நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சனீஸ்வரர் கோயிலில் பெண்கள் நுழைய தடையா?

சீரடியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் சிங்கனாப்பூர் உள்ளது. மும்பையிலிருந்து 265 கி.மீ..,

News image
Updated On :15 டிசம்பர் 2015, 5:51 am

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

சீரடியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் சிங்கனாப்பூர் உள்ளது. மும்பையிலிருந்து 265 கி.மீ..,

தமிழ்நாட்டில் சனிபகவான் என்றால் திருநள்ளாறு பிரபலம். மராட்டியர்களுக்கோ சனி என்றால் சிங்கனாப்பூர் "சனிபகவான்' கோயில்தான் நினைவுக்கு வரும். 

திருநள்ளாறில் சனிபகவானை ஆண்பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும் கர்ப்பகிரக வாயிலில் நின்று தரிசிக்கலாம். அர்ச்சனை அபிஷேகத்திலும் இருபாலரும் பங்கேற்கின்றனர்.

Story image

ஆனால் சிங்கனாப்பூரில் சனிக்கு சிலை கிடையாது. மாறாக 4 அடி உயர கல்தான் சனிபகவான்! சுயம்புவாக வீற்றிருப்பதாக சொல்கின்றனர். மேலும் கருவறைக்குமேல் கூரையும் கிடையாது. வானம் பார்த்த கர்ப்பகிரகம்தான்! ஆனால் விஷயம் அதுவல்ல... அந்த கர்ப்பகிரகத்தில் சுவாமிக்கு பூசாரியோ அல்லது ஆண்களோதான் நீர், எண்ணெய் அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. பெண்களுக்கு கர்ப்பகிரகத்தினுள் செல்ல அனுமதியில்லை. தூரத்திலிருந்துதான் அவர்கள் வணங்க முடியும்.

ஆண்களும் அருகில் செல்ல காவி உடை உடுத்தியிருக்க வேண்டும். இதற்காக கோயிலுக்கு 100 மீட்டர் தள்ளியுள்ள கடைகளில் காவிவேட்டி, துண்டு, அபிஷேக எண்ணெய், பூ, ஊதுபத்தி என செட்டாக விற்கிறார்கள். வேண்டாமென்றாலும் மிரட்டாத குறையாக கையில் திணிப்பார்கள். காவி உடை உடுத்திய கணவருடன் மனைவி சென்றாலும் முன்மண்டபத்தில் பெண்கள் நிறுத்தப்பட்டு விடுவார்கள்.இதற்கு பெண் இயக்கங்களிடையே எதிர்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பெண்மணி கோயிலுக்கு சென்றவர்; விடுவிடுவென சனிபகவான் அருகே சென்று, அதற்கு பூ போட்டு, நீர் ஊற்றி, எண்ணெய் அபிஷேகம் செய்து... வந்தவேகத்திலேயே விடுவிடுவென வெளியே சென்று விட்டார்! மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவியதுபோல், தந்திரமாக அவர் நழுவினாலும் கோயில் கர்ப்பகிரகம் அருகே வைத்திருந்த கேமிராவில் அனைத்தும் பதிவாகிவிட்டது! இதனால் உடனே விஷயமும் வெளியே தெரிந்து விட்டது.

கோயில் நிர்வாகமும் உள்ளூர் பக்தர்களும் உடனே கொதித்தெழுந்து, புனிதம் போனதுபோலவும் உடனே அதற்கு புனிதம் செய்ய வேண்டும் எனவும் கூறி சனிபகவானுக்கு புனிதத்துவம் செய்தனர்! உள்ளூர் பெண்களும் அந்த பெண் கர்ப்பகிரகத்தில் சென்று வழிபட்டது தவறு எனப் பேட்டி மேல் பேட்டி கொடுத்தனர்.  பெண் கர்ப்பகிரகம் வரை உள்ளே சென்று பூஜை நடத்தியதை கவனிக்காமல் இருந்ததற்காக, அப்போது பணியில் இருந்த ஏழு காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் நிர்வாகமோ, "பெண்களை கர்ப்பகிரகத்தில் அனுமதிப்பதில்லை என்பது இந்த கோயிலின் விதி. அதனால் சிலை தீண்டப்பட்டதாக கருதி பூஜை செய்தோம்' என்றது!

மகாராஷ்டிராவின் முன்னாள் கூடுதல் முதன்மை செயலாளர் சந்திரா ஐயங்கார்,  ""கடவுள் ஆண், பெண் என பாரபட்சம் பார்ப்பதில்லை. கடவுள் பெயரைச்சொல்லி மனிதர்கள்தான் பாரபட்சமாக நடக்கிறார்கள்! மதம், நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருப்பதால் அரசு இதில் நேரடியாக தலையிடுவது இல்லை'' என்கிறார்.

பெண்கள், ஆண்களைவிட அதிக பக்குவம் கொண்டவர்கள். அவர்கள் மாதவிடாய் நாள்களில் கோயிலுக்கு வர விரும்புவதில்லை. ஆக, இந்த பாரபட்சம் கலையப்பட்டு, பெண்களும் கர்ப்பகிரகத்தினுள் நுழைந்து சனியை தரிசிக்கவும் அபிஷேகம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்'' எனவும் பல பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுத்துள்ளன!

சனி சிங்கனாப்பூரின் விசேஷம்:  சனிபகவான் மீது மக்களுக்கு அதிக பக்தியும் அதைவிட பயமும் இருப்பதால் சனி சிங்கனாப்பூரில் திருட்டுகள் நடைபெறுவது கிடையாது. எனவே இங்குள்ள வீடுகள், கடைகளுக்கு கதவுகளோ, பூட்டுபோடுவதோ கிடையாது என்பது அதிசயமான விஷயம்!  மீறி திருடுபவர்களை சனி தண்டித்துவிடுவார் என்றும் ஏழு ஆண்டுகளுக்கு திருடிய நபரை முடக்கி வைத்து விடுவார் என்ற பயமும் இருப்பதால் திருடர்களும் இங்கு திருடுவதில்லை எனக் கூறப்படுகிறது!

இந்த ஊரில் ஒரே ஒரு வங்கி உள்ளது. அது யூகோ வங்கி! இந்த கதவு, பூட்டு விஷயத்தை அது தந்திரமாக ஆட்டோமேடிக் க்ளோசிங் கதவுகள் மூலம் சமாளிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் அதிகமான உள்ளூர்காரர்களே இதற்கு வாடிக்கையாளர்கள். லாக்கர் சர்வீஸ் இருப்பதால் யூகோ வங்கி அதனையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

கிராமத்திலேயே ஒதுங்குப்புறமாக உள்ள வீடுகள் பக்கம் நடமாட்ட குறைவு இருப்பதால் அங்குள்ளவர்கள் அதற்கு பயந்து, கதவு, பூட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்!

ஆனாலும் இந்த கிராமத்தின்  மையப்பகுதிகளில் இதுவரை வீடுகளுக்கு கதவோ, பூட்டோ இல்லாமல்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.