16 வயதில் நீண்ட உதவிக் கரம்!
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டவர் அபர்ணா குகன்.


பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டவர் அபர்ணா குகன். ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்தவர். "அப்போ சொல்லிக் கொடுத்தது இப்பவும் மனசில தங்கியிருக்கு!'' என்கிறார்.
ஹீமோபீலியா நோயிலும், புற்றுநோயிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு என்றே "டியாரா ஹீமோபீலியா கான்சர் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் அபர்ணாவுக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை.
புற்றுநோய் என்றால் தெரியும். அதென்ன ஹீமோபீலியா? வெட்டோ, காயமோ ஏற்பட்டால் அதிலிருந்து வெளிப்படும் ரத்தம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது (ஜார் மன்னனுக்கு இந்த நோய் இருந்ததாகச் சொல்வார்கள்).
"இரண்டுமே தொடர்ந்து செலவு வைத்துக்கொண்டே இருக்குமே?'' என்று கேட்டபோது, "ஆம்! ஆனால் நாங்கள் மருத்துவர்கள் கண்டறிந்து இவர் தகுதியான நோயாளி என்று சான்றிதழ் அளித்தால் மட்டுமே உதவ முன் வருகிறோம். அது மட்டுமல்ல, இந்தப் பிரிவில் தேவை அதிகம் இருக்கிறது'' என்கிறார் அபர்ணா.
இதுவரை 200 குழந்தைகளுக்கு மேல் தமது அறக்கட்டளை மூலம் உதவி செய்திருக்கிறார் இவர். சிலர் அளிக்கும் நன்கொடைகள் தவிர, நிதி திரட்டுவதற்காக நிகழ்ச்சிகளும் நடத்துவதும் உண்டாம்.
"என்னுடைய பதினான்காவது வயதிலேயே இந்த எண்ணம் எனக்குத் தோன்றியது. பள்ளிக்கூடம் படிக்கிற போதே பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார்கள். அப்புறம் வீட்டில் விசேஷங்கள், விழாக்கள் என்று வரும்போது எனக்குக் கிடைக்கும் தொகையையும் இதில் சேர்த்துவிடுவேன். ஆக, பதினாறு வயதிலேயே பிறருக்கு உதவ ஆரம்பித்துவிட்டேன்!''
"உங்களை மிகவும் வருத்திய குடும்பங்கள் இருக்குமே?'' என்று கேட்டதற்கு, "சில குடும்பங்களில் ஒரு குழந்தைக்குத்தான் ஹிமோபீலியா இருக்கும். சில குடும்பங்களிலோ இரண்டு மூன்று குழந்தைகளுக்கு இருக்கும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள், எப்படி செலவு செய்வார்கள் என்று யோசித்தாலே மிகவும் வருத்தமாக இருக்கும். நாம உதவி பண்ணலேன்னா யார் உதவி பண்ணுவாங்கன்னு தோணும்''.
அபர்ணா நேரடியாக நோயாளிக்கு உதவுவதில்லை. நிச்சயம் உதவி பெறத் தகுதியானவர்தானா என்று விசாரிக்கிறார். தனியார் மருத்துவமனையில் பொது வார்டுகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறார். நோயாளியின் ரேஷன் கார்டு போன்ற ஆதாரங்களைப் பரிசீலித்து, நிதி உதவி பெறத் தகுதியானவர் என்றால் மட்டுமே உதவுகிறார்.
""நாங்கள் சில மருத்துவமனைகளுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். அவர்கள் குறிப்பிடும் குழந்தைகளுக்கான நிதி உதவிகளைச் செய்கிறோம்!'' என்கிறார் அபர்ணா குகன்.
- சாருகேசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...