பெற்ற வெற்றிகளை மறந்து விட வேண்டும் சொல்கிறார் ருத்விகா ஷிவானி கட்டே

ருத்விகா ஷிவானி கட்டே இறகுப் பந்தாட்டத்தில் பி. வி. சிந்துவுக்கு சவாலாக மாறி வரும் வீராங்கனை. சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்த் தான் ருத்விகாவிற்கும் பயிற்சியாளர்.
பெற்ற வெற்றிகளை மறந்து விட வேண்டும் சொல்கிறார் ருத்விகா ஷிவானி கட்டே

ருத்விகா ஷிவானி கட்டே, இறகுப் பந்தாட்டத்தில் பி. வி. சிந்துவுக்கு சவாலாக மாறி வரும் வீராங்கனை. சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்த் தான் ருத்விகாவிற்கும் பயிற்சியாளர். ருத்விகா பத்தொன்பது வயதுப் புயல். தனி நபர் பெண்கள் இறகுப் பந்தாட்டத்தில் உலக தர வரிசையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் சர்வதேச தர வரிசையில் 113 வது இடத்தில் இருந்த ருத்விகா சில மாதங்களில் பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று ஐம்பதாவது இடத்திற்கு முன்னேறியிருப்பவர்.

எட்டு மாதம் முன்புதான் அந்த சம்பவம் நடந்தது.

வெளியுலகுக்குத் தெரியாத ருத்விகா தென் ஆசிய போட்டியில் வீழ்த்தியது வேறு யாரையும் இல்லை. சாட்சாத் சிந்துவைத்தான். அந்த வெற்றி ருத்விகா ஷிவானியை உயர்த்திப் பிடித்தது. இந்தியாவின் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு ருத்விகா முன்னேறினார்.

இறகுப் பந்தாட்டத்தில் முன்னணியில் இருக்கும் சிந்து, சாய்னா நேவால் இருவருக்கும் போட்டியாக மாறியிருக்கும் ருத்விகா இறகுப் பந்தாட்டத்தில் நாளைய நம்பிக்கை நட்சத்திரம். 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இவரது லட்சியம் .

சமீபத்தில் நடந்த உபெர் கோப்பைக்கானப் போட்டியில் ருத்விகா தோற்கடித்தது சர்வதேச அளவில் இருபத்தைந்தாவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தைச் சேர்ந்த நிச்சன் ஜின்டாபோல் என்ற வீராங்கனையை .

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹெப்பாடைட்டீஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ருத்விகா தீவிர சிகிச்சையில் இருந்தார். விளையாட்டுப் பயிற்சியும் இல்லாமல் போனது. மீண்டு வந்து திறமையால் ருத்விகா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர் ருத்விகா.. நோயால் பாதிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் கூட அவர் திறமையாக விளையாடினார். பிறகு மருத்துவர் முடிவால் ஓய்வு எடுக்க வேண்டி வந்தது. சிகிச்சையின் போது எனது அகாடமி பக்கம் வந்து நிற்பார்... உடல் நலம் தேறிய பிறகு விளையாட வந்தால் போதும் என்று அனுப்பி வைப்போம். ருத்விகாவிடம் மீண்டும் அந்த அதிரடி ஆக்ரோஷம் வந்திருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்சில் கண்ணைப் பதித்திருக்கும் ருத்விகா தனது ஒலிம்பிக்ஸ் பயணத்தின் பாய்ச்சலை தொடங்கி விட்டார்'' என்கிறார் ருத்விகாவின் பயிற்சியாளர் கோபிசந்த்.

ருத்விகா கூறுகையில்:

""கோபிசந்த் இறகுப் பந்து அகாடமியில் நான் சேரும் போது வயது பன்னிரண்டு. தெலங்கானா மாநிலத்தில் கம்மம் நகரைச் சேர்ந்தவள். சின்ன வயதில் இறகுப் பந்தாட்ட மைதானத்திலிருந்து உதிர்ந்து கீழே கிடைக்கும் இறகுகளை சேகரித்து வைப்பேன். அப்படித்தான் இறகுப் பந்தாட்டம் என்னை ஈர்த்தது. பதினான்கு வயதில் சப் -ஜுனியர் பிரிவில் தேசிய அளவில் விளையாடினேன். என் ஆட்டத்தைக் கண்ட கோபி சார் நேரடியாக பயிற்சி தந்தார். நான் நோய் வந்து படுக்கையில் கிடந்த போது அவர்தான் உற்சாகப்படுத்தினார்.

இந்த நோய் வந்திருப்பதும் நல்லதற்குத்தான். நமக்கு ஏதாவது சம்பவித்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். என்னை நம்பு... அடுத்த ஒலிம்பிக்சில் நீ விளையாடுவாய்.. என்று ஆறுதல் சொல்வார். அந்த ஊக்க வார்த்தைகள் தான் என்னை சீக்கிரம் குணப்படுத்தின.. இப்போது தினமும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவேன். பிறகு பயிற்சி. மதியம் ஓய்வு. மாலை மறுபடியும் பயிற்சி.. கோச் சொல்கிற மாதிரி நடப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரது மேற்பார்வையும், அறிவுரையும் பயிற்சியும் தானே, சாய்னா நேவால், சிந்து இருவரையும் ஒலிம்பிக்ஸ் வரை அழைத்துச் சென்றது.

விளையாட்டில் பெற்ற வெற்றிகளை மறந்து விட வேண்டும். அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதில் மும்முரம் காட்ட வேண்டும். உலக தர வரிசையில் முதல் நாற்பதுக்குள் நான் வந்து விட வேண்டும். அதுதான் உடனடி லட்சியம். அப்போதுதான், விளையாட நிதி உதவிகள் கிடைக்கும். சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது எதிராளியிடமிருந்து அழுத்தம், நெருக்கடி ஏற்படும். அப்படி விளையாடினால்தான் பல லாகவங்களைக் கற்க முடியும். எதிராளியின் போக்கை, அடுத்த நகர்வைக் கணிக்க முடியும். அதற்கேற்ற மாதிரி சுதாரித்து நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவும் முடியும்... விளையாடி விளையாடிதான் இந்த அனுபவத்தைப் பெற முடியும்'' என்கிறார் ருத்விகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com