கரோனா: இருட்டிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்!
நீங்கள் அறிகுறியற்றவராக இருக்கிறீர்கள், ஆனால் கரோனா டெஸ்ட் பாசிட்டிவ் ஆனதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா?


விளக்குகிறார் மருத்துவர் மீனாட்சி பரமசிவன்
சென்றவார தொடர்ச்சி...
நீங்கள் அறிகுறியற்றவராக இருக்கிறீர்கள், ஆனால் கரோனா டெஸ்ட் பாசிட்டிவ் ஆனதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா?
கவலைப்பட வேண்டாம். நீங்கள் இன்னும் அறிகுறியற்றவராக இருப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள், அரசாங்கம் உங்களை வீட்டிலேயே தங்க அனுமதித்துள்ளது. இணைக்கப்பட்ட கழிப்பறை, குளியலறை வசதியுடன் இருக்கும் ஒரு அறைக்குள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அத்தகைய வசதி இல்லையென்றால், அதற்கு பதிலாக இரண்டு குளியலறைகள், கழிப்பறைகள் தான் உள்ளது என்றால், உங்களுக்காக ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், மற்றொன்றை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்வதனால் யாரும் உங்கள் கழிப்பறையையோ நீங்கள் உபயோகிக்கும் சோப்பு, பிரஷ் போன்றவற்றையோ விட்டு விலகியிருப்பார்கள், ஏனெனில் உமிழ்நீரில் இருந்து சிறுநீர் உட்பட அனைத்து உடல் திரவங்களிலும் கரோனா வைரஸ் இருக்கக்கூடும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் தொலைவில் காணலாம் மற்றும் முகக்கவசம் அணிந்தபடி அவர்களுடன் பேசலாம். மருத்துவமனையில் தனியாக இருப்பதைவிட இது சிரமமில்லை அல்லவா.
அருகிலேயே கொவைட் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதன் காரணமாக உங்கள் வீடோ, தெருவோ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதா?
கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டிற்குள் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். உங்கள் வீதி, பகுதி, சமூகம் அல்லது குடியிருப்புகளில் பரவியிருக்கும் கிருமித்தொற்று சங்கிலியாக தொடராமல் இருக்கவே வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
முதல் விஷயம், நீங்கள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் பூட்டப்பட்டுள்ளதை உங்கள் அலுவலகத்திற்கு தெரிவிக்கவும், 2 வாரங்களுக்கு விடுப்பு விண்ணப்பிக்கவும். நீங்கள் ஏற்கெனவே வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், நீங்கள் புதிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை! சந்தோஷமாக இருங்கள்.
உங்கள் அன்றாட தேவைகளை கவனித்துக்கொள்வதற்காக அரசாங்கம் உங்கள் பகுதிக்கு தன்னார்வலர்களை நியமிக்கிறது. இதனால் நீங்கள் எதற்காகவும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்.
தன்னார்வலர்கள் முழுமையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (Personal protective equipment) (PPE), அணிந்து கொண்டு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். உங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து அவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
வெளியில் இருந்து எதையும் வாங்கிய பிறகு கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். உங்கள் பால் பாக்கெட்டுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கம் போல் மிதமான சூடு உள்ள தண்ணீரில் கழுவவும், அவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பதற்கு முன் சூரிய ஒளியில் உலர அனுமதிக்கவும்.
கொவைட் பற்றி பீதி அடைய வேண்டாம். இது உங்கள் சுற்றுப்புறத்தை அடைந்துவிட்டதால், அது உங்களையும் வந்தடையும் என்று நினைக்க வேண்டாம். அவ்வாறு நடந்தே ஆகவேண்டும் எனும் அவசியமில்லை. மேலும் மேற்கூறிய நடவடிக்கைகளை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றினால் கரோனா பற்றி அதிகம் கவலைபடத் தேவையில்லை.
நீங்கள் டாக்டர் அல்லது சுகாதாரப் பணியாளரா?
உங்கள் கரோனா சோதனை ரிப்போர்ட் "பாசிட்டிவ்' என்று வரும்வரை காத்திருக்க வேண்டாம். யாருக்குத் தெரியும், நீங்கள் கரோனாவின் அறிகுறி இல்லாமல் கிருமியை அல்லது நோயை சுமப்பவராக இருக்கலாம். நீங்கள் கடைசி வரை அறிகுறியில்லாமல் இருக்கலாம் அல்லது திடீரென அறிகுறிகளைக் காட்டலாம் மற்றும் நோய்வாய்ப்படலாம்.
வருடக்கணக்கில் அனைத்து வகையான நோய்க்கிருமிகளுடன் வேலை செய்ததன் காரணமாக பெரும்பான்மையான மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவின் அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அப்படி இல்லை. அவர்கள் உங்களிடமிருந்து தொற்றுநோயைப் பெற்று, உங்களுக்கு முன் நோயை வெளிப்படுத்தலாம். உங்கள் காரணமாக உங்களின் அன்புக்குரியவர்கள் நோய்வாய்ப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி நடக்க யாரும் விரும்பமாட்டீர்கள் அல்லவா?
பிறகு என்ன செய்வது? நீங்கள் மருத்துவமனைக்கு செல்வதை நிறுத்தி விடலாமா? பல வருடங்களாக மருத்துவம் படித்ததற்கும் பல ஆண்டுகளாக மருத்துவப்பணி செய்வதற்கும் என்ன பயன்? நீங்கள் உங்கள் கடமையை மறுக்க முடியாது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூகத்திற்கு சேவை செய்யவேண்டிய நேரம் இது. எனவே தனிப்பட்ட வாழ்க்கையையும் மருத்துவ வாழ்க்கையையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது? என கேட்டால்,
அறிகுறியற்ற கரோனா பாசிட்டிவ் நபர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேனோ அதேபோல் வீட்டில் சுய தனிமைப்படுத்தலைப் (self isolation) பயிற்சி செய்யுங்கள், கடைபிடியுங்கள். உங்களுடைய பெற்றோர் அல்லது மாமனார் வீடு நீங்கள் வசிக்கும் அதே நகரத்திலோ அல்லது பகுதியிலோ இருந்தால், தயவுசெய்து உங்கள் குடும்பத்தை அவர்களுடன் விட்டுவிடுங்கள். வீட்டில் தனியாக இருங்கள் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பிபிஇ அணிந்து பாதுகாப்பாக பயிற்சி செய்யுங்கள். நீங்கள் நோயால் பாதிக்கப்பட நேர்ந்தாலும் உங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க இதுவே சிறந்த வழியாகும்.
தொற்றுநோய் முடியும் காலம்வரை நாம் தனிமையில் தான் இருந்தாக வேண்டும். அதைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். கரோனாவிற்கு எதிரான போரில் ஒரு சிப்பாயாக ஒரு பாத்திரம் வகிக்கிறீர்கள் என்று பெருமிதம்
கொள்ளுங்கள்.
உங்களை மரண பயம் துரத்துகிறதா ?
நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் என்ன வேலை செய்தாலும், நோயின் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் இறுதியில் எல்லோரும் ஒரு முக்கிய காரணியான மரணத்திற்காகவே பயப்பட வேண்டியுள்ளது.
பூமியில் பிறந்தவர் எல்லாம் ஒரு நாள் இறந்துவிடுவர் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பொதுவாக, அந்த நாள் நம்மை விட்டு மிகவும் தொலைவில் உள்ளதாய் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். முதுமையின் காரணமாக வரும் மரணத்தை நம்மால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் கரோனா காரணமாக உண்டாகும் திடீர் மரணத்தை அல்ல.
ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்: நீங்கள் கரோனாவினால் இறக்கப் போவதில்லை, மேலும் உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்கள் எவரையும் கரோனா தொற்றுக்கு இறக்க அனுமதிக்கப் போவதில்லை என்ற மனவலிமை
யுடன் இருங்கள்.
அரசின் வழிகாட்டுதல்களின்படி சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். எந்த சந்தேகமானாலும் ஹெல்ப்லைனை அழையுங்கள். மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது. எனவே தான் மனிதகுலம் பூமியில் இன்னும் உயிரோடு இருக்கிறது!
இவை அனைத்தும் புரிந்தும் உங்களால் தூங்க முடியவில்லை என்றால், செய்தி சேனல்களைப் பார்ப்பதை நிறுத்துங்கள், எல்லா வாட்ஸ் ஆப் பார்வர்டுகளை படிப்பதையும் நிறுத்துங்கள், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரியுங்கள், ஒரு நல்ல புத்தகத்தைப் படியுங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள்.. ஓய்வெடுங்கள்... சுவாசப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்து பழகுங்கள். வாழ்க்கை எப்படி வருகிறதோ வரும்போது அப்படியே எதிர்கொள்ளுங்கள்... நீங்கள் மட்டும் தான் நரகத்தின் வழியே செல்லும் ஒரே நபர் அல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகம் முழுவதும் உங்களுடன் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே நிதானமாக இருங்கள். அமைதியாக தூங்கி நன்றாக கனவு காணுங்கள்.
சில வைட்டமின் வரிகள்:
உங்களை நீங்கள் நேசிக்க பழகுங்கள்.
நீங்களே உங்களின் எஜமானர்.
உங்கள் உடலை மற்றவர்களை விட நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆரோக்கியமே செல்வம்.
ஆக்கப்பூர்வமான (பாசிட்டிவ்) சக்தியினை அதிகம் பரப்புங்கள் - நீங்கள் கரோனா டெஸ்டில் நெகடிவாக இருக்க அது உதவும்.
குணப்படுத்துவதை விட நோய் தடுப்பு எப்போதும் சாலச் சிறந்தது.
கரோனா நோய்க்கு எதிரான சிறந்த கவசம் உங்களிடம் தான் உள்ளது - உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி.
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள், நல்ல விஷயங்கள் உங்களிடம் திரும்பிவரும்.
கடவுளை நம்புங்கள்! மற்றவற்றை அவர் கவனித்துக்கொள்வார்!
ஒவ்வொரு வரியும் உங்களுக்கு சுய விளக்கமளிக்கும்.
கரோனா தொற்றுநோயைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், நம் அனைவருக்கும் நமது குடும்பத்துடன் இருக்க அதிக நேரம் கிடைத்துள்ளது, இது உங்களுக்கு முன்பு எப்போதுமே இருந்ததில்லை!
உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிப் பழகிப் பாருங்கள், உங்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன, அவர்கள் உங்களிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு நிலை என்ன, அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை எளிதாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
சுய ஒழுக்கம்: கோபம் கொண்ட கரோனா சிங்கம் கடுமையாக கர்ஜித்து சாலைகளில் சுற்றி வருகிறது. அதனால் இது நாம் வீட்டிற்குள் இருக்கும் நேரம். ஆனால், விரைவில் சிங்கத்தை கூண்டுக்குள் தள்ளி தடுப்பூசி உதவியுடன் பூட்டும் ஒரு நாள் வரும், அப்போது நாம் சுதந்திரத்துடன் வீதியில் சுற்றித் திரிவோம்.
மறவாமல் இருக்க : கரோனாவுக்கு சுயமரியாதை அதிகம் - நீங்களாக அழைக்காமல் அது உங்களுக்குள்ளோ அல்லது உங்கள் வீட்டிற்குள்ளோ நுழையாது! எனவே பாதுகாப்பாக இருங்கள்! ஆரோக்கியமாக இருங்கள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...