அறிவியல் கதைகள் சொல்வதில் வல்லவர்!
"ஆணி' என்பது நம் வீடுகளில் வெகு சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய பொருள். ஆனால், அதன் கதை என்ன தெரியுமா?


"ஆணி' என்பது நம் வீடுகளில் வெகு சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய பொருள். ஆனால், அதன் கதை என்ன தெரியுமா? சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் குடிசைத் தொழிலாக இருந்தது ஆணி தயாரிப்பு. ஆனால், அந்த ஊர்க்காரர் ஒருவர், ரஷியாவில் ஆணி தயாரிக்க ஒரு மிஷின் இருப்பதைக் கேள்விப்பட்டு, அங்கே போய் தங்கி, நவீன ஆணி தயாரிக்கக் கற்றுக் கோண்டு வந்தார். இன்று உலகம் முழுக்க பல்வேறு சைஸ்களில், பல்வேறு உலோகங்களில் ஆணி உற்பத்தி செய்யப்பட்டு, மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று ஆணியின் அறிவியல் கதையை அழகாக சொல்கிறார் உத்ரா துரைராஜன்.
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவக்கல்லூரியில் இயற்பியல் துறையின் தலைவர். இதே போல, கண்ணாடியின் கதை, எரிமலையின் கதை, கொலம்பஸ் கதை என்று பல்வேறு அறிவியல் தொடர்பான விஷயங்களை பற்றியும் வரலாற்று பூர்வமான தகவல்களையும் திரட்டி, மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும், சுவாரசியமாக தமிழில் கதைகள் சொல்கிறார் இவர்.
அந்தக் கதைகளை விஞ்ஞானப் பத்திரிகைகளில் எழுதுகிறார்; யூடியூப் மூலமாக வீடியோவாக எடுத்தும் பதிவேற்றம் செய்கிறார். அகில இந்திய வானொலி மூலமும், பொதிகை தொலைக்காட்சி மூலமும் ஏராளமான அறிவியல் நிகழ்ச்சிகளை வழங்கி, பாராட்டுகள் பெற்றிருக்கிறார் உத்ரா துரைராஜன். சிறந்தஆசிரியர்க்கு உரிய விருதுகள் உட்பட சிலவிருதுகளும் பெற்றிருக்கிறார். அவருடன் ஒருசந்திப்பு:
உங்களுக்கு இந்த அறிவியல் ஆர்வம் எப்படி வந்தது?
எனக்கு அறிவியல் ஆர்வத்துக்கு முன்பாக கதைகளில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர். அப்பா வக்கீல். சிறுவயதில் பல்வேறு ஊர்களுக்கும் குடும்பத்துடன் பயணிக்கும்போது, அப்பா, அந்தந்த ஊர்களின் பெருமைகளையும், அந்த ஊரைச் சேர்ந்த தேசத் தலைவர்கள் வாழ்க்கையையும் கதைகளாக எங்களுக்கு சொல்லுவார். வாஞ்சிநாதனும், வ.உ.சி.யும் எங்களது மனதில் ஆழமாகப் பதிந்து போனதற்கு எங்கள் சிறு வயதில் திருநெல்வேலிப் பயணத்தின்போது, அப்பா சொன்ன கதைகள்தான் என்றால் அது மிகையில்லை.
அப்படியெனில் அறிவியல் கதைகள் சொல்ல ஆரம்பித்தது எப்படி?
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இளம் வயது முதலே வாசிப்புப் பழக்கம் இருந்தது.
புத்தகப் பிரியர்களான நாங்கள் அனைவரும், படிக்கும் விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியுமா? அதுதான், என் கதை சொல்லும் ஆர்வத்துக்கு வித்திட்டது. நான் எத்திராஜ் கல்லூரியிலும், அடுத்து பச்சையப்பன் கல்லூரியிலும் படிப்பை முடித்துவிட்டு, வைஷ்ணவா கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தபோது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் கிருஷ்ணன் (எழுத்தாளர் சாண்டில்யனின் மகன்) போன்றவர்கள் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களிடம் ருஷ்ய நாட்டு குறைந்த விலை அறிவியல் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். அப்போதுதான் ஆங்கிலத்தில் படிக்கும் அறிவியல் விஷயங்களை தமிழில் எழுத, பேச ஆரம்பித்தேன்.
அந்தப் பணியில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?
பேச்சுத் தமிழும், எழுதும் தமிழும் ஒன்றல்ல. எனவே, அறிவியல் விஷயங்களை பேசும்போதும், எழுதும்போதும் அதற்கேற்ப சொல்ல வேண்டியது அவசியம். இன்னொன்று, நாம் புரிந்து கொண்ட விஷயங்களை மாணவர்கள் லெவலுக்கு இறங்கி வந்து அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்ல வேண்டும். குறிப்பாக மூன்றாவது, நான்காவது வகுப்பு மாணவர்களுக்காக தமிழில் அறிவியல் விஷயங்களை எழுதும் போதும், அவர்களுக்கான அறிவியல் பாடபுத்தகங்களை உருவாக்கும்போதும், அந்தச் சின்னக் குழந்தைகளின் லெவலுக்கு வந்து சொல்வது என்பது மிகவும் சவாலானது.
உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
அரவிந்த குப்தா என்பவர் அறிவியலை, குழந்தைகளுக்கு பல்வகையான மிக எளிமையான உபகரணங்களோடு, விளையாட்டு போல, விளக்குவதில் நிபுணர். அவர், சென்னை ஐ.ஐ.டி.க்கு வந்திருந்த சமயம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், தன் விஞ்ஞான விளையாட்டு வீடியோக்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமின்றி அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்துப் பேசியதன் பயனாக, அவருடைய அந்த வீடியோக்களுக்கு தமிழ் வடிவம் கொடுக்க நான் தயார் என்று சொன்னேன். உடனே, அந்த வீடியோக்களின் விளக்க உரைகளை தமிழில் மொழி பெயர்த்து, நானே பேசி என் மொபைல் போனிலேயே அந்த உரைகளை பதிவு செய்து அனுப்பி வைத்தேன். அதற்காக அவர் என்னை மிகவும் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...