உடலுழைப்பு இல்லாமை: நோய்த் தொற்றுக்கு வாய்ப்பு அதிகம்!

உடலுழைப்பு இல்லாத  மித வாழ்க்கை முறைக்கும் (செடேன்டரி லைஃப் ஸ்டைல்) கரோனா நோயின் தீவிர நிலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இருக்கிறது என்றும்.
உடலுழைப்பு இல்லாமை: நோய்த் தொற்றுக்கு வாய்ப்பு அதிகம்!

உடலுழைப்பு இல்லாத  மித வாழ்க்கை முறைக்கும் (செடேன்டரி லைஃப் ஸ்டைல்) கரோனா நோயின் தீவிர நிலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இருக்கிறது என்றும். அதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், தொடர்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

உலகளவில் ஏற்படும் 6 சதவிகித  இறப்புகளுக்கு உடலுழைப்பு இல்லாமை (பிசிகல் இன்ஆக்டிவிட்டி) இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில், உடலுழைப்பு இல்லாமல் இருப்பது என்பது மிகச் சாதாரணமாகக் காணப்படுவதாகவும், ஏறக்குறைய 54.4 சதவிதத்தினர் எவ்வித உடலுழைப்பும் இல்லாமல்தான் இருக்கின்றனர் என்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அளித்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. 

இந்நிலை தொற்று  பரவலாகும்போது, தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு நோய் ஏற்படுத்தி, அவரின் குடும்பப் பொருளாதார நிலை சரிவதற்குக் காரணமாக  ஒருபுறம் இருந்தாலும், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்கும் பெரிய சவாலை ஏற்படுத்தி, அதற்கான செலவினத்தையும் அதிகரித்து விடுகிறது. இதற்கு இப்போது வந்திருக்கும் கரோனா தாக்குதலும் ஓர் எடுத்துக்காட்டு. 

கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 50 ஆயிரம் நோயாளிகளை வைத்து நடத்திய ஆய்வில், உடலுழைப்பு இல்லாமல் அல்லது மிதமான வாழ்க்கை முறையில் இருந்தவர்களே தீவிர நோய்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்  மிகக் குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித உடலுழைப்பும் இல்லாமல் இருந்தவர்களே தீவிர மருத்துவ சிகிச்சை நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் இறப்பு விகிதமும் இவர்களிடையேதான் அதிகமாக இருந்திருப்பதாகவும்  உடற்பயிற்சி மருத்துவத்துறை சார்ந்த பிரிட்டிஷ் ஆய்வு இதழ் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது. 

கரோனா தொற்று இருக்கும் நோயாளிக்கு இணைநோய்களாக உடல் பருமன், இரண்டாம் நிலை நீரிழிவு, மாரடைப்பு,  இதயநாள நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, பக்கவாதம், வளர்சிதை மாற்றம் சார்ந்த குறைபாடுகள், குடல், சிறுநீரகம் தொடர்பான புற்றுநோய், எலும்புத் தேய்மான நோய்கள், மனஉளைச்சல் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் தொற்றா நோய்கள்  அல்லது வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றின் தற்போதைய இரண்டாம் அலையிலும் மேற்கூறிய இணைநோய்கள் உள்ளவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவிற்குச் சென்றதும், இறக்க நேரிட்டதும் 15 முதல் 20 மடங்கு அதிகரித்து இருக்கிறது. 

உடற்பயிற்சியின்போதும் தீவிரமான அல்லது கடின உடலுழைப்பின்போதும் உடலிலுள்ள அட்ரீனலின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. இதனால், இதயத்துடிப்பு அதிகமாவதுடன் ரத்தநாளங்களின் தசைகள் விரிவடைந்து, சாதாரண நிலையில் இருக்கும் ரத்த ஓட்டத்தைவிட 20 மடங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக, விலா எலும்புப் பகுதியில் இருக்கும் தசைகள் உதரவிதானம் சுருங்கி விரிவதற்கு உதவி செய்வதால், ஓய்விலிருக்கும் நிலையைவிட 15 மடங்கு அதிகமாக ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொடுக்கிறது. ஓய்வாக இருக்கும் நேரத்தில், சுமார் 12 லிட்டர் காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. ஆனால், உடற்பயிற்சி அல்லது கடின உழைப்பின்போது, ஒரு நிமிடத்திற்கு 40 முதல் 60 முறைகள் மூச்சு விடுதலில் ஏறக்குறைய 100 லிட்டர் காற்று உள்ளே செல்கிறது. மூச்சு விடுதல் அதிகமாகவும் வேகமாகவும் இருந்தாலும் ஆழமாகவும் நுரையீரல் முழுவதும் நிரம்பும் நிலை ஏற்படுகிறது.  

உடற்பயிற்சியாலும் கடினமான உடலுழைப்பாலும் இவ்வாறு பயிற்சிக்கு உள்ளாக்கப்படும் சுவாசப் பாதையும் நுரையீரலும் உறுதியடைந்து,தொற்றுகளிலிருந்தும் மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும் ஆஸ்துமா, நிமோனியா போன்ற  நோய்களிலிருந்தும் ஓரளவு தற்காத்துக்கொள்ளும் வலிமையைப் பெறுகின்றன. கரோனா நோய்த்தொற்றும் இதில் அடங்கும் என்பதால், தொற்று ஏற்பட்டாலும் மூச்சுவிடுவதற்கு  சிரமம் ஏற்படும் தீவிரமான மூன்றாம் நிலை அளவிற்குச் செல்லாமல், தொண்டை வரையில் ஏற்படும்  முதல்நிலை மற்றும் சற்றே அழற்சியுடன் கூடிய தொற்றான இரண்டாம் நிலையுடன் பாதுகாப்பாகக் குணமடைந்து வருவதற்கு வாய்ப்பைக் கொடுக்கிறது.  ஆனால், போதுமான உடலுழைப்பு இல்லாததாலும் சுவாசப்பாதைக்குத் தேவையான  உடலியங்கியல் செயல்பாடுகள் சரியாக நடைபெறாததாலும் கரோனா கிருமித் தொற்று எளிதில் சுவாசப்பாதைக்குள் சென்றுவிடுவதுடன், பிற இணைநோய்களால் தீவிரமடைந்துவிடுகிறது.  

நடுத்தர வயதிலிருந்து முதுமைக்குச் செல்லும்போது,  உடலுழைப்பானது  குறைந்தபட்சம் உடல் இயக்க நிலையாகவாவது  மாற வேண்டும். இந்த இயக்க நிலை குறைவதாலும், முதுமை என்பதே நோய்கள் ஏற்படும் நிலையைக் கொடுத்து விடுவதாலும் வயதானோருக்கு அதிக உடல் பாதிப்புகள் வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும்  விதமாக, 45 வயது முதல் 60 வயதிற்குள்ளும், அதற்கு மேலுள்ள வயதினரிடையேயும் இணைநோயுடன் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13.9 சதவிகிதமாக வும் இணை நோய் இல்லாமல் இறந்தவர்கள் 1.5 சதவிகிதமாகவும் இருக்கிறது. 

தற்போது,  நடுத்தர வயதிலும் கூட உடலுழைப்பு அல்லது அது சார்ந்த உடல் இயக்க நிலை இல்லாமல், மித வாழ்க்கை முறை அல்லது உடலுழைப்பே இல்லாத நிலையே அதிகம் காணப்படுகிறது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் மற்றும் கல்விநிலை குறைவாக இருப்பவர்களே அதிக உடலுழைப்பைக் கொடுக்கும் கடின வேலைகளில் ஈடுபடும் நிலையில், கல்வி மற்றும் பொருளாதார நிலையில் மேலிடத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் மித உடலுழைப்புப் பணி மற்றும் மிகக் குறைவான அல்லது உடலுழைப்பே இல்லாத பணிகளில்தான் இருக்கின்றனர். கடந்த வருடம் ஏற்பட்ட கரோனா இறப்புகளில், இணை நோய்கள் இருந்தவர்கள் 17.9 சதவிகிதமும், இணை நோய் ஏதும் இல்லாதவர்கள் 1.2 சதவிகிதமுமாக இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலும், 45 வயதுக்குக் கீழுள்ளவர்களில் இணை நோயுடன் இறந்தவர்கள் 8.8 சதவிகிதமாகவும் இணை நோய் இல்லாதவர்கள் 0.2 சதவிகித மாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே,  இனி இந்த வயதினர் உடற்பயிற்சி அல்லது உடல் இயக்கநிலையில் கவனம் செலுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகிறது. 

உடலுழைப்பு என்பது ஏதேனும் வேலை செய்துகொண்டே, உடலின் பாகங்களை அல்லது முழு உடலையும் இயக்க நிலையில் வைத்திருப்பதாகும். இதில், நேரம் மற்றும் திட்டமிடுதலுடன் கூடிய உடற்பயிற்சியும் எவ்விதத் திட்டமிடுதலும் நேரமும் இல்லாமல் நாம் நினைத்தபடி ஆடும்  விளையாட்டும் அடங்கும். இவற்றில் எதுவேண்டுமானாலும் உடலியக்க நிலைக்குப் பின்பற்றப்படலாம். 

தினமும் நடைபயிற்சி செய்தல், அருகிலிருக்கும் கடைகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்லுதல், சற்றே தொலைவான இடங்களுக்கு மிதிவண்டி பயன்படுத்துதல், மித ஓட்டம், வீட்டு வேலைகள், தோட்ட வேலை, இறகுப் பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கபடி, கோகோ போன்ற குழு விளையாட்டுகள் என்று ஏதேனும் ஒன்றினை தினசரி பழக்கத்தில் கொண்டுவர வேண்டும். வளரிளம் பருவத்தினருக்கும், நடுத்தர வயதினருக்கும் முதுமைக்காலத்தில் நுழைபவர்களுக்கும்  இவை மேலான நன்மைகளை அளிக்கும். உடற்பயிற்சியுடன் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவையும் நுரையீரல் மட்டுமன்றி, அனைத்து உள்ளுறுப்புகளின் பணிகளையும் சீராக்குகின்றன.  இதனால், நீரிழிவு அதிக உடல் எடை, உடல் பருமன், இதய நோய்கள் போன்றவை தவிர்க்கப்படுகின்றன.

தற்போது, கரோனா மூன்றாவது அலையும் வரவிருக்கிறது என்ற எச்சரிக்கை வந்துகொண்டிருக்கும் நிலையில், உடற்பயிற்சியையும் உடல் இயக்கத்தையும் கவனத்தில் கொண்டால், நடுத்தரவயதினர் தொற்றா நோய்களைத்  தடுப்பதுடன் ஏற்கெனவே இருக்கும் நோய்நிலையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். 


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com