நடுத்தரக் குடும்பப் பெண்கள் உத்தியோகத்துக்குப் போக வேண்டிய அவசியத்துக்கு நடுவே குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வாழ்கின்றார்கள். அந்த வகையில், அதிலும் 42 வயதில் கணவர் தவறிவிட கையில் பெண் குழந்தையையும் படிக்கும் வயதில் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டிய நிலை உருவானது வத்சலாவுக்கு. வேலைக்குப் போய் போராட்டத்துக்கு நடுவே குழந்தைகளையும் படிக்க வைத்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து முடித்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பெரும்பாலான பணியாளர்களுக்கு சாரி மாமி என்று சொன்னால் நன்கு தெரியும் . இயற்பெயர் வத்ஸலா ஏ சாரி. சீனுவாசன்- ஆண்டாள் தம்பதியர்க்கு மகளாக 1940 -ஆம் ஆண்டு சாரி மாமி பிறந்தார். சென்னையிலேயே வளர்ந்தார். ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு. ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயாவில் கல்வி .
அப்பா மத்திய பாதுகாப்புத்துறையில் வெளியூர்களிலேயே பணியாற்றியவர். அதனால் அம்மாவின் பராமரிப்பின் தாக்கம் நிறையவே பதிந்தது. பாட்டியுடன் மாலை வேளைகளில் கோயில் உபன்யாசங்களுக்கு சென்று வந்தது அடுத்த படிக்கட்டாக அமைந்தது .
பாலகிருஷ்ண சாஸ்திரிகள், அனந்தராம தீட்சிதர் போன்றோர் உபன்யாசங்கள் பக்குவப்பட உதவியது . பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஒவ்வொரு நாளும் ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி தனது உரையை தொடங்குவார்.
முதல் நாள் பாட்டியோடு போன போது கேட்ட ஸ்லோகத்தை மனதில் வாங்கிக் கொண்டு மறுநாள் வீட்டில் இருக்கும்போது அந்த ஸ்லோகத்தை கார்பன் பேப்பர் வைத்து பென்சிலால் எழுதி கொண்டு போய் பலருக்கும் கொடுத்த பணி ஆன்மிக ஈர்ப்பை வெளிப்படுத்தியது. மாலை சாஸ்திரிகளிடம் ""நீங்கள் சொன்னதை எழுதி இருக்கிறேன். சரியாக இருக்கிறதா என பாருங்கள்'' எனக் கூறியிருக்கிறார். சிறு பிழைகளை சரி செய்து கொள்ளச் சொல்லி அன்றைய உபன்யாசத்தை தொடங்குமுன் இதைப்போல் நல்ல விஷயங்கள் நாலு பேருக்கு கிடைக்க செய்தால் நாடும் மக்களும் சுபிட்சமாக இருப்பார்கள் என்றிருக்கிறார்.
மறுநாள் வீட்டில் ஒரு பேப்பரை எடுத்து எட்டாக மடித்து கிழித்து கார்பன் பேப்பர் வைத்து பிழையில்லாமல் எழுதி எடுத்துக் கொண்டு போய் உபன்யாசம் தொடங்குமுன் வருபவர்களுக்கெல்லாம் கையில் கொடுத்திருக்கிறார் . சாஸ்திரிகள் உபன்யாசம் தொடங்கும்போது எல்லோரும் அதனை சேர்ந்து படிக்கவே விஷயத்தை கேள்விப்பட்டு வத்சலாவை மேடைக்கு அழைத்து ஆசீர்வதித்து "உன்னால் ஏதோ ஒன்று நடைபெற வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் நல்லபடியாக நடக்கும்' என்று கூறி அனுப்பியிருக்கிறார்.
1963-இல் திருமணம் நடந்து கணவன் செல்லும் ஊர்களுக்கெல்லாம் சென்று வந்துள்ளார். இந்நிலையில், 1982-இல் திடீரென கணவர் காலமாகிவிட குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சேர்ந்தது. ஏர்லைன்ஸ் ஏஜென்சி, தோல் பதனிடும் தொழிற்சாலையில் பர்ச்சேஸ் பிரிவு, ஹம்சத்வனி சபா நிர்வாகப்பிரிவு , பிபிஎல், எல்.ஜி, ஸ்ரீராம் குரூப் ஆகியவற்றில் கொள்முதல் மற்றும் விற்பனைப் பிரிவுகளில் காலநேரம் பாராது பணிபுரிந்து கொண்டு மகன்மகளையும் காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழலில் தன் தாயார் தனக்கு கூட இருந்து உதவியதையும் நினைவு கூறுகிறார்.
1982 முதல் 2001 வரை பணியாற்றியவர் சிறிது நாளில் அருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் வர, விட்ட இடத்திலிருந்து தொடங்கியது. மகளுக்கு வேலையும் மணமும் முடிந்த கையோடு கிராமத்திலிருந்த சொத்துகளையும் விற்று முதலீடாகச் செய்தார்.
2002 -2004-க்குள் 106 திவ்ய தேசங்களையும் நேரில் போய் தரிசித்து ஆழ்வார்கள் பாசுரங்கள் உடன் ஒப்புநோக்கி அனுபவித்து வந்தார். 2004-இல் எங்கும் சுற்றி ரங்கன் சேவை என்பதற்கேற்ப ஸ்ரீரங்கம் வந்தவர் அரங்கனின் பார்வையைப் பிரிய முடியாமல் கையிலிருந்த நிதி கொண்டு ஒரு வீடு வாங்கி ஸ்ரீரங்கத்திலேயே தங்கினார்.
2004 முதல் ஸ்ரீரங்கம் சாரி மாமியை வெகுவாகவே ஈர்த்துவிட்டது. அரங்கனின் அழகும் ஆதிசேஷனின் கம்பீரமும் மேலும் கண்டு உய்த்துணரச் செய்தன அரங்கன் முன்னில் நிற்கும்போது ஆதிசேஷன் அவரிடம் பேசுவதாகவே உணர்ந்தார்.
ஆயிரம் தலைஆதிசேஷன் நாராயணனுக்கு உற்றவன். திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு அவதாரமாக இருந்தவர். ராமாவதாரத்தில் , இலக்குவனாக இருந்தவர் பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக. வாசுகி பாம்பின் சகோதரனாக, ஆழ்வார் திருநகரியில் புளியாழ்வாராக . எல்லாவற்றுக்கும் மேலாக வைணவ தலைமை ஆசாரியரான ஸ்ரீராமானுஜராக அவதரித்த சிறப்புக் கொண்டவர் .
இவை எல்லாம் வைணவத்தை முற்றும் உணர வேண்டும் என ஒரு அவாவை உண்டாக்கியது. அதன் தொடர்பாக அங்கு நடந்த பயிற்சி வகுப்புகளில் இரண்டு ஆண்டுகள் பயின்று முழுவதும் கற்று உணர வேண்டிய பயிற்சியை ஒன்றரை ஆண்டுகளிலேயே முடித்து தகுதியின் அடிப்படையில் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ என்ற அருட்பட்டமும் பெற்றார்.
ஆதிசேஷனின் ஈர்ப்பினால் அது குறித்து தகவல்களைத் தொகுக்கத் தொடங்கினார். அதை பலரும் அறிய செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. 2007-ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஆதிசேஷன் பற்றிய தகவல்களை தமிழில் 5 பெரும் தலைப்புகளில் 54 உபதலைப்புகளில் தொகுத்து "ஸ்ரீ ஆதிசேஷன்' என்ற பெயரில் இதுவரை வெளிவராத ஒரு நூலை தயார் செய்து அச்சிட்டார்.
2009 -ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பினை செய்தார். ஸ்ரீரங்கத்தில் பல மொழி பேசும் மக்களும் வருகை தருவதை கண்டு அவர்களிடம் பேசும்போது அவர்கள் தங்கள் மொழியில் இதைப்போன்ற புத்தகம் வந்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னதை மனதில் பதித்துக் கொண்டவர்.
தமிழ், ஆங்கிலம், கன்னடம், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் ஆதிசேஷன் பற்றி புத்தகமாக வெளியிட்டார்.
புத்தகங்கள் நிதி உதவி செய்த நிறுவனத்திற்குக் கொடுத்தது போக ஈடுபாட்டோடு படிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து, மீதி புத்தகங்களை கோயில்களில் கொடுத்து விற்பனை செய்து அந்தத் தொகையை கோயில் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லும் பேருள்ளம் இவருடையது.
"என்னால் முடிந்ததை ஆன்மிகத்திற்கும் வைணவத்திற்கும் செய்துள்ளேன். என் தொகுப்பின் பலன் மக்களுக்குச் சென்றடைந்தால் நான் பேறு பெற்றவளாவேன்' என்கிறார் இந்த 80 வயது மாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


