ஏக் தோ தீன்- பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்!
சரோஜ்கான் மூன்று முறை தேசிய விருது பெற்றவராவர். பாலிவுட்டில் அனைவராலும் "மாஸ்டர்ஜி' என அன்புடன் அழைக்கப்பட்ட சரோஜ்கான், 40-ஆண்டுகளில் தமிழில் "தாய்வீடு', "இருவர்', "சிருங்காரம்' உள்பட 700-க்கும்


சரோஜ்கான் மூன்று முறை தேசிய விருது பெற்றவராவர். பாலிவுட்டில் அனைவராலும் "மாஸ்டர்ஜி' என அன்புடன் அழைக்கப்பட்ட சரோஜ்கான், 40-ஆண்டுகளில் தமிழில் "தாய்வீடு', "இருவர்', "சிருங்காரம்' உள்பட 700-க்கும் மேற்பட்ட படங்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஹிந்தியில் மாதுரி தீட்சித்திற்கு அனைத்து படங்களிலும், நடன இயக்குநராக இருந்தது போல், ஸ்ரீதேவியுடனும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
வைஜெயந்திமாலா தொடங்கி 90-களில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி வரையிலும், பின்னர் 2000-ஆம் ஆண்டில் கரினா கபூர் தொடங்கி 2019- ஆம் ஆண்டில் கங்கனா ரணாவத் வரை நடன இயக்குநராக இருந்துள்ளார். தேவதாஸ் ( 2002) சிருங்காரம் ( தமிழ் 2008) ஜப்வி மெட் (2008) ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்ற சரோஜ்கான், எந்த நடன இயக்குநரும் பெற்றிராத வகையில் எட்டுமுறை ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.
இவர் நடனம் அமைத்த பாடல்களில் "ஏக் தோ தீன்' ( தே ஜாப்) "சோலி கே பீச்சே க்யாஹை' ( கல்நாயக்) "தக்தக் கர்னே லகா' ( பேட்டா) "ஹம்கோ ஆஜ் கல்ஹை' ( சைலாப்) "ஹவா ஹவா' ( மிஸ்டர் இந்தியா) "டோலா ரே டோலா' ( தேவதாஸ்) போன்ற பாடல்களுக்கான நடனங்கள் பிரபலமானதாகும். அதேபோல் "நாகினா' படத்தில் ஸ்ரீதேவிக்காக இவர் அமைத்து தந்த பாம்பு நடனங்கள் பெரிதும் பேசப்பட்டன.
கராச்சியில் பஞ்சாபி சிந்தி பெற்றோர்களுக்கு பிறந்த நிர்மலா, பிரிவினைக்குப் பின் மும்பையில் மாஹிம் என்ற இடத்தில் ஒரே ஓர் அறை கொண்ட வாடகை வீட்டில் பெற்றோருடன் குடியேறினார். வறுமையின் காரணமாக பக்கத்து வீட்டார் நடத்திய உணவு விடுதியில் மீதமாகும் உணவுகள் இவர்கள் பசியைப் போக்க உதவியது என்று 2014-ஆம் ஆண்டு சரோஜ்கான் பற்றி வெளியான ஆவணப் படத்தில் சரோஜ்கானே கூறியிருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்தவர், பிரபல நடன இயக்குநர் சோஹன்லானிடம் உதவியாளராகச் சேர்ந்து பயிற்சி பெறுவதற்குமுன் செவிலியர் பயிற்சியும் பெற்றிருந்தார்.
இந்திய நடனங்கள், கிராமிய நடனங்கள், இந்திய - மேற்கத்திய நடனங்கள், கதக் என பல்வேறு நடனங்களை சோஹன்லால் மூலம் கற்றுக் கொண்டவர் ஒரு கட்டத்தில் சோஹன்லால் மீது காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விலகி. சர்தார் ரோஷண்கான் என்ற வர்த்தகரை திருமணம் செய்து கொண்டவர் சரோஜ்கான் என பெயர் மாற்றமடைந்தார்.
எழுபதுகளில் ஹிந்தி திரையுலகில் பி.எல். ராஜ், கோபிகிருஷ்ணா, பத்ரி பிரசாத், ஹெர்மன் பெஞ்சமின் போன்ற ஆண் நடன இயக்குநர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பெண்கள் உதவியாளர்களாக மட்டுமே இருந்தனர். முதல் பெண் நடன இயக்குநராக சரோஜ்கான் நுழைந்தபோது சவால்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
"கீதா மேரா நாம்' ( 1974) படத்தின் வெற்றிக்குப் பிறகே இவரது திறமை வெளிப்படத் துவங்கினாலும், "ஹீரோ' (1983) படத்திற்குப் பின்னரே முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு, பாலிவுட்டில் அனைவராலும் மாஸ்டர்ஜி என்று அழைக்கும் பெருமையைப் பெற்றார். நடன அசைவுகளின் மூலம் பாடல் வரிகளின் அர்த்தத்தைப் புரிய வைக்கும் திறமை மிக்கவர் என்று அமிதாப்பச்சனால் புகழப்பட்ட சரோஜ்கான் உடல் நலக் குறைவால் தனது 71-ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு பாலிவுட்டை பொருத்தவரை மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...