

"மாற்றம் ஒன்றே மாறாதது...' இந்த வாக்கியத்தை நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் இயற்பியல் துறையில் புதிய கருத்தியலை கண்டுபிடித்து ரிக்கார்ட் பிரேக் செய்துள்ளார் நிகோலே எங்கர்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அறிவியல் சார்ந்த கற்றலை சிறப்பாக ஆய்வு செய்து கற்பவர்கள் மட்டுமே விஞ்ஞானிகளாக உருவாக முடியும் என்பதுதான் இதுநாள்வரை அறியப்பட்டு வந்த உண்மை..
ஆனால், அறிவியல் மட்டுமின்றி கலை கல்வியை ஆர்வமுடன் கற்பவர்கள் கூட விஞ்ஞானிகளாக மிளிர முடியும் என்று சிலர் மெய்ப்பித்து வருகிறார்கள். அந்த வகையில், கலை கல்வியின் நெகிழ்வுத்தன்மைதான் தன்னை இயற்பியல் படிக்க தூண்டியதாகவும் தன்னை இயற்பியலாளராக உருவாக்கியதாகவும் விஞ்ஞானி டாக்டர் நிகோலே எங்கர் ஹால்பெர்ன் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, அவரவர்களின் மொழியில் ஒரு விஷயத்தை கற்கும் பொழுது மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதுடன், அது தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பதுதான் ஒவ்வொரு துறையிலும் பிரகாசிப்பவர்கள் சொல்லும் வார்த்தையாக இருந்து வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்த வெப்ப இயக்கவியல் கருத்தை 21-ஆம் நூற்றாண்டில் வேறொரு புதிய கோணத்தில் மாற்றி அமைத்து எங்கர் நிகோலே சாதனை படைத்துள்ளார். இவர் தெர்மோடைனமிக்ஸ் கோட்பாடுகளை குவாண்டம் கணித கருவி தொகுப்பை பயன்படுத்தி மாற்றியமைத்துள்ளார். இதுதொடர்பான புத்தகத்தையும் எழுதி ஏப்ரல், 22 - ஆம் தேதி வெளியிடுகிறார்.
1800-ஆம் ஆண்டுகளில் நீராவி என்ஜின்கள் போன்ற மிகப்பெரிய விஷயங்களுக்கு மட்டுமே வெப்ப இயக்கவியல் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் 21-ஆம் நூற்றாண்டில் வெப்ப இயக்கவியலின் பல்வேறு தத்துவங்கள் மிகச்சிறிய நுட்பமான விஷயங்களுக்கும் கணினிகள் முதல் மூலக்கூறுகள் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து நிகோலே எங்கர் சிந்தித்ததன் விளைவாக குவாண்டம் தெர்மோ டைனமிக்சை மேம்படுத்தி புதிய கான்செப்டை உருவாக்கி முடிந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
நிக்கோலே எங்கர் ஹேல்பென் குவாண்டம் இன்பர்மேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ் நிறுவனத்தின் உறுப்பினராக இருப்பது மட்டுமல்லாமல் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டாண்டட் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்திலும் கருத்தியல் இயற்பியலாளராகவும் இருந்து வருகிறார். அத்துடன் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியராகவும் இருக்கிறார்.
நிகோலே, அறிவியல், கணிதம் மற்றும் பல பிரிவுகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அத்துடன் ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோருக்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் அறிவியல் தத்துவங்களை விளக்கும் பணியையும் செய்து வருகிறார். அறிவியல் தொடர்பான நூற்றுக்கணக்கான செமினார்களையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.
முன்பே சொன்னது போல் இயற்பியலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை மீட்டெடுக்கும் பணியை செய்வதுடன், இயற்பியலில் முன்னர் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முறியடிக்கும் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் கண்டறிய தொடர்ந்து முயன்று வருகிறார்.
முயற்சி திருவினையாக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப செயல்படும் முயற்சி மற்றவர்களுக்கும் உந்துதலை தரும் என்றால் மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.