பெண்களுக்கான சட்ட உரிமைகள்!

பெண்களின் உழைப்பிற்கும், உணர்வுகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறதா?
பெண்களுக்கான சட்ட உரிமைகள்!

பெண்களின் உழைப்பிற்கும், உணர்வுகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறதா?

பலவீனமான பிரிவு, நலிவுற்ற பிரிவு என்றே இன்னும் பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் நிலையில்தான் பார்க்கப்படுகிறார்கள், அப்படியானால் எப்போதுதான் முன்னேற்றம் கண்டு முதல் தரக் குடிமக்கள் ஆவது?

பெண்களுக்கான சட்ட உரிமைகள் எவ்வளவு வந்திருக்கின்றனவென்று அவர்கள் அறிவார்களா?

நமது நாட்டில் பெண்களுக்கான உரிமைகளாக சட்டங்கள் சொல்வதென்ன?

தெரிந்து கொள்ளுங்கள் சட்டங்களை:

1817-இல் பட்டப்படிப்புப் படித்து, பரிட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.

1818 -இல் தான், பெண்கள் முதன் முதலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1928 -இல் தேர்தலில் பெண்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்று சொல்லும்போது அனுமதி தந்தவர்கள் யார்? இப்பெண்கள் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது அல்லவா?

ஆம், பெரும்பான்மை மக்களைக் குறிப்பாகப் பெண்களை, அரசியலுக்கும், சட்டத்தின் பயன்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்களாக ஆக்கவே, இச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன என்று சொல்லப்படுவது உண்டு.

அதனால் தான் நமது அரசாங்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கி சட்டத்தின் முன் அனைத்து மக்களுக்கும் சம உரிமை அளித்துள்ளது. இதில் ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடும் இல்லை என்பதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

பெண் கல்வி, இப்பார்வையை விரிவுப்படுத்தியுள்ளது. பெண்களின் உழைப்பும் முன்னேற்றமும் அங்கீகரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பெண் உழைத்தால் உயர்வுதான். ஆனால், உழைப்போடு தனக்கான உரிமைகளையும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்வு மற்றும் உழைப்புக்கான அங்கீகாரத்தைக் கோருதல், சட்டப்பூர்வமான அடிப்படை உரிமைகளை அறிவுப் பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், இவை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கச் செய்வதில் சுய உதவிக்குழுப் பெண்கள், தம் குழுவின் உயிர் மூச்சின் பிரதான கடமையாக ஏற்று செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த விளக்கம்.

பெண்ணும் சட்டமும்

அடிப்படை மனித உரிமைகள், பெண்ணின் சிறப்பு உரிமைகள் பற்றிய தெளிவு எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவை, அத்தகைய அறிவும், தெளிவும் பெண்களுக்குத் தைரியத்தையும், முன்னெச்சரிக்கை உணர்வையும் தரும், ஆண்கள் மீது சார்ந்துள்ள நிலைமையும் வெகுவாகக் குறைக்க உதவும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், தகர்க்கவும், தெளிவையும் ஊக்கத்தையும் சட்ட அறிவு தரும் என்பதில் ஐயமில்லை.

திருமணச் சட்டங்கள்

மத நம்பிக்கையின் அடிப்படையில் மூன்றுவித சட்டங்கள் உள்ளன.
இந்து திருமணச்சட்டம் - 1955
கிறிஸ்துவ திருமணச் சட்டம் - 1872
முஸ்லிம் திருமணச் சட்டம். இதுதவிர,
சுயமரியாதைத் திருமணச்சட்டம் - 1967 என்பதும் நடைமுறையில் உள்ளது.

பொதுவான சட்ட வரையறை

திருமணத்திற்கு ஆண் 21 வயது நிறைந்தவராகவும், பெண் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

திருமணம் செய்ய மணமக்கள் இருவரும் இயல்பான மன நிலையில் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

பொதுவாக மணமக்கள், திருமணத்தின்போது, வேறு திருமணத் தொடர்பில் இருக்கக்கூடாது. ( ஏற்கெனவே திருமணமானவராக இருந்தால், சட்ட பூர்வமாக விவாகரத்து பெற்றிருக்க வேண்டும் அல்லது முதல், திருமணத் துணை இறந்து போயிருக்கலாம்)

மேற்கண்டவையாவும் எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். மற்றபடி சொத்துரிமை குழந்தை வளர்ப்பு, ஜீவனாம்சம் ஆகியவை அவரவர் சார்ந்த மதச்சட்டப்படி நிர்ணயிக்கப்படும்.

இந்து திருமணச்சட்டம் - 1955

இந்த சட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள், மேற்கண்ட வரையறைத் தவிர, கீழ்க்கண்டவற்றையும் பின்பற்ற வேண்டும்.

மணமக்கள் இருவரும் இந்துவாக இருக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட, நெருக்கமான ரத்த உறவுமுறைகளில், திருமணம் நடைபெறக் கூடாது.

தங்கள் பழக்க, வழக்கத்தின்படி திருமணச் சடங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறப்புத் திருமணச்சட்டம்

மாறுபட்ட மதம் அல்லது ஜாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள உறவினரின் சம்மதம் இல்லையெனில், சிறப்புத் திருமணச்சட்டபடி அவர்கள் மணம்புரியத் தடையேதும் இல்லை.

சிறப்புத் திருமணச்சட்டத்தின்படி, திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுத்து 30 நாள்களுக்குப் பிறகு பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்.

இச்சட்டப்படி திருமணம் பதிவு செய்யப்படும் போது மணமக்களின் வயது, இருப்பிடம் போன்ற விவரங்களைத் தரக்கூடிய மூன்று சாட்சிகள் தேவை.

சுயமரியாதைத் திருமணச்சட்டம், இவ்வகைத் திருமணங்களில் சம்பிரதாய சடங்குகள், இல்லாமல் இருந்தாலும், அவ்வாறு நடைபெறும் திருமணங்கள் செல்லுபடியாக, 1967-இல் சுயமரியாதைத் திருமணச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம், இந்து திருமணச்சட்டத்தில் பிரிவு 7 எ என தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com