தாயகத்துக்கு பெருமை சேர்த்த அழகி!

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி வெவ்வேறு தினங்களில் நடத்தப்படுகிறது.
தாயகத்துக்கு பெருமை சேர்த்த அழகி!
Updated on
3 min read

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிப்போட்டி வெவ்வேறு தினங்களில் நடத்தப்படுகிறது. ஒருவர் உலக அழகி பட்டத்தை தக்க வைத்திருக்கும் காலமும் வேறுபடும். அந்தவகையில், அதிக காலம் உலக அழகி பட்டத்தை தக்க வைத்திருந்தவர், உலகின் முதல் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் கரஸ்டீன். அழகியாகத் தேர்வு செய்யப்படுவதற்கு பல தகுதிகள் இருக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டில் அதிகமான அழகிப் போட்டிகளில் வென்றால் தான் அடுத்த இடத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.

சிறுவயது முதலே படிப்பு, கலை, சமூக சேவை, விளையாட்டு இப்படி பன்முகத் தன்மை கொண்ட ஒருவர் தான் இவாஞ்சலின் பிரான்சியா எல்ச்மனார் எனும் தமிழ்ப்பெண் இவர் அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற அழகி போட்டியில் "மிஸ் யுகே இண்டர்நேஷனல்' பட்டத்தை வென்று உலக அழகிப்போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இது குறித்து அவரிடம் உரையாடியதிலிருந்து:

உங்களைப் பற்றி?

அப்பா ஜீவராஜ் ராஜசிங்கம் இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்; அம்மா சாந்தி கல்லே என்ற இடத்தில் வசித்தவர். இருவரும் தொழில் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றனர். ஆனால் அந்நாட்டை விட இங்கிலாந்து சிறப்பாக அமையும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் 2000- ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு நான் பிறந்தேன். அதனால் என்னுடைய பெயரோடு பிரான்சியா என்று சேர்த்து வைக்கவேண்டும் என்று அந்நாட்டில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்கள் கூறியதன் அடிப்படையில் இந்த பெயர் வைத்தார்கள். என்னை நூற்றாண்டு குழந்தை என்று கூட அழைப்பார்கள்.

ஜோனேஸ்- மருத்துவ ஆராய்ச்சியாளர், வால்ட்டர் சஜீபன்- கெமிக்கல் பொறியாளர் ஆகிய இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். எங்கள் குடும்பம் பிரான்ஸ் நாட்டில் அதிக ஆண்டுகள் வாழ்ந்தாலும்; குடியுரிமை பெற விரும்பவில்லை. காரணம் அவர்களது ஒரே குறிக்கோள் இங்கிலாந்து குடியுரிமை வாங்க வேண்டும் என்பது. அதனால் நான் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது இங்கிலாந்திற்கு சென்றனர்.

இங்குள்ள பர்மிங்காம் பகுதியில் ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டை என் பெற்றோர் தொடங்கினர் அதனால் ஓரளவு பொருளாதாரமும் நிமிர்ந்தது. தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை இந்நாட்டிலேயே படித்தேன். மாணவ பருவத்தில் அதிகமாக ஓவியம் வரைதல், இசைக்கருவி வாசித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று பல விருதுகள் வாங்கியுள்ளேன். படிப்பில் எப்போதும் கவனத்தைச் சிதற விடக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் பள்ளியில் ஏ.கிரேடு என்கிற முதன்மை தரவரிசையை நான் எப்போதும் தவறவிட்டதில்லை.

2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏகான் கிளாசிக் பால்க்ரூவில் உறுப்பினரானேன். அதைப்போல குழந்தைப்பருவத்தில்; 2015-ஆம் ஆண்டு வரை ஒரு நடனக்குழுவுடன் உலகம் முழுவதும் பயணித்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். இதன் தொடர்ச்சியாக கனடா நாட்டின் டொரான்டோவில் உள்ள கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிப்புத் துறையை பயிலத் தொடங்கினேன். முதலாம் ஆண்டிலேயே அங்குள்ள திரைத்துறையின் சார்பில் இரண்டு படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கால கட்டத்தில் தான் கரோனா ஊரடங்கு பிறப்பித்தனர். இப்போது இணைய வழி கல்விப் போய்க் கொண்டிருக்கிறது. பர்மிங்காம் 18 வயதிற்குட்பட்ட கூடைப்பந்து அணியை வழிநடத்தி சில சாதனைகளை புரிந்தேன்.

அழகி போட்டிக்குள் நுழைந்த அனுபவம் பற்றி?

சிறுவயது முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அழகிப் போட்டிகளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அதனால் எனக்குள்ளும் ஓர் ஆசை உருவானது, அதற்கான கால சூழ்நிலைகளும் சரியாக அமைந்தது. 2013-ஆம் ஆண்டில் அழகிப் போட்டிகளில் பங்கு பெறத் தொடங்கினேன். 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி மிஸ் ஜூனியர் கிரேட் பிரிட்டன் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தேன்.

இதனைத் தொடர்ந்து 2017-2018-ஆம் ஆண்டுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் வெஸ்ட் மிட்லன்ட்ஸ் சார்பில் கலந்து கொண்டு "மிஸ் டீன்' கிரேட் பட்டத்தை கைப்பற்றினேன். 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் அழகிப் போட்டிக்கு தேர்வுக்குழு நடுவராக பணியாற்றினேன். இவ்வாண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி 57நபர்கள் கலந்து கொண்ட போட்டியில்; என்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி "மிஸ் யு.கே இண்டர்நேஷனல்' என்ற கிரீடத்தை கைப்பற்றினேன்.

இந்த வெற்றியின் மூலமாக வருகிற நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டிக்கு இங்கிலாந்து நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அதைவிட இங்கிலாந்தில் இருந்து உலக அழகிப் போட்டிக்கு கலந்து கொள்ளும் முதல் ஆசிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி நான் தான். அந்தப் போட்டியில் வென்றால் 1969, 1972-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் முடிசூட்டப்பட்ட வலேரி ஹோம்ஸ் மற்றும் லிண்டா ஹீக்ஸ் ஆகியோர்களைத் தொடர்ந்து மூன்றாவது உலக அழகிப் பட்டத்தை பெறுவேன்.

உடல் பராமரிப்பும் உணவு பழக்க வழக்கமும்?

172 செண்டி மீட்டர் உயரம் இருக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக 52கிலோ எடையை தாண்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் காலையில் தியானம், உடற்பயிற்சி போன்றவைகளை சரியாக கடைப் பிடிக்கிறேன். உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் 75சதவீதம் காய்கறி, 25சதவீதம் அசைவ உணவு வகைகள். அதிகளவில் தண்ணீர் குடிப்பேன். தேநீர் குடிப்பதில்லை, இரவு 10.30மணி முதல் காலை 7.30மணிவரை நன்றாக உறங்குகிறேன்.

போட்டிக்கான ஆடைகளை எப்படி தேர்வு செய்வீர்கள்?

எனக்கு தனியாக அலங்காரம் செய்வதற்கும், ஆடைகளைத் தேர்வு செய்வதற்கும் முன்னாள் இங்கிலாந்து அழகி பட்டம் பெற்றவர் உறுதுணையாக இருப்பார். பிலிப்பைன்ஸ் இறக்குமதியோடு கனடாவில் இயங்கும் ஒரு தனியார் ஆடை விற்பனை நிறுவனத்தில்தான் அழகிப் போட்டிக்கான ஆடைகளைத் தேர்வு செய்கிறோம். முகத்தில் போடும் சில கிரீம்களை நானே இயற்கை மூலிகை கொண்டு தயார் செய்கிறேன். சிலவற்றை மட்டும் ஒரு தனியார் நிறுவனம் மூலமாக வாங்குகிறேன்.

நீங்கள் செய்த சமூகப் பணியும் வருங்கால கனவும்?

அழகிப் போட்டி என்பது எப்போதும் தோற்றத்தை வைத்து மட்டும் மதிப்பிடுவதில்லை. இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விழிப்பூட்டல் ஏற்படுத்துதல் என்பதையும் பொறுத்ததே. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கும் வீடு இல்லாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் பர்மிங்காம்; சோலிஹல் பெண்கள் உதவி நிறுவனத்திற்கு தூதுவராக பணியாற்றுகிறேன். கரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்த நேரத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்தும் பாடல்கள் பாடியும் அதன் மூலம் நிதி திரட்டி கிடைத்த 500பவுண்ட்களை மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நன்கொடையாகவும் கோயிலை சீரமைக்கவும் அத்தொகையை கொடுத்துள்ளேன். இலங்கையில் நான் பிறக்கவில்லை என்றாலும் என்னுடைய நினைவுகள் எப்போதும் அந்நாட்டையே சுற்றி வருகிறது. வருங்காலத்தில் அங்கே சென்று பெண்களுக்கு ஒரு தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com