புகழைப் பாடும் அழகோவியங்கள்!

புகழைப் பாடும் அழகோவியங்கள்!

அழகான வண்ண ஓவியங்களுடன் அற்புதமாக காட்சியளிக்கிறது  தாம்பரம் ரயில் நிலையத்தின் நுழைவாயில் சுவர். இதற்கு  காரணமானவர் இளம் வயது ஓவியர் வர்ஷினி ராமகிருஷ்ணன்.

அழகான வண்ண ஓவியங்களுடன் அற்புதமாக காட்சியளிக்கிறது  தாம்பரம் ரயில் நிலையத்தின் நுழைவாயில் சுவர். இதற்கு  காரணமானவர் இளம் வயது ஓவியர் வர்ஷினி ராமகிருஷ்ணன்.

கரோனா நோய்த்தொற்றை எதிர்த்து பணி புரிந்துவரும் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், அத்தியாவசிய சேவைகள் புரிந்து வரும் காய்கறி விற்பனையாளர்கள், பால், செய்தித்தாள், தண்ணீர் மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் என அனைவரையும் பெருமைப்படுத்தும்வண்ணம் அந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.  யார் இந்த வர்ஷினி?

சென்னையின் நிஃப்ட் கல்லூரியில் ஆக்ஸசரி டிசைனிங் எனும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், இத்தாலி நாட்டில் லக்சரி டிசைனிங் மற்றும் பிராண்ட் மேனேஜ்மென்ட் எனும் மேற்படிப்பை முடித்து திரும்பியிருக்கிறார். குறிப்பாக அலுவலகங்கள், உணவகங்கள் போன்றவற்றின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அவற்றை வடிவமைப்பது, அவற்றின் ஊழியர்களின் உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பைகள் ஆகியவற்றையும் வடிவமைத்துக் கொடுப்பது ஆகிய பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறார் இந்த வர்ஷினி.  எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது? வர்ஷினி சொல்கிறார்: 

""சென்னையைச் சேர்ந்த  அறக்கட்டளை ஒன்றும், ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையமும் இணைந்து தாம்பரம்  ரயில் நிலைய சுவரில் ஓவியம் வரைவதற்காக என்னை  அணுகினார்கள். இந்த முயற்சியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எண்ணற்ற சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. 

பொது முடக்கம் அமலில் இருந்ததால் வேலை செய்யத் தொடங்குவதற்கு முன்பு சுவரின் பரிமாணங்களைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சுவரின் புகைப்படங்களை வைத்தே ஐபாட் மூலம் ஓவியங்களை வரைந்து வடிவமைக்கும்  வேலையைத் தொடங்கினேன். ஓவியங்களை வடிவமைத்ததும், ஓவியர்கள் நேரில் சென்று வரைவதே வழக்கம். ஊரடங்கின் காரணமாக நேரில் சென்று ஓவியங்களை வரைய முடியாததால், அவற்றை அச்சிட்டு சுவரில் ஒட்ட ஏற்பாடு செய்தோம்.

நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்காக அவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்களாகவே தேர்ந்தெடுத்து பயன்படுத்தினேன்.  இந்தப் பணியை செய்து முடிப்பதற்கு எனக்கு ஒரு மாதம் ஆனது. விரைவில் ரயில் நிலையங்கள் செயல்பட தொடங்கியதும், தாம்பரம் ரயில் நிலையத்தை நீங்கள் கடக்கும் போது உங்கள் கண்களில் இருந்து  தப்பவே முடியாத இந்த அழகோவியங்கள் தன்னலமின்றி நோய்த் தொற்றை எதிர்த்து உழைத்தவர்களின் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும்.  


இதுவரை பல விதமான ஓவியங்கள் வரைந்துவிட்டேன். அதில் இன்றும் நினைவில் நிற்பது காந்தி ஓவியம்.காந்திஜி ரயிலில் மூன்றாம் வகுப்பில் 
பயணித்து இறங்கும் ஓவியம் இது. காந்திஜி பலமுறை இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ரயில்களில் பயணம் செய்துள்ளார்.  அதனை ரயில்வேத் துறையினர் அரிய புகைப்பட ஆதாரமாக சேகரித்து பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் கேட்டு கொண்டதன் பெயரில் இந்த ஓவியத்தை வரைந்து கொடுத்தேன். புகைப்படமான இந்த காட்சியை முதலில் ஓவியமாக வரைந்தவர் 
எம். ஏ சங்கரலிங்கம் என்ற ஓவியர். அவரின் ஆலோசனையைப் பெற்று இதனை ஓவியமாக வரைந்துள்ளேன். 
என்னுடைய ஓவியங்களால் சென்னை பொலிவு பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இனி இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் என் மனதில் இருக்கும் பல கற்பனை ஓவியங்களுக்கு உருவம் கொடுப்பது எளிதாக இருக்கும்'' என்கிறார் வர்ஷினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com