பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்: அம்மா!
பேராசிரியர் பாகீரதி, இராணிமேரிக் கல்லூரியின் இசைப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்து வரும் சிறந்த இசைக்கலைஞர்.


பேராசிரியர் பாகீரதி, இராணிமேரிக் கல்லூரியின் இசைப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்து வரும் சிறந்த இசைக்கலைஞர். அதுமட்டுமின்றி சிறந்த விமரிசகராகவும், இசை சார்ந்த கட்டுரைகள் எழுதுபவராகவும் இருக்கிறார். இவர் தனது தாயார் அனந்த லட்சுமி அம்மா குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
எனது அம்மா பெயர் அனந்த லட்சுமி. ஆனால், அம்மாவை எல்லாரும் அன்பாக அன்னம்மா, அன்னம் என்றுதான் அழைப்பார்கள். அம்மாவிற்கு 12 வயதில் திருமணம். 1950 ஜனவரி 26 -இல் திருமணம் நடந்தது. 5 நாள் திருமண கொண்டாட்டமாம். அப்போதே 100 பவுன் நகை போட்டு அம்மாவை திருமணம் செய்து கொடுத்தாராம் மிராசுதாரரான என் தாத்தா.
என் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் ஓர் அண்ணன், ஒரு தம்பி. நான் பிறந்தபோது அம்மாவுக்கு உடல்நிலை ரொம்பவும் முடியாமல் போனதால், நான் பிறந்த பதினைந்துநாளில் என் அம்மாவின் அம்மா மீனு பாட்டி என்னை கோபிச்செட்டிபாளையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாராம். அதனால், பதினைந்து நாள் குழந்தையிலிருந்து 6-ஆவது படிக்கும் வரை பாட்டிதான் என்னை வளர்த்தார்கள்.
அதனால், பாட்டியைப் பற்றி நிச்சயம் சொல்லி ஆக வேண்டும். பாட்டி 5-வது வகுப்பு கூட படிக்காதவர். ஆனால் அவருக்கு இருந்த அறிவு கூர்மை அபாரம். அந்தகாலத்திலேயே தொலைநோக்கு பார்வை உள்ளவர். பாட்டி வீட்டு அருகிலேயே சாரதா வித்யாலயா பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ஆரம்பக் கல்வியை தமிழ் மீடியத்தில்தான் படித்தேன்.
பாட்டி அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார். என்னையும் 4 மணிக்கெல்லாம் தினமும் எழுப்பி விட்டுவிடுவார். எழுந்ததும் குளித்துவிட வேண்டும் என்பார் பாட்டி. வெந்நீர் வைத்து குளிப்பாட்டி விடுவார். அதன்பின், தேவாரப் பாடல், கம்பராமயணப் பாடல், பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளில் 10 குறள் என ஒவ்வொரு புத்தகத்திலும் தினமும் சிலவற்றைப் படிக்க வேண்டும். அன்று இளமையில் படித்தது, "பசுமரத்து ஆணி என்பார்களே' அதுபோன்று இன்றளவும் என் நினைவில் நீங்காமல் உள்ளது.
பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், மாலை நேர சிற்றூண்டியெல்லாம் அப்போது கிடையாது. அதற்கு பதில் தினையரிசியும், தேனும் கலந்த கலவையைப் பாட்டி கொடுப்பார். மிகவும் சுவையாக இருக்கும். அந்த ஊட்டம்தான் இன்றும் உடலுக்கு தெம்பு கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்ததும், 1 மணி நேரம் ஓடி ஆடி விளையாடச் சொல்வாங்க. விளக்கு வைக்கும் நேரம் வந்ததும். வீட்டிற்குள் வந்துவிட வேண்டும், சாமியை தொழுதுவிட்டு தினம் ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும். எங்கள் தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரும் மாலை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்துதான் விளையாடுவது, படிப்பது எல்லாம். எங்கள் தெரு குழந்தைகளில் யாராவது சரியாக வீட்டு பாடம் எழுதவில்லை, படிக்கவில்லை என்றால் அந்தப் பள்ளி ஆசிரியர் மீனு பாட்டியிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்களாம்.
அப்போதெல்லாம் பொழுதுபோக்கு சாதனம் எதுவும் இல்லாத காலம் என்பதால் வார இறுதி நாட்களில் கோயில், சினிமா தியேட்டர் என அழைத்துச் செல்வார். வாரத்திற்கு ஒருமுறை கொண்டத்து காளியம்மன், சாரதா மாரியம்மன் கோயிலுக்கு நிச்சயம் சென்று வர வேண்டும். கம்மாக்கரை வழியாகத்தான் அந்த கோயில்களுக்குச் செல்ல வேண்டும். அந்த இயற்கை அழகும், ரம்மியமான சூழலும் இன்னும் என் மனதில் பதிந்துள்ளது. வெளியே அழைத்துச் சென்றால், போகும்போது வண்டியில் சென்றால் வரும்போது நடந்துதான் வர வேண்டும். நடை பழக்கம் மிகவும் முக்கியம் என்பதால் இதனை வற்புறுத்துவார்.
சிறுவயதில் பாடப் புத்தகத்தை வைத்து படிக்கும்போது, பாட்டி சொல்வார். "சும்மா கடனேன்னு படிக்கக் கூடாது. நீ படிப்பதை கதைப்போன்று உள்வாங்கிப் படித்தால் அது எப்போதும் உன் மனதைவிட்டு விலகாது' என்பார். அப்படி படித்ததனால்தான் இன்னும் அவையெல்லாம் மனதில் நிற்கிறது.
என் அம்மாவும், அவரது சகோதரரும் "பாசமலர்' படத்தில் வரும் சிவாஜியும், சாவித்திரியும் போன்றவர்கள். ஒருமுறை அம்மா உடம்பு முடியாமல் இருந்தபோது, திருக்கழுக்குன்றம் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், அவரால் நடந்து செல்ல முடியாது என்பதால் அந்த ஆசையை அப்படியே மனதில் வைத்திருந்தார். இதை அறிந்த அவரது சகோதரர், அம்மாவை திருக்கழுக்குன்றம் மலையில் தூக்கிக் கொண்டு சென்று சாமி தரிசனம் செய்ய வைத்து அழைத்து வந்தார். இதிலிருந்து அம்மாவுக்கும், அவரது சகோதரருக்கும் உள்ள பாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.
நான் 6-ஆம் வகுப்பு முடித்ததும், சென்னை வந்துவிட்டேன். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள "சங்கீத விலாஸ்' இல்லத்தில் வசித்து வந்தோம். அந்த வீட்டை என் தாத்தா பரூர் சுந்தரம் ஐயர் இரண்டாம் உலக போரின் போது வாங்கினார். என் தாத்தா இசை பரம்பரையைச் சேர்ந்தவர். அதனால் எங்கள் வீட்டிற்கு எப்போதும் இசை கலைஞர்கள் வருவதும், போவதுமாக இருப்பார்கள். அதனால்தான் எங்கள் இல்லத்திற்கு "சங்கீத விலாஸ்' என்று பெயர்.
தாத்தா சுதந்திர போராட்ட வீரராகவும் இருந்தார். அதனால், பாரதியார் பாடல்களான " விடுதலை... விடுதலை' , "நெஞ்சு பொறுத்ததில்லையே...', "வஞ்சனை செய்வாரடி கிளியே...' போன்ற பாடல்கள் எங்கள் வீட்டில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்களையும் பாட வைப்பார்கள்.
அந்த காலத்தில் வீட்டில் வேலை செய்ய நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அப்போது பிராமண குடும்பம் என்றால் மடி ஆச்சாரம் என்பார்கள். ஆனால் அப்போதே எங்கள் வீட்டில் அந்த பேதம் எல்லாம் இருக்காது. வேலை ஆட்கள், நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம். சின்ன குழந்தையாக இருந்தாலும் மரியாதையுடன் தான் எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவார்கள்.
நான் ஏழாம் வகுப்பு சென்னையில் வந்து சேர்ந்ததும். இங்கிலீஷ் மீடியத்தில் என்னை சேர்த்துவிட்டார்கள். அதுவரை தமிழ் மீடியத்தில் படித்ததால். ஆங்கிலத்தை எளிதில் படிக்க முடியாமல் அம்மாவிடம் வந்து அழுவேன். என் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுப்பார். அம்மா நன்றாக ஆங்கிலம் பேசுவார். அதனால் ஆங்கில நாவல்களை கொடுத்து என்னை படிக்கச் சொல்வார். அதை படிக்க படிக்க எனக்கு ஆங்கிலம் புரிய ஆரம்பித்தது. பின்னர், நான் வகுப்பிலேயே முதல் ரேங்க் வாங்க ஆரம்பித்தேன்.
அம்மா எப்போதும் ரொம்ப நீட்டா டிரஸ் செய்து கொள்வார்கள். நாம் உடுத்தும் உடையை வைத்துதான் நம்மை மற்றவர்கள் மதிப்பார்கள். அதனால் எப்போதும் சுத்தமாகவும், நீட்டாகவும் ஆடை உடுத்திக் கொள்ள வேண்டும் என்பார். நம்முடைய பாரம்பர்ய உடைதான் அணிய வேண்டும் என்பார். அம்மாவுக்கு நீளமான தலைமுடி. அதனை எப்போதும் அழகாக வாரி, தினமும் பூச்சூடிக் கொள்வார். வாசனை உள்ள பூக்களை மட்டுமே சூடிக் கொள்வார்.
தினசரி காலை, மாலை இரண்டு வேளை குளிக்க வேண்டும் என்பார். அதுபோன்று கடவுள்தான் நம்மை எப்போதும் வழிநடத்தி செல்பவர், அதனால் கடவுளை தொழுவதை தினசரி செய்ய வேண்டும் என்பார். தினசரி காக்கா, குருவிக்கு அன்னம், தண்ணி வைப்பாங்க. இதை தினசரி கடமையாகக் கொண்டிருந்தார். அம்மா ஒவ்வொரு துவாதசி திதியிலும் பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்க வேண்டும் என்பார்கள். அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். பறவைகள், பசு, நாய் போன்ற ஜீவராசிகளிடம் அன்பாக இருந்தார். அதுபோன்று வெயில் காலம் வந்துவிட்டால் வீட்டு வாசலில் டிரம் நிறைய மோர் வைத்துவிடுவார். தெருவில் போவோர், வருவோர் என யார் வேண்டுமானாலும் மோரை எடுத்துக் குடிக்கலாம். அதுபோன்று பண்டிகைக் காலங்களில் வீட்டில் வேலை ஆட்களுக்கு எல்லாம் பட்டுப்புடவைதான் எடுத்துக் கொடுப்பார்.
எங்கள் வீட்டில் எப்போதும், புது புடவையும், வேட்டியும் இருந்து கொண்டே இருக்கும். வீட்டிற்கு தம்பதியாக யார் வந்தாலும் அவர்கள் கிளம்பும்போது தாம்பாளத்துடன் புடவை, வேட்டியும் வைத்துக் கொடுப்பார் அம்மா. ந ôன் ஆச்சரியமாக கேட்பேன். எப்படி புது புடவை எப்போதும் வைத்திருக்கிறாய் என்று. வெளியே போகும்போது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பார்.
அம்மா ரொம்பவும் சுறுசுறுப்பானவர். எல்லா வேலைகளையும் நிமிஷத்தில் முடித்துவிடுவார். நாங்கள் சிறுவயதில் ஒருநாள் கூட பள்ளிக்கு லேட்டாக சென்றதே கிடையாது. அந்த பழக்கம்தான் இன்று வரை நேரம் தவறாமையை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அதுபோன்று நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, தினசரி எங்கள் நோட்டு புத்தகங்களை கவனிப்பார்கள். அட்டை கொஞ்சம் கிழந்தோ, அழுக்காவோ இருந்தால் உடனே வேறு அட்டைப்போட்டு வைத்துவிடுவார்கள். என் பள்ளி தோழிகள் முதல் டீச்சர் முதல் அனைவரும் கேட்பார்கள் ""எப்படி உன் நோட்டு புத்தகம் மட்டும் எப்போதும் புதிதாகவே இருக்கிறது?''. எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்பார்கள். பாட்டியும் சரி, அம்மாவும் சரி அருமையாக சமைப்பார்கள். அம்மா கை வேலை செய்வது, கோலம் போடுவது என எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்.
ஒருமுறை எனக்கு டிரஸ் வாங்க துணிக் கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே எனக்கு பிடித்த டிரஸ்ûஸ தேர்வு செய்து அம்மாவிடம் சொன்னபோது, அந்த டிரûஸ வாங்க அம்மாவிடம் போதிய பணம் இல்லை. ஆனால், இதை எங்களிடம் சொல்லாமல், பேசிக் கொண்டிருங்கள் வரேன் என்று சொல்லிவிட்டு. ஆட்டோ பிடித்து வீடு வந்து தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு வந்து துணிக்கடையில் கொடுத்துவிட்டு, நான் ஆசைப்பட்ட டிரஸ்ûஸ எனக்கு வாங்கிக் கொடுத்தார். இதையெல்லாம் எப்போதும் மறக்க முடியாது.
ஆதிசங்கரர் மாத்துருகா பஞ்சகத்தில் தாயைப் பற்றி 5 ஸ்லோகம் எழுதியிருப்பார். அதைப்போன்று வாழ்ந்தவர் என் அம்மா.
என் அம்மாவும் -அப்பாவும் அப்படியொரு ஆதர்ச தம்பதிகள். அத்தனை அன்னியோன்யம். ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அம்மா இறக்கும் சமயத்தில் சொன்னாங்க. ""நான் இறந்துபோய்விடுவேன்னு கவலைப்படாதே. நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன்'' என்று. அதிலிருந்து இன்றுவரை அம்மா என் கூடவே இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
அம்மாவின் ஆசியால்தான் எனக்கு அன்பான கணவர் வீடு அமைந்தது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. எங்கள் மகள்களுக்கு திருமணமாகி பேரன், பேத்தி எடுத்துவிட்ட நிலையிலும் என் கணவர் கனக சபேசன் இன்றும் என்னை ஒரு குழந்தையைப் போன்று பார்த்துக் கொள்கிறார். இந்த கொடுப்பினை யாருக்கு கிடைக்கும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...