்கள் சமையல் செய்வதற்கான எரிபொருளாக இன்னும் எத்தனை காலம்தான் பயன்படுத்த முடியும்? கோடிக்கணக்கான மக்கள்ஒவ்வொரு நாளும் சமையல் எரிவாயு போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவை தீர்ந்துவிடாதா?

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சமையல் எரிவாயுஇல்லாமல் அடுப்பெரிக்க வேண்டிய தேவையை உணர்ந்தார்புணே நகரைச் சேர்ந்த ப்ரியதர்ஷன் என்ற இளைஞர். அதற்காக அவர் கண்டுபிடித்த பயோகேஸ் முறை, பலவிதமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளைச் செய்கிறது.

அதற்காக அவர் உருவாக்கிய நிறுவனம் "வாயு மித்ரா'.

புணே நகரில் பிறந்து வளர்ந்த ப்ரியதர்ஷனின் குடும்பத்தினர் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஐஐடி - பாம்பேயில் பொறியியல் பட்டம் பெற்றபிரியதர்ஷனுக்கு, வளாக நேர்காணலிலேயே வேலை கிடைத்து விட்டது. அதுவும் பொது சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்றில். சிறிது காலம் அங்கு வேலை செய்த ப்ரியதர்ஷன் அங்கிருந்து விலகி "நேஷனல் ரூரல் எலக்ட்ரிக் கோஆபரேட்டிவ் அசோசியேஷன்' என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு ஆனந்த் என்பவரின் தொடர்பு கிடைக்கிறது. அவர் பயோகேஸ் பற்றிய பல தகவல்களை பிரியதர்ஷனிடம் பகிர்ந்து கொண்டார். அதுவே பிரியதர்ஷனின் வாழ்க்கை இலக்கை மாற்றியிருக்கிறது.

""நான் படிப்பை முடித்ததும் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்தேன். இரண்டுமே மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் தொடர்பான நோக்கங்களைக் கொண்டவை. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல எண்ணங்கள் எனக்குள் தோன்றின. இதற்கிடையில் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்களில் வேலை செய்தேன். அங்குள்ள உணவகங்களில் சாப்பிடுபவர்கள் மீதம் வைக்கும் உணவுகளை அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்கள். ஒரு நிறுவனத்திலேயே இவ்வளவு உணவுகளைக் குப்பையில் கொட்டுகிறார்கள் என்றால், நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான உணவகங்களில் எவ்வளவு உணவைக் குப்பையில் கொட்டுவார்கள் என்று யோசித்தேன்.

வீட்டில் சமையல் அறையில் இருந்து வெளியில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளையும் குப்பையில்தான் போடுகிறோம். அவையும் எந்தப் பயனுமின்றி மண்ணைப் பாழாக்குகின்றன.

அப்போதுதான் பயோ கேஸ் பற்றிய அறிவு எனக்குக் கிட்டியது. சமையலறைக் கழிவுகளில் இருந்து பயோகேஸ் தயாரித்தால் என்ன என்று யோசித்தேன். அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய நண்பர்களான பிரதீப் தேவ்கதே, சாகர் மனே இருவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள்.

முதலில் என் வீட்டுக் காய்கறி கழிவுகளுடன் ஆராய்ச்சியைத் தொடங்கினேன். அதற்குப் பிறகு எங்களுடைய வீட்டில் குடியிருந்தவர்களின் வீட்டுக் கழிவுகளையும் பயன்படுத்தினேன். இதற்காக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போய் நிற்பேன். என்னுடைய முயற்சியைத் தெரிந்து கொண்ட அவர்கள், தங்கள் வீட்டு சமையல் அறைக் கழிவுகளை என்னிடம் தாமாகவே கொடுக்கத் தொடங்கினார்கள். சமையல் அறைக் கழிவுகளைப் பயன்படுத்தி மீதேன் வாயுவைத் தயாரிப்பதுதான் எனது நோக்கம். அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன்.

பிறகு 2017 -இல் எனது நிறுவனமான "வாயு மித்ரா' வைத் தொடங்கினேன். சமையல் அறைக் கழிவுகளை வைத்து மீதேன் எரிவாயு தயாரிக்கப் பயன்படும் கருவிகளை உருவாக்கினேன்.

இந்தக் கருவியை மொட்டை மாடியில், வீட்டுத் தோட்டத்தில் என்று வீட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

சமையல் அறைக் கழிவுகளை இந்தக் கருவியில் கொட்டிவிட வேண்டும்.அதன் பிறகு 21 மணி நேரத்தில் இந்தக் கருவியில் இருந்து மீதேன் எரிவாயு உற்பத்தியாகத் தொடங்கிவிடும். அவ்வாறு உற்பத்தியாகும் மீதேன் எரிவாயுவை, எரிவாயு குழாய் இணைப்பின் மூலம் வீட்டில் உள்ள அடுப்பில் சமையல் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக நான் தயாரித்த இந்தக் கருவி, 2 கிலோ கொள்ளளவு, 5 கிலோ கொள்ளளவு என்று இரண்டு விதங்களில் தயாரிக்கப்படுகிறது.

2 கிலோ சமையல் அறைக் கழிவுகளை இந்தக் கருவியில் கொட்டினால், 20 இலிருந்து 40 நிமிடங்கள் வரை இதிலிருந்து வெளிவரும் மீதேன் எரிவாயுவால் அடுப்பெரிக்க முடியும்.

இதுவரை 135 கருவிகளைத் தயாரித்து இருக்கிறோம். புணே, அவுரங்காபாத், ஹைதராபாத், சாங்லி உள்ளிட்ட பல நகரங்களுக்கு அவற்றை அனுப்பி இருக்கிறோம். ஒரு நாளைக்கு 2000 கிலோ கழிவுகளை நாங்கள் தயாரித்த கருவிகள் மீதேன் எரிவாயுவாக மாற்றுகின்றன. இதனால் 900 எல்பிஜி சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுத்திருக்கிறோம்.

இந்தக் கருவிகளினால் இன்னொரு பயனும் இருக்கிறது. சமையல் அறைக் கழிவுகளால் மீதேன் வாயுவைத் தயாரித்த பிறகு, கருவியில் உள்ள திரவ வடிவக் கழிவுகளை, வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே பூமியில் இருந்து எடுத்துப் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருள்களின் அளவை இந்த மீதேன் எரிவாயுவின் மூலம் குறைக்க முடியும்.

மேலும் இந்தக் கருவி இயங்க மின்சாரம் தேவையில்லை. 6 மாதத்துக்கு ஒருமுறை இந்தக் கருவியைத் தூய்மைப்படுத்தினால் போதும்'' என்கிறார் ப்ரியதர்ஷன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com