உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சர்வதேச சாதனை மகளிர் பட்டியலில் இந்திய பெண்மணி!

பிபிசி 2018 ஆண்டிற்கான "சாதனை மகளிர்' பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் அறுபது நாடுகளை சேர்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர். நூறு பெண்களில், மூன்று இந்திய பெண்களும் அடங்குவர்.

News image
Updated On :29 நவம்பர் 2018, 10:26 am IST

பிபிசி 2018 ஆண்டிற்கான "சாதனை மகளிர்' பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் அறுபது நாடுகளை சேர்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர். நூறு பெண்களில், மூன்று இந்திய பெண்களும் அடங்குவர். கேரளத்தில் "பெண் கூட்டு' அமைப்பின் பொறுப்பாளராக இருக்கும் பி. விஜி, அந்த மூன்று இந்திய பெண்களில் ஒருவர். விஜி பெண்களுக்குச் செய்திருக்கும் மகத்தான சேவை என்ன? விஜி அப்படி என்ன சாதனை புரிந்தார் என்று பிபிசி சாதனை மகளிர் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது?
ஜவுளி கடைகளில் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் பெண்கள் வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ ... காலை முதல் கடை பூட்டப்படும் வரை நின்று கொண்டு இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் எல்லா ஜவுளி கடைகளிலும் இந்த சூழல்தான். கேரளம் அதற்கு விதி விலக்கல்ல. இனி ஜவுளி கடைகளில் பணி புரியும் பெண்கள் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கத் தேவையில்லை. "பணியின் நடுவில் நாற்காலியில் அல்லது ஸ்டூலில் அமர்ந்து கொள்ளலாம்' என்று கேரள அரசு சட்டத்தைத் திருத்தியுள்ளது. "பணியின் நடுவில் நாற்காலியில் அல்லது ஸ்டூலில் அமர உரிமை வேண்டும்' என்று நடத்தப்பட்ட போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் பி. விஜி.
விஜிக்கு ஐம்பது வயதாகிறது. உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர். அவரும் தொழிலாளிதான். "நான் அடிப்படையில் ஒரு தையல் தொழிலாளி. இருபத்திரண்டு வயதிலேயே தோழி அஜிதாவுடன் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டேன். சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை. அவர்களுக்குத் தொழில் சங்கமும் இல்லை. எங்களின் போராட்டம் கடைகளில் வேலை செய்யும் பெண்களின் நலன் கருதி தொடங்கப்பட்டவை. சிறு கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு இயற்கை அழைப்பை நிவர்த்தி செய்ய, சிறு நீர் கழிக்க வசதி அந்தந்த கடைகளில் இருப்பதில்லை. அதனால் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டிய கட்டாயம். தாகத்திற்கு தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். குடித்தால் சிறுநீர் போக வேண்டுமே. மதிய உணவு கூட பெயருக்குத்தான் உண்பார்கள். மாலை வேலை முடிந்து இரவில் வீடு சென்ற பிறகுதான் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருப்பதால், காலக் கிரமத்தில் பல் வேறு நோய்கள் வந்துவிடுகின்றன. "அந்த மூன்று' நாட்களில் வேலைக்கு வரும் பெண்கள் கழிப்பறையில்லாமல் படும் கஷ்டத்தைப் பற்றிச் சொல்லி முடியாது. இதை அனுபவத்தில் உணர்ந்த நானும் பாதிக்கப்பட்ட பெண்களும் சேர்ந்து சில கடைகளுக்கு ஒரு கழிப்பறையாவது வேண்டும் என்று நான்கு ஆண்டுகளாகப் போராடினோம். ஆரம்பத்தில், பெரிய சிறிய கடை முதலாளிகள் ஆட்சேபித்தார்கள் . போகப் போக வேலைக்கு வரும் பெண்களின் பரிதாப நிலையைப் புரிந்து கொண்டு கழிப்பறையைக் கட்டிக் கொடுத்துள்ளனர். இது கள்ளிக்கோட்டை நகரில் கேரளத்தில் பிரபலமான மிட்டாய் அங்காடியில் நடந்தது. எங்களது கோரிக்கையை முறையான தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாததால், எங்களுக்கென்று ஓர் அமைப்பு வேண்டும் என்று ஒன்று சேர்ந்தோம். எங்கள் அமைப்பான "பெண் கூட்டு' 2009-இல் துவங்கப்பட்டது.

Story image

"பெண் கூட்டு' உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது சென்ற ஜுலை மாதம்தான். ஜவுளி கடைகளில் விற்பனை வேலைகளை செய்து வரும் பெண்கள் நாள்முழுவதும் ஆண்டு முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் பணியிடையே அமர நாற்காலியோ அல்லது ஸ்டூலோ தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். போராட்டங்கள் நடத்தினோம். பணி நேரத்தை வரையறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம். நல்ல வேளை... எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்த கேரள அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.
கடையில் உட்கார்ந்து வேலை செய்வதுடன், ... கழிவறை வசதிகள் வேண்டுமென்றால் வீட்டில் இருந்து கொள்ள வேண்டியதுதான்.. வேலைக்கு வர வேண்டாம் என்று கடை உடைமையாளர்கள் முரண்டு பிடித்தார்கள். நாங்களும் போராட்டத்தை விடவில்லை. தொடர்ந்தோம். சென்ற மாதம் எங்களது கோரிக்கைகளில் நியாயத்தை உணர்ந்த கேரள அரசு சிறு கடைகளில், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சட்டத்தை மாற்றி அமைத்தது. அதனால், இனி வேலையாட்கள் குறிப்பாகப் பெண்கள், நாள் முழுவதும் நின்று கொண்டிருக்க வேண்டியதில்லை. தரப்படும் நாற்காலியிலோ அல்லது ஸ்டூலிலோ அமர்ந்து கொள்ளலாம். எங்கள் அமைப்பில் சிறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஆண்களும் உறுப்பினர்கள். ஆனால் அமைப்பின் பொறுப்பாளர்கள் பெண்கள்தான்.
சலவைத் தொழிலாளிகளாக இருக்கும் பெண்களுக்கும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என்பதும் அவர்கள் தேர்தலின் போது வாக்களிக்க விடுமுறை தரப்பட வேண்டும் என்பதும் எங்களது அடுத்த கோரிக்கை. பொதுவாக தனியார் துறையில் சிறு சிறு வேலை செய்யும் பெண்களுக்கு ஆண் தொழிலார்கள் போல எட்டுமணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, மீதி எட்டு மணி நேரத்தில் குடும்ப வேலைகள், பொழுதுபோக்கு என்று வரையறை செய்யப்படவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறோம்.
- பிஸ்மி பரிணாமன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.