அம்மா என்னும் செம்மொழி!

அம்மா என்பது ஒரு சொல் கவிதை.  அது இயற்கை தந்த இன்பச் செம்மொழி (அதாவது இனிமை பொங்கும் கனிவுச் செஞ்சொல்).  அம்மா என்பது உள்ளத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிச் சொல்.
அம்மா என்னும் செம்மொழி!


அம்மா என்பது ஒரு சொல் கவிதை. அது இயற்கை தந்த இன்பச் செம்மொழி (அதாவது இனிமை பொங்கும் கனிவுச் செஞ்சொல்). அம்மா என்பது உள்ளத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிச் சொல்.

அம்மா என்பது அடையாளம் காட்டும் அருஞ்சொல். அம்மா என்பது மொழியின் தோற்றத்தை அறிவிக்கும் அற்புதச் சொல். உள்ளிருந்து வெளிப்படும் மூச்சொலி, மென்மையான அழுத்தம் கொண்ட உதடுகளைத் திறக்கும் நிலையில் கடந்துவரும்போது அம்மா என்ற ஒலிப்பை உச்சரிப்பைப் பெறுகிறது. (ஆகவே தான் பசுவும் அம்மா என்று கத்துகிறது).

அம்மாவைக் குறிப்பதற்குத் தமிழில் வேறுசில சொற்களும் உள்ளன. அன்னையாய் (என் அம்மா) ஞாய் (உன் அம்மா - குறுந்தொகை 40) தாய், ஈன்றாள், ஆச்சி என்பவை அவை. அம்மா என்ற தமிழ்ச் சொல் உலகத்தின் ஏறத்தாழ 30 மொழிகளில் திரிபு நிலையில் உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாஸ்கு மொழியில் அம்மா என்ற தமிழ்ச் சொல் "அமா' என்று வழக்கில் இன்றும் உள்ளது. அம்மா என்பது "ள்' என்ற எழுத்தைப் பெற்று அம்மாள் என்று ஆனது. பின்பு அது அம்பாள் ஆனது.

அம்மா என்பது மிகுந்த உயர்வுச் சொல். பேய் வடிவத்தில், தன்னை நெருங்கி வந்த காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் கண்டார். அவரை அம்மையே என்று அழைத்தார். திருவள்ளுவரும் அம்மாவை மிகவும் போற்றினார். அவர் அம்மாவை ஈன்றாள் என்றும் குறிப்பிட்டார். "தன் மகனின் பெருமையைத் தானே நன்றாக உணர்ந்திருந்த போதிலும் அவனைப் பிறர், சான்றோன் என்று சொல்வதைக் கேட்டபோது, அவனைப் பெற்றெடுத்த நேரத்தில் மகிழ்ந்ததை விட அந்தத் தாய் அதிகமாக மகிழ்வாள்' என்றார் அவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

(குறள் 69) என்றார்.


அவர், தந்தையின் மகிழ்ச்சியைக் குறிப்பிடவில்லை என்பது சிந்தனைக்குரியது. உள்ளம் உயர்ந்த திருவள்ளுவர், கள் உண்ணாமையை முதன்முதலில் அறிவித்தார். "கள் குடிப்பது, பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய தாயின் முகத்தில் வெறுப்பை உண்டாக்கும். அப்படி இருக்கும் போது சான்றோர் - பெரியோர் - முகத்தில் அது என்னவாகும்?" என்று கேள்வி கேட்டார். இப்படி மற்றொரு இடத்திலும் ஈன்றாளை(அம்மாவை)ச் சொன்னார்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

(குறள் 923) என்றார்.

முற்றும் துறந்த பட்டினத்தாரும் தாய் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தார். தாயின் பேரன்பை வெளிப்படுத்தும் முறையில் மாக்சிம் கார்க்கி "தாய்' என்ற புதினம் படைத்தார். அது உலகப் புகழ்ப் பெற்றது.

பழந்தமிழகத்தில் முன்பு பல வகை தாய்கள் இருந்தார்கள். செல்வ மகளைப் பெற்றவள் "நற்றாய்' எனப்பட்டாள். அந்த மகளை வளர்த்தவள் "செவிலித்தாய்' என்று சொல்லப்பட்டாள். இவர்களைத் தவிர ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள் (தாலாட்டு பாடுபவள்) என்பவரும் இருந்தார்கள். இந்த ஐந்து வகைத் தாய்மார்கள் செல்வக்குடியில் பிறந்த பெண் குழந்தையைக் கண் இமை போல் கவனித்து வளர்த்தார்கள்.

பின்வரும் உரையாடல், அம்மாவின் பாச உணர்வை வெளிப்படுத்தும்.

""என் கண்ணில் பழுது நேர்ந்தால், நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டார் அம்மா.
""நந்தியாவட்டைப் பூ கண்ணுக்கு நலம் தரும். அதை உன் கண் மேல் வைத்துக் கட்டுவேன்'' என்றான் மகன்,

""அப்படிச் செய்தாலும் நலமாகவில்லை'' என்றால் என்றார் அம்மா.

""பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன்'' என்று மகன் சொன்னான்.

""அதன்பிறகும் சரியாகவில்லை'' என்றால் என்று கேட்டார் அம்மா.

""கண் மருத்துவமனைக்கு உன்னைக் கொண்டு போவேன். அங்கே கட்டாயம் குணமாகிவிடும்'' என்று முடித்தான் மகன். ""ஆமாம் ஒருவேளை என் கண் பழுதடைந்துவிட்டால் நீ என்ன செய்வாய்'' என்று அம்மாவிடம் வினா தொடுத்தான் பாசமுள்ள மகன்.

""என் கண்ணை உனக்குக் கொடுப்பேன்'' என்றார் அந்த அம்மா.

மற்றொரு செவிவழிச் செய்தியும் உள்ளது. கொலை மனம் கொண்ட விலைமாது ஒருத்தி இட்ட கட்டளையை நிறைவேற்றினான் கொடிய மனம் கொண்ட காமக்களி மகன். படுவேகமாக வந்த அவன் நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். "ஐயோ மகனே, கீழே விழுந்துவிட்டாயே, அடிபட்டுவிட்டதா ரொம்ப வலிக்கிறதா' என்ற சொற்கள் அவனுடைய கையிலிருந்த அம்மாவின் இருதய உறுப்பிலிருந்து வெளிப்பட்டன.

தாயால் பிறப்பு பெற்றவர், அந்தத் தாயால் தொடர்ந்து நன்மை பெற்றதை வரலாறு கூறுகிறது. அம்மாவின் அறிவுரையே வீர சிவாஜியை உருவாக்கியது. ஆசிரியர்களால் மட்டம் தட்டப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை, மாபெரும் விஞ்ஞானி ஆக உயர்த்தியது. சாமுவேல் ஜாக்சனை ஆங்கில மொழியின் முதல் அகராதி படைத்தவன் என்ற பெரும்புகழ் பெறுமாறு செய்தது.

முந்தைய காலத்துச் செந்தமிழ்ச் சான்றோர்கள், அன்னையை மனமார - நாவாரப் - போற்றினார்கள். "அன்னாய் வாழி வேண்டன்னை' என்ற செஞ்சொல் தொடரால் வாழ்த்தினார்கள் (அகநானூறு 40) இந்த இனிய தொடர் ஐங்குறுநூறு என்ற சங்க இலக்கியத்தில் இருபது இடங்களில் வருகிறது. (தாய்க்கு உரைத்த பத்து, அன்னாய் வாழிப் பத்து)அன்னாய் பத்து என்ற பகுதியில் உள்ள பத்துப் பாடல்கள் அன்னாய் என்று அழைத்துச் சொல்வதாக முடிகிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அன்னாய் என்ற சொல் அமைந்துள்ளது.

"நீதி வெண்பா' என்பது ஓர் அரியநூல். இதை எழுதிய பெரும் புலவரின் பெயர் தெரியவில்லை. அந்த நூலில் மங்கைக்குரிய மாண்புகள் பற்றி அற்புதமான பாட்டு ஒன்று உள்ளது. அந்தப் பாட்டு தாய் பேரன்பு கொண்டவர் என்று தொடங்குகிறது. (அன்னை தயையும் நீதிவெண்பா பா.30)

"திரிகடுகம்' என்பது 2000 ஆண்டுக் காலக்கட்டத்திற்குரிய நூல், மருந்தின் பெயரால் அமைந்த சிறந்த நூல். கற்புடைய பெண்ணின் கடமைகள் பற்றிய ஒரு பாடல் இதில் உள்ளது. குழந்தையைப் பெற்ற தாய், இல்லறத்தைத் தவறில்லாமல் செய்து காப்பாற்றுபவள் என்று அந்தப் பாடல் தெரிவிக்கின்றது. கற்புடைய மங்கை, நண்பனாய், தாயாய், மனைவியாய் விளங்குவாள் என்று அது அறிவிக்கின்றது.

குழந்தையைப் பெற்று அதனைப் பாதுகாத்து வளர்ப்பது தாயின் தலையாய கடமை என்று புறநானூறு கூறுகிறது.

"ஈன்று புறம் தருதல் என் தலைக்கடனே'
என்பது புறநானூற்றின் பாடல் அடி.

அறம் என்பது தமிழின் மிக அரிய சொற்களில் ஒன்று. அறம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டன. தேவைப்பட்டவருக்கு ஒன்றைக் கொடுப்பதே அறம் என்று பொதுவாக நம்பப்பட்டது. ஈதல் அறம் என்பது சான்றோர் கருத்து. மனத்தில் மாசு இல்லாமல் இருப்பதே அறம் என்றார் திருவள்ளுவர் (குறள் 34). புலவர் காரியாசான் ஐந்து செயல்களை அறம் என்றார். அவை சாதாரண அறம் என்று சொல்லவில்லை. அவை பேரறம் என்று உயர்வாகச் சொன்னார். அவற்றில் முதல் பேரறம் என்ன தெரியுமா? தாய் குழந்தையை ஈன்று (பெற்றெடுத்து) அதை வளர்ப்பது பேரறம் என்றார்.

"ஈன்றெடுத்தல் சூல் புறம் செய்தல் குழந்தையை
ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற
அழிந்தாளை இல்வைத்தல் பேரறமாம் ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு'

(சிறுபஞ்சமூலம் 72)

புலவர் உலகநாதன், அம்மாவை ஒருநாளும் மறக்காதே என்று தன் முதல் பாட்டிலேயே அறிவுரை கூறினார்.

"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்'.
(உலகநீதி - பாட்டு 1) என்றார்.

பெற்ற தாயைச் சிலர் காப்பாற்றுவதில்லை. பயன்படாத தாய் தன் குடும்பத்திற்கு ஒரு பாரம் என்று அவர்கள் தீர்மானித்து விடுகிறார்கள். அவர்களுக்குச் சாப்பாடு தருவதில்லை. பட்டினி கிடந்தாவது வளர்த்த தாயை மகன் பட்டினி போடும்படி செய்கிறான். அவரைப் பிச்சை எடுக்கவும் செய்கிறான் குடித்துவிட்டு மகன் மேலும் குடிப்பதற்குப் பணம் தர முடியாத தாயைக் கொலையும் செய்கிறான். தாயைக் காப்பாற்றாமல் கைவிடுவது மிகவும் துன்பமானது என்று சொன்னார் கபிலர்.

பாவலர் நல்லாதனார் மூன்று பாவச் செயல்களைச் சொன்னார். ஐங்குரவர் என்று சொல்லப்படும் பெரியோர்களில் ஒருவர் தாய் (மன்னன், ஆசிரியர், தந்தை, தமையன் ஆகியோர் மற்ற நான்கு குரவர்கள் ஆவார்கள். "தாய் இட்ட கட்டளையை மறுத்து நடப்பது அறம் அற்றவர்களின் (பாவச்) செயல்' என்றார் அவர்.

"தாயே ஒரு சிறந்த கோயில்' என்றார் அன்புநெறி சொன்ன ஒளவையார்.

"தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை' (கொன்றை வேந்தன் 38) என்றார் அவர்.

"பெண்மை, தாய்மை, இறைமை' என்று திரு.வி. கலியாண சுந்தரனார் (திரு.வி.க.) அடுத்தடுத்த நிலையை அறிவித்தார். தாய்மை என்பது இறைமைத் தன்மை பெறுவதற்குரிய வழி என்பது அவருடைய எண்ணம். ஒருவர் முதலில் அறிந்து கொள்ளக் கூடிய தெய்வங்கள் தாயும் தந்தையும் தான் என்று அந்த ஒளவை மூதாட்டியே ஓதினார்.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றார். அவர் அன்னையை முதலில் குறிப்பிட்டார். இந்தக் கருத்தையே "கொன்றை வேந்தன்' என்ற தன் நூலில் முதலில் சொன்னார்.

"தாய் உள்ளிட்ட ஐந்து குரவர்களை (பெரியோர்களை) தேவர்களைப் போல எண்ணி வணங்க வேண்டும்' என்று பெருவாயின் முள்ளியார் கூறினார்.

விளம்பிநாகனார், "தாய்மை வணக்கத்தின் உச்சகட்டத்திற்கே அனைவரையும் அழைத்துச் சென்றார். கடவுளே பக்தித் துறையின் மணிமுடி. ஆனால் அந்த மாபெரும் கடவுளே, தாய்க்கு ஈடு ஒப்பு ஆகமாட்டார்' என்றார்.

"தாயோடு ஒப்பிட்டுக் கூறுவதற்கு ஒரு கடவுளும் இல்லை. தாய்தான் கடவுளை விட உயர்ந்தவர்' என்றார்.

"கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின்
ஒண்மை வாய்ச் சான்ற பொருள் இல்லை ஈன்றாளொடு
எண்ணக் கடவுளும் இல்'.

(நான்மணிக்கடிகை 57) என்பது பாடல்.

இந்த அளவுக்கு அம்மாவை உயர்வு நிலையில் போற்றியவர்
உலகத்தில் யாருமே இல்லை. இது சிந்திக்கத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com