

நிர்பயா பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை மையத்தில்; குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர். தமிழக அரசு நடத்தும் காவலர் நலவாழ்வு பயிற்சியாளர், சென்னை யோகித்யா அகாதெமி நிறுவனர், தன்னம்பிக்கை பேச்சாளர், கற்றல் குறைபாடு சிறப்பாசிரியர், சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் ரெயின்போ உறுப்பினர். "வானம் வசப்படும்' என்ற கட்செவி குழுமம் தொடங்கி பல்வேறு விழிப்புணர்வு அளிப்பவர். இவை அனைத்துக்கும் சொந்தக்காரர்தான் சத்யா தனக்கோடி. அவரிடம் பேசியதிலிருந்து:
""எனது சொந்த ஊர் கும்பகோணம். அப்பா பாத்திரம் தயாரிப்பவர். நாளடைவில் பாத்திரக்கடையும் வைத்தார். பாத்திரத் தொழிலில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட சென்னைக்கு குடிபெயர்ந்தோம். மீண்டும் பாத்திரக்கடையை தொடங்கினோம். நிலைமை ஒரளவுக்கு சரியானது. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவுக்கு சாலை விபத்து ஏற்பட வீட்டிலேயே ஓய்வு எடுக்க தொடங்கினார். குடும்ப சூழ்நிலை தலை கீழாக மாறியது.
என்னுடைய படிப்பு மட்டுமல்லாமல் இரண்டு தங்கைகளின் படிப்பும் முடிவுக்கு வந்தது. குடும்பத்தை காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைவரும் வேலைக்குப் போக முடிவெடுத்தோம். நான் ஒரு பிரைமரி பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். அப்படியே உயர்கல்வியையும் தொடர்ந்தேன். இதனைத் தொடர்ந்து, கணினி நிறுவனத்தில் வேலை, பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை, மீண்டும் ஆசிரியைப் பணி என புறப்பட்ட இடத்திற்கே வந்து நின்றேன்.
ஆனால் அது தான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. நடுத்தரமான பிள்ளைகள் படிக்கிற அப்பள்ளியில் சில மாணவர்களுக்கு வாசிக்கவே வராது. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு தனி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுடைய இயல்புகளையும் பிரச்னைகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு குழந்தையையும் அவர்களது இயல்புக்கு தகுந்த மாதிரி கற்றுக் கொடுக்க தொடங்கினேன்.
அந்த காலகட்டத்தில் அம்மாவிற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு 2010-ஆம் ஆண்டில் அம்மா இறந்து விட்டார். என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தோம்...
அப்போதுதான் நண்பர் யோகேஸ்வரனை சந்தித்தேன். அவரின் உதவியோடு திருமுல்லைவாயில் பட்டீஸ் வேர்ல்டு என்று ஒரு ப்ளே ஸ்கூலை தொடங்கினேன். அதை நிர்வாகம் செய்து கொண்டே குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தேன். வில்லிவாக்கத்தில் பிளே ஸ்கூலின் கிளையை தொடங்கினோம்.
2013-ஆம் ஆண்டு எனக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. முகத்தில் பெரிய அடி இந்த முகத்தோட எப்படி சாதிக்கப் போகிறோம் என்ற அவ நம்பிக்கையும் வந்தது. தைரியமாக மீண்டு எழுந்தேன். சென்னை டிஸ்லெக்சியா அமைப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன்.
பின்னர், 2019-ஆம் ஆண்டில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்1500 சதுர அடியில் "யோகித்யா அகாதெமி'யை தொடங்கினேன். இந்நிறுவனமும் முற்றிலும் கற்றல் குறைபாட்டால் பிரச்னை இருக்கிற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கிற நிறுவனம்.
ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் உள்ள சிரமம். எழுத்துகளை கண்டறிவதில் சிரமம், சப்தம் கேட்பதிலும் சிரமம், இவர்களை படிக்காத மாணவர்கள் என்றும் சோம்பேறித்தனம் என்றும் சிலர் திட்டுவதுண்டு. ஆனால் அவர்களுடைய நிலைமைக்கு மட்டும் தான் தெரியும் தான் அடைகிற வேதனை. சிறிய வயதில் கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை படிக்கவே போக மாட்டேன் என பிடிவாதம் செய்தது. அதை கூட்டிக் கொண்டு வந்து என்னுடைய பள்ளியில் சேர்த்தேன். அந்த குழந்தை 5 மாதங்களுக்குப் பிறகு ஒரு வரியை வாசித்தது. அதனுடைய கண்ணை உயர்த்தி, புருவத்தை உயர்த்தி இப்போது என்னால் முழுதாக படிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியாக சொல்லுகிறது. இது போன்று இங்கே படித்த 4 மாணவர்கள், கல்லூரியும் சென்றுள்ளனர் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன்.
தமிழக அரசு காவல்துறைக்கு கொடுக்கிற நலவாழ்வு பயிற்சியில் நானும் ஒரு பயிற்றுநர். அத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இப்பயிற்சி தேவைப்படுகிறது. ஏனென்றால் கொலை, விபத்து, அடிதடி போன்ற அனைத்து இடத்திற்கும் நேரடியாக செல்ல வேண்டிய சூழ்நிலை காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கிறது. அதைப்பற்றி தொடர்ந்து கண்காணித்து அறிக்கை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. இதனால் அவர்களின் மனநிலை எப்போதும் பதட்டமாகவும் சிந்தனையாகவும் இருக்கும். இது போன்றவற்றை எப்படி சமாளிக்கலாம், கடந்து செல்லலாம் என்பதைத் தான் நம்முடைய நலவாழ்வு பயிற்சி மூலமாக வழங்குகிறேன். இதுவரை சுமார் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன்.
கரோனா ஊரடங்கு நேரத்தில் "வானம் வசப்படும்' என்ற தலைப்பில் முகநூல் பக்கம், கட்செவி அஞ்சல் போன்றவற்றைத் தொடங்கி 11நாட்களாக இடைவிடாமல் நடந்தது. கிட்டத்தட்ட 200 நாள்கள் தினந்தோறும் காலை 6.30மணியில் இருந்து 7-15மணி வரை நேரலையில் வலிமை, உன்னையறிந்தால், சக்தி கொடு, நம்பிக்கை, விடாமுயற்சி, வெற்றிப் படிகள், இலக்கு நிர்ணயித்தல், சிகரம் அடைதல் போன்ற அனைத்து விதமான விழிப்புணர்வு பேச்சு மற்றும் கட்டுரைகள் எல்லாம் வானம் வசப்படும் குழுவில்; பகிரப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து 550 முதல் 623 நபர்கள் வரை கலந்து கொண்டனர். சிலர் தனிப்பட்ட முறையிலும் தங்களுடைய பிரச்னைகளை சொன்னால் அதற்கும் தீர்வு கொடுத்தோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.