சளி, இருமலைத் துரத்தும் அதிமதுரம்

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
சளி, இருமலைத் துரத்தும் அதிமதுரம்


அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அநேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

இருமல் நீங்க

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம் வறுவலாக வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

மலச்சிக்கல் நீங்க

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உள் உறுப்புகள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

வரட்டு இருமல் நீங்க

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

நெஞ்சுச் சளி நீங்க

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

தலைவலிகள் நீங்க

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட  தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1-2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த

பொதுப் பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com