உழைப்பு... சுயமுயற்சி...  வளர்ச்சி!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகள் ப. ஸ்ரீதேவி ரமேஷ், ஆதி பராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளராக இருக்கிறார்.
உழைப்பு... சுயமுயற்சி...  வளர்ச்சி!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகள் ப. ஸ்ரீதேவி ரமேஷ், ஆதி பராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளராக இருக்கிறார்.

இவருக்கு, 2015- இல் நடைபெற்ற இந்திய சுதந்திர தினவிழாவில் தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக சிறந்த நிறுவனம் என்ற விருதை அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கி பாராட்டினார். 21.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் 2020-ஆம் ஆண்டின் சிறந்த சமூகப் பணியாளர் என்ற விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். தமிழகத்தின் 2 முதலமைச்சர்களிடம் ஆதிபராசக்தி அன்னை இல்லப் பணிகளுக்காக விருதுகளை பெற்றிருக்கிறார் ஸ்ரீதேவி ரமேஷ். அவருடன் பேசியபோது:

""நாங்கள் வசித்து வருகின்ற மேல்மருவத்தூரில்தான் தொடக்கக் கல்வியைப் பயின்றேன். அதன்பின் அடிகளார் தொடங்கிய ஆதிபராசக்தி மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். பின்னர், பி.இ. கணினி அறிவியலை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பயின்றேன்.

கல்லூரி படிப்பு முடிந்ததும், பெற்றோரின் நிர்வாகத்துக்கு உதவியாக இருக்கலாம் என நினைத்தேன். இதற்காக, முதலில் ஆசிரியராகப் பள்ளியில் சேர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். அப்படியே, பள்ளி நிர்வாகத்தை எவ்வாறு செய்கின்றனர் என்பதையெல்லாம் கவனித்தேன். பின்னர், ஆதிபராசக்தி பள்ளிக்குழுமங்களின் தாளாளர் என்ற நிலையைப் பெற்றேன். தற்போது, பெற்றோர் மற்றும் எனது கணவர் ஆகியோரின் துணையால் பள்ளி நிர்வாகத்தினை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறேன்.

சமூகப் பணியுடன் ஆன்மிகப் பணியையும் செய்து வருகின்ற எனது தந்தையின் உழைப்பால், மெல்ல மெல்ல ஆதிபராசக்தி பள்ளி, கல்லூரிகள் போன்றவை உருவானது. அவற்றின் தொடக்கவிழா ஒவ்வொன்றின்போதும் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் மற்றும் ஆன்மிக மாநாடு நிகழ்ச்சியின்போது இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா போன்றோரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். மேலும் இன்றளவும், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், திரையுலகப் பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு எனது தந்தையாரின் சமுதாய தொண்டுகளே காரணம்.
எனது 15 ஆண்டுகால உழைப்பும், சுயமுயற்சியும்தான் கல்வி குழுமங்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்று கருதுகிறேன்.

குழந்தைகளுக்கு ஏற்றாற்போல நாம் தான் வழிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சிறப்பாக கற்றுத் தர முயலவேண்டு என்ற கருத்தை ஆசிரியர்கள் மனதில் பதிய வைத்து அதனை செயல்படுத்துவதில் அதிக சவால்களை எதிர்கொண்டேன்.

ஒரு கிராமப் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தரவேண்டும். மாநில கல்வி முதல் மத்திய கல்வி சிபிஎஸ்இ வரை மற்றும் எந்த வயதிலும் படிக்க நிஓஸ் (சஐஞந) என்ற தேசிய திறந்த நிலை பள்ளிக் கல்வி சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி என அனைத்தையும் இந்த மேல்மருவத்தூர் என்ற கிராமத்தில் பெரிய நகரங்களில் செயல்படும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நிகராக அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன்.

மேலும், இக்கால குழந்தைகளுக்கு வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் தராமல் அவர்களின் உடல்நலம், மனநலம், ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றியும் உணரச் செய்து எதிர்கால இந்தியாவிற்கு அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கித் தரவேண்டும் என்பதையும் என் கடமையாக நினைக்கிறேன்.

மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறநிலையத்தின் செயல்பாட்டில் இயங்கி வரும் அன்னை இல்லத்தின் சிறப்புநிலைக் குழந்தைகளுக்கு அவர்களின் வயது மற்றும் தனிப்பட்ட கற்றல் திறனுக்கேற்ப அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான பலவிதப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

3 வயதுக்குள் இருக்கின்ற குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சியாக உடலியக்கம், அறிவுத்திறன், மொழி, விளையாட்டு போன்றவற்றில் சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

3 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுயபராமரிப்பு மற்றும் அடிப்படைக் கல்வி வழங்கப்படுகிறது. அறிவுத்திறனுக்கேற்றாற் போல் சமச்சீர் கல்வி வழங்கப்படு
கிறது. இவர்களுக்குத் தேவையான சிறப்பு கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் போர்டு, சிறப்பு சக்கர நாற்காலிகள், அமர்வதற்கு பிரத்யேக நாற்காலிகள் போன்றவையும் வழங்கப்படுகிறது.

14வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்வி பெற நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஒப்பன் ஸ்கூலிங் (சஐஞந) மூலம் 10-ஆம் வகுப்பு பாடமும் கல்வி கற்க இயலாதவர்களுக்கு நியோஸ் தொழிற்பயிற்சிகளான தையல் பயிற்சி, கம்பியூட்டர் பயிற்சி, கேக் தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு ரெமிடியல் பயிற்சி, சக்திநெறி ஆகியவற்றின் மூலம் மதிப்புவாய்ந்த கல்வியை வழங்குகிறோம். தனிநபர் பாடத்திட்டத்துக்கு ஏற்றாற்போல கல்வி கற்றல் உபகரணங்களும் தயாரித்து வழங்கப்படுகின்றன.

சிறப்பு குழந்தைகளை கையாளுதல் பயிற்சியும், நடத்தை மாற்று பயிற்சியும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அளிக்கப் படுகிறது.

மேலும் விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சியாளர் மூலம் அளிக்கப்படுகிறது. சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

இயன்முறை பயிற்சி (பிசியோதெரபி) பிரிவின் மூலம் உடலியக்க மேம்பாட்டுப் பயிற்சி, நரம்பியல் வளர்ச்சி பயிற்சி, விளை யாட்டுத்துறை பயிற்சி, உடல் சமநிலை மற்றும் உடல் ஒருங்கிணைப்பு பயிற்சி, நடைபயிற்சி போன்ற பயிற்சிகளும் மேலும் மூளை நரம்பியல் மேம்பாட்டு பயிற்சி, புலன்கள் ஒருங்கிணைத்தல் சிகிச்சை, திறன்களை மேம்படுத்தும் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகள் சிறப்பு நிலை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com