

குழந்தைக் கடத்தல் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தையைக் கடத்துபவர்கள் நோக்கம் பெரும்பாலும் குழந்தையை விற்று பணம் பெறுவதுதான். ஆனால் சொந்த தாத்தா பாட்டியே பேரன் பிறந்த மூன்றாம் நாளில் குழந்தையை தாயிடமிருந்து பிரித்து அநாதை இல்லத்தில் சேர்ப்பார்களா...? தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குழந்தையின் பெயரை மாற்றி... வேறு மாநில குழந்தையில்லா தம்பதிக்கு தத்து கொடுக்கச் சொல்வார்களா...? பெற்ற மகளையே தன் குழந்தையைத் தேடி அலையச் செய்வார்களா?
அந்த இளம் தாய் தனது ஒரு வயது மகனை மீட்டு எடுக்க நடத்திய பாசப் போராட்டம் அகில இந்தியக் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. மனதை பதறவைக்கும் இந்த சம்பவம், கல்வி அறிவு அதிகம் உள்ள, கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்கும் கேரளத்தில்தான் நடந்து முடிந்துள்ளது.
அனுபமாவிற்கு வயது 22. அனுபமா - அஜித்குமார் காதலர்களாக இருக்கும் போதே அனுபமா கர்ப்பமாகிறார். அனுபமா திருவனந்தபுரம் பேரூர்கடா பகுதியைச் சேர்ந்தவர். அனுபமாவின் பெற்றோர் ஆளும் கட்சியில் உறுப்பினர்கள். அந்தப் பகுதியின் தலைவர்கள். அனுபமா கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்குத் தெரிந்ததும் வெளியே தெரியாமல் இருக்க அனுபமாவை நெருங்கிய நண்பர் வீட்டில் தங்க வைக்கின்றனர்.
2020 அக்டோபர் 19 -இல் பிரசவம் நடக்கிறது. ஆண் குழந்தை. அதற்கிடையில் முன்னரே நிச்சயித்திருந்த தங்கையின் திருமண நாள் வந்தேவிட்டது.
திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அக்காவின் கையில் பச்சிளம் குழந்தை இருந்தால் பலதும் கேட்பார்கள் எங்களுக்கு அவமானமாக இருக்கும். தவிர தங்கையின் திருமணம் நின்று போகவும் வாய்ப்புள்ளது. அதனால் சில நாள்களுக்கு குழந்தையை நண்பன் வீட்டில் கொடுத்து கவனித்துக் கொள்ளச் சொல்லலாம்.
திருமணம் முடித்த மறுநாள் குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்துவிடலாம்'' என்று பெற்றோர் சொன்னதை நம்பி மூன்று நாள் குழந்தையை அனுபமா பெற்றோரிடம் ஒப்படைக்க... பெற்றோரே அரசு குழந்தை காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்துவிடுகிறார்கள்.
பெற்றோர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒப்படைத்த ஆண் குழந்தையை பெண் குழந்தை என்று பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்கிறார்கள். குழந்தை பல நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அனுபமா "மகன் எங்கே' என்று கேட்க... " வந்திருவான்..' என்று அனுபமாவின் பெற்றோர் தாமதம் செய்ய... அனுபமா வீட்டை விட்டு வெளியேறி காதலன் அஜித்திடம் சென்றுவிட்டார். அஜித் அனுபமா திருமணம் நடக்கிறது.
காதலர்கள் கணவன் - மனைவி ஆகிறார்கள். "மகன் எங்கே'' என்று அனுபமாவும் அஜித்தும் தாத்தா பாட்டியிடம் கேட்க... "அரசு குழந்தை காப்பகத்தில் சேர்த்து விட்டோம் ... அங்கே போய்மகனைப் பெற்றுக் கொள்ளுங்கள்..' என்று சொல்ல.... மகனைத் தேடும் படலம் தொடங்குகிறது. அனுபமாவின் பெற்றோர் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.
நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அரசு காப்பகத்தில் அனுபமா பலமுறை சென்ற போது அனுபமாவின் மகன் அங்கிருந்தாலும் அது குறித்து காப்பகப் பொறுப்பாளர்கள் அனுபமாவிடம் எந்தத்தகவலும் சொல்லவில்லை. பெற்றோர் காப்பகத்தில் சேர்ப்பித்த நாளில் பெண் குழந்தை சேர்த்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததால்..... மகன் அங்கு சேர்க்கப்படவில்லை என்று அனுபமா நினைத்து,
மகனைத் தேட பெண்கள் நல கமிஷனுக்கும், உயர் காவல் அதிகாரிகளுக்கும் புகார்கள் கொடுத்தாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாள்கள் வாரங்களாயின... வாரங்கள் மாதங்களாயின. கடைசியில் "மகன் வேண்டும்' என்று பொங்கி எழுந்தார் அனுபமா. திருவனந்தபுரத்தில் இருக்கும் தலைமைச் செயலகத்தின் முன்பு இந்த ஆண்டு அக்டோபர் 23-இல் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். கேரள ஊடகங்கள் அனுபமாவின் போராட்டத்தைத் தலைப்பு செய்தியாக்க... அனுபமாவின் குரல் கேரளத்தைத் தாண்டியும் எதிரொலித்தது.
விஷயம் கையை விட்டுப் போய் விட்டது எனத் தெரிந்ததும், கேரள அரசு, காவல் துறை, குழந்தைகள் நலத் துறை "குழந்தை எங்கே?' என்று விசாரணையை முடுக்கிவிட்டன. விசாரணையில், குழந்தைகள் இல்லாத ஆந்திர ஆசிரிய தம்பதிக்கு கேரள குழந்தைகள் நல அமைப்பு அனுபமாவின் மகனைத் தத்து கொடுத்துவிட்ட செய்தி வெளியாகிறது. "பெற்றெடுத்த தாயின் சம்மதம் இல்லாமல் எப்படி தத்து கொடுக்கலாம் ... பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு மகனை வளர்க்கும் உரிமை உண்டு ... பிறந்த மகன் தாயின் அரவணைப்பில் வளர உரிமை உண்டு... "பிள்ளையைத் திரும்ப ஒப்படைப்போம்' என்று சொல்லி தாயிடமிருந்து பிரித்து, பெற்றோர்களிருக்கும் போது குழந்தையை அநாதை என்று பதிவு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும்...' என்று அனுபமா குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
"குழந்தை வேண்டவே வேண்டாம் என்றுதானே எங்களிடம் ஒப்படைத்தார்கள். தத்து கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகிவிட்டதால் அவற்றை பாதியில் நிறுத்த முடியாது..' என்று மாநில குழந்தைகள் நலக் குழுவும், கேரள தத்து நடவடிக்கைகள் எடுக்கும் ஆணையமும் கை கழுவின.
""மகனை வேண்டாம் என்று தாயாகிய நான் ஒப்படைக்கவில்லை. எனது பெற்றோர்களும் பேரனை ஒப்படைக்க மட்டுமே செய்தார்கள். குழந்தை வேண்டாம் என்பதற்கும் குழந்தையை ஒப்படைப்பதற்கும் அநேக வேறுபாடுகள் உண்டு. மகனைத் தேடி கேரள குழந்தைகள் நல அமைப்பிற்கும், தத்து கொடுக்கும் ஆணையத்திற்கும் நடையாய் நடந்தேனே... மகனை காப்பகத்தில் வைத்துக் கொண்டு, என்னிடம் உண்மையை மறைத்து, மகனுக்காக கண்ணீர் சிந்தி போராடுவது தெரிந்தும் எனது மகனைத் தத்து கொடுக்க எப்படி மனது வந்தது... இவை எல்லாம் எனது பெற்றோரின் அரசியல் அழுத்தத்தில் செய்யப்பட்டது. தத்து விதிமுறைகள் வேண்டுமென்றே மீறப்பட்டு எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது'' என்று அனுபமா வெடிக்க... கேரள அரசிற்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது.
"தத்து நடவடிக்கைகள் பாதியில் நிற்கிறது. இன்னமும் முழுமை பெறவில்லை. அதனால் மகனைத் திருப்பித் தர வேண்டும்.." என்று அனுபமா குடும்ப நீதிமன்றத்தில் முறையிட... "குழந்தையை ஆந்திராவிலிருந்து கொண்டு வந்து "டிஎன்ஏ' சோதனை செய்து குழந்தையின் பெற்றோர் அனுபமா - அஜித்தானா என்று உறுதி செய்யப்பட்டால், குழந்தையை அனுபமாவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று குடும்ப நீதிமன்றம் ஆணையிட.. குழந்தை ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டு நடத்தப்பட்ட "டிஎன்ஏ' சோதனையில் குழந்தையின் பெற்றோர் அனுபமா - அஜித் என்று உறுதி செய்யப்பட, குழந்தையை தாயான அனுபமாவிடம் நவம்பர் 24 அன்று ஒப்படைத்தார்கள்.
"மகன் திரும்பக் கிடைத்தது மகிழ்ச்சி தான்... ஆனால் இத்துடன் முடியவில்லை... குழந்தையைக் கடத்திய எனது பெற்றோர் மீதும், தத்து கொடுப்பதில் விதிகளை வேண்டுமென்று மீறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓயமாட்டேன் ' என்கிறார் அனுபமா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.