கதை சொல்லும் குறள் - 77: சிறந்த தலைமையே வெற்றி தரும்!

ஜம்முவையும், காஷ்மீரத்தையும் இணைக்கும் அந்த நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து ஓடிக் கொண்டிருந்தது.
கதை சொல்லும் குறள் - 77: சிறந்த  தலைமையே  வெற்றி தரும்!

ஜம்முவையும், காஷ்மீரத்தையும் இணைக்கும் அந்த நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து ஓடிக் கொண்டிருந்தது.  ஹரிபூர் கிராமத்திலிருந்து புறப்பட்டு, காஷ்மீரில் இருக்கும் தன் அக்காவின் வீட்டில் ஒருவாரம் தங்கிவிட்டுப் பிறகு டெஹ்ராடூனுக்குச் செல்ல இருந்தான் பீர்பால்.

மூன்று வருடப் படிப்பை  ஆர்மி கேடெட் கல்லூரியில் படிக்கச் செல்கிறான். அந்தக் கல்லூரியில் இடம் கிடைப்பதே அரிது. நுழைவுத் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றதினால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறான்.

இந்திய ராணுவத்தில் ஒரு சராசரியான சிப்பாயாக இருந்தவன், ஆர்மி கேடெட் கல்லூரியில் படித்தால் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பதவி வகிக்க முடியும். தாய் தந்தையிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு அருமை தமக்கையோடு சில நாட்களை இன்பமாகக் கழித்துவிட்டு டெஹ்ராடூனுக்குச் சென்று சேர்ந்துவிட்டான்.

அன்று கல்லூரியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விக்ரம்சிங் அன்று கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தர இருந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர். இந்த ஆண்டுக்கான ஏசிசியின் கலைவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

மேஜர் ஜெனரல் விக்ரம்சிங் 1970-இல் ஆற்றிய வீரச் செயலையும் அதனால் படையெடுத்து வந்த அந்நிய நாடு தோற்று ஓடியதையும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள ராணுவக் கல்லூரிகளில் பாடமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மேஜர் ஜெனரல் என்பவர் எப்படித் தன் கீழ் இயங்கும் சிப்பாய்களுக்கு வழி காட்ட வேண்டும்? எப்படி கடினமான சூழ்நிலையிலும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும்? என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர்.

பீர்பாலின் மனது அவரைப் பார்க்கப் போகிறோம் என்பதை நினைத்தபொழுதே பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியது. போன மாதம்தான் அவர் அரங்கேற்றிய "ஹெர்குலின் தாக்குதலை' பற்றி பேராசிரியர் நடத்திய பாடத்தை அவன் மனம் மீண்டும் அசைப்போட்டுப் பார்த்தது.

இந்தியா எப்பொழுதுமே அமைதியை நாடும் நாடு. ஆனால் அதன் எல்லை நாடுகளில் இருந்து அவ்வப்பொழுது தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். பல சமயங்களில் அது போராக வெடிக்கும்.

பஞ்சமித்ரா என்ற நாடு இந்தியாவின் வடமேற்கு எல்லையை அடுத்து இருந்தது. அந்த நாட்டுக்கு காஷ்மீர் மீது எப்பொழுதுமே ஒரு கண். அதை எப்படியும் கைப்பற்றி விடவேண்டும் என்ற துடிப்போடு இருந்தது. இதனால் எல்லை ஓரத்தில் அடிக்கடி சண்டை மூளும்.

1970-இல், உலகப் பந்தின் மிகவும் வளர்ந்த நாடு, விஞ்ஞான உச்சியில் இருக்கும் நாடு என்று புகழ் பெற்று இருந்த நாடாக எம்மான் இருந்தது. அந்த நாடு பல புதுப்புது விதமானப் போர்க்கருவிகளை உற்பத்தி செய்து குவித்தது. பிறகு அதைப் பிற நாடுகளுக்கு விற்கவும் முற்பட்டது.

அன்றைய கால கட்டத்தில் எம்மானின் மிக அரிய கண்டுபிடிப்பாக அதனுடைய ஹெர்குலின் டாங்கர்கள் போற்றப்பட்டன. மிக வேகமாக செலுத்தக் கூடியது, எந்தவிதமான நிலப்பரப்பாக இருந்தாலும் அதில் மிதந்து, கடந்து சென்று முப்பது டிகிரி குன்றுகளிலும் ஏறி இறங்கிச் செல்லக் கூடியதாக இருந்தது மட்டுமல்லாமல், எளிதாக குண்டுகளால் துளைக்க முடியாத அளவுக்கு ஆறு அங்குலம் கனமுள்ள தகடுகளால் வலிமையூட்டப்பட்ட அந்த ஹெர்குலின் டாங்குகளின் பராக்கிரமத்தை எம்மான் ஆகா, ஓகோ என்று விளம்பரப்படுத்த, அவைகளை வாங்க உலக நாடுகள் வரிசை கட்டி நின்றன.

பார்த்தது பஞ்சமித்ரா, இதுதான் சரியான தருணம், இத்தகைய டாங்குகளோடு இந்தியாவைத் தாக்கினால் எளிதில் வெற்றிக்கனியைப் பறித்து விடலாம் என்று எண்ணியது, விளைவு...

""சார், இதைப் படித்துவிட்டுக் கையெழுத்து இடுங்கள்'' என்று பஞ்சமித்ராவின் பாதுகாப்பு மந்திரி நீட்டிய தாள்களைத் தன் கையில் வாங்கிக் கொண்டார் அந்த நாட்டின் பிரதம மந்திரி.

""என்னது நானூறு ஹெர்குலின் டாங்குகளை, எம்மானிடம் இருந்து வாங்க, நான் கையெழுத்து இடவேண்டுமா?'' ""நம்முடைய நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு, இது மிகவும் கடினமாயிற்றே''.

""சார், இந்த டாங்குகளைக் கொண்டு இந்தியாவைத் தாக்கினால், கட்டாயம் நமக்கு வெற்றிதான். இந்தியாவிடம் இத்தகைய டாங்குகள் இல்லை. நானூறு ஹெர்குலின்களைக் கொண்டு இந்திய எலிகளை நசுக்கி வீழ்த்திவிடலாம். காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என்ற நம்முடைய வெகுநாளையக் கனவும் நிறைவேறும்.

1970, பஞ்சமித்ராவுக்கும் இந்தியாவுக்குமிடையே போர் மூண்டது. செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி இந்தியாவின் சரித்திர ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் போர் நிகழ்ச்சியாக அது அமையப்போவதை அப்பொழுது யாராலும் கணிக்கப் பட்டிருக்கவில்லை.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதி அது. பஞ்சமித்ராவுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான, ஆனால் அத்துமீறி நுழையக்கூடாத இடம். அங்கே பஞ்சமித்ராவின் சிப்பாய்களும், ராணுவ உயர் அதிகாரிகளும் குவியத் தொடங்கினர். இருநூறுக்கும் அதிகமான ஹெர்குலின் டாங்குகளை ஓட்டிக் கொண்டு, குண்டுகளைச் சரமாரியாகப் பொழிந்துக் கொண்டு முன்னேறினர்.

இத்தகைய கடுமையானத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்தியப் படை தடுமாறியது. ஒரு நாள் போரில் பஞ்சமித்ராவின் ராணுவம் இந்தியாவுக்குள் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்தியப் படையைத் தலைமை ஏற்று மேஜர் ஜெனரல் விக்ரம் சிங் வழி நடத்திக் கொண்டிருந்தார்.

""சார், பஞ்சமித்ராவின் ராணுவம்'' என்று ஜெனரல் மான்சிங் முடிக்கும் முன்...
""எனக்குத் தெரியும் மான்சிங். இப்பொழுது மாலை மணி ஐந்து, சரியாக ஆறு மணிக்கு மற்ற ஜெனரல்களையும், உயர் அதிகாரிகளையும் நான் சந்திக்க ஏற்பாடு செய்''.

""அப்படியே சார்''.

தன் முன் கூடி இருந்தவர்களை ஒரு நோட்டம் விடுகிறார் விக்ரம் சிங்.

""அன்பர்களே, நம் தாய்நாட்டின் மானமும், பாதுகாப்பும் இப்பொழுது நம் கையில் உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் பலத்தைக் கொண்டு பஞ்சமித்ராவை வெல்வது கடினம்; ஏனெனில் அவர்களிடம் சக்திவாய்ந்த ஹெர்குலின் டாங்குகள் உள்ளன. ஆனால் அறிவைக் கொண்டு நாம் எளிதாக வெற்றியை அடையலாம்''.

""எப்படி சார்?'' என்று கோரஸாக குரல்கள் எழுந்தன.

""சொல்கிறேன், இன்று இரவு எட்டு மணிக்கு நன்றாக இருட்டிய பிறகு, நம்முடைய சிப்பாய்களை (ம) வடிவத்தில் நிற்க வைத்து விடுங்கள்''.

""எதற்கு சார் இப்படி?''

""உள்ளே நுழையும் பகைவர்களுக்கு, நம்மைத் தாக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கும். அதனால் தைரியமாக உள்ளே ஊடுருவி வருவார்கள். அந்தச் சமயத்தில் பக்கவாட்டிலும், உள்ளே தள்ளியும் மறைந்திருக்கும் நம் வீரர்கள் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து தாக்கலாம்''.

""ஆனால் சார், அவர்கள் ஹெர்குலின் டாங்குகளில் வருவார்களே?''

""இப்பொழுது பஞ்சமித்ரா பஞ்சாபின் கிராமப் பகுதியில் முற்றுகையிட்டு உள்ளது. அங்கே, அறுவடைக்குக் காத்திருக்கும் கரும்புப் பயிர்கள் ஓங்கி, உயர்ந்து, வளர்ந்து நிற்கின்றன. நம்முடைய வீரர்களும் நம் டாங்குகளும் அவைகளின் ஊடே இருப்பதை, பகைவர்களால் எளிதாக பார்க்க முடியாது''.

""சார், ஹெர்குலின் டாங்குகளை எப்படிச் சமாளிப்பது?''

""இன்று இரவு சரியாகப் பனிரெண்டு மணிக்குப் பகைவர்கள் வரும் பாதையில் இருக்கும் கரும்புத் தோட்டங்களில், தண்ணீரை அதிகமாகப் பாய்ச்சுங்கள். அதுமட்டும் அல்ல காலையில் அந்த இடங்களை நான் சுற்றிப் பார்த்தேன், கரும்பு வயல்களின் பக்கவாட்டில் பல கால்வாய்கள் இருக்கின்றன. அவைகளைத் திசைத் திருப்பி மொத்தத் தண்ணீரையும் கரும்புத் தோட்டங்களில் பாயுமாறு செய்யுங்கள்''.

""சார்...''

""கேள்விகள் வேண்டாம், சொன்னதைச் செய்யுங்கள்''.

மறுநாள் பொழுது விடிந்தது. பஞ்சமித்ரா சிப்பாய்கள் தங்களுடைய துப்பாக்கிகளோடு முன்னேறினர். அவர்களை எதிர்க்க யாருமே இல்லை. பயந்தாங்கொள்ளிகள் ஓடிவிட்டனர் என்று எக்காளித்துச் சிரித்தனர். குழு குழுவாகப் பிரிந்து புகைப்படங்களைக் கரும்புகள் அருகே நின்று எடுத்துக் கொண்டனர்.

ஹெர்குலின் டாங்குகளை ஓட்டிக் கொண்டு வேகமாக கரும்பு வயல்களில் பஞ்சமித்ரா ராணுவ அதிகாரிகள் குஷியாகச் சென்றனர்.

""ஐயோ என்ன இது?'' என்று கூக்குரல்கள் ஆங்காங்கே எழுந்தன.

யாராலும் வீழ்த்தமுடியாது என்று மார் தட்டி முன்னேறிய ஹெர்குலின் டாங்குகள், பாதி அளவு சேற்றில் முழுகிக் கால்களை இழந்த வாத்துகளாகச் சிக்கி முன்னேற முடியாமல் நின்று போயின.

""என்ன நடந்தது?''

சரித்திரம் நிகழ்ந்தது. 

மேஜர் ஜெனரல் விக்ரம் சிங், கரும்பு வயல்களில் அதிகமானத் தண்ணீரைப் பாய்ச்சச் சொன்னார் அல்லவா, அந்த நிலம் தண்ணீரை உறிஞ்சி, சேறாக மாறிப் போய் இருந்தது. அதன் மீது சென்ற ஹெர்குலின் டாங்குகளின் சக்கரங்கள் அந்தச் சேற்றில் சிக்கி, இயங்க முடியாமல் நின்று போயின.

அவ்வளவுதான் கரும்புப் புதர்களில் மறைந்திருந்த இந்தியப் படை, சுற்றிச் சூழ்ந்து பஞ்சமித்ரா ராணுவத்தின் ஹெர்குலின் டாங்குகளைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

அவர்களுக்கு எல்லாம் தலைமை ஏற்று மேஜர் ஜெனரல் விக்ரம் சிங் முன்னால் முன்னேறிச் சென்று தன்னுடைய சாதாரண டாங்கில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியின் மூலம் ஏழு ஹெர்குலின் டாங்குகளைத் தாக்கி முற்றிலுமாக அழித்தார்.

தலைமை அதிகாரி விக்ரம் சிங்கின் வீரமும், தைரியமும் மற்ற அதிகாரிகளுக்கும், இந்தியச் சிப்பாய்களுக்கும் ஊக்க மருந்தாக அமைந்தது. மொத்தம் 117 ஹெர்குலின் டாங்குகள் துவம்சமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் பஞ்சமித்ரா சிப்பாய்கள் புறமுதுகிட்டு ஓடினர்.

எங்கிருந்தோ சீறி வந்த குண்டு ஒன்று விக்ரம் சிங்கின் டாங்கை பதம் பார்த்தது.
விளைவு இந்த வீரப்போரில் மேஜர் ஜெனரல் விக்ரம் சிங் தன் இரண்டு கால்களையும் இழந்து விட்டார்.

இரண்டே நாளில் போர் முடிந்தது. இந்தியாவை எளிதாக ஹெர்குலின் டாங்குகளைக் கொண்டு வீழ்த்திவிடலாம் என்ற பஞ்சமித்ராவின் கனவும் கலைந்தது.

ராணுவ மருத்துவமனையில் இரண்டு கால்களை இழந்த நிலையில் விக்ரம் சிங் படுத்திருந்த பொழுது அவரைப் பார்க்க இந்தியாவின் பிரதம மந்திரி சென்றார். அப்பொழுது மேஜர் ஜெனரல் விக்ரம் சிங்கின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

""கால்களை இழந்து விட்டோமே என்று கண்ணீரைச் சிந்துகிறாயா'' என்றார் பிரதம மந்திரி.

""இல்லை சார், என்னுடைய தேசத்தின் பிரதம மந்திரி வந்திருக்கிறார், அவருக்கு  எழுந்து நின்று சல்யூட் அடிக்க முடியாமல் படுத்திருக்கிறேனே என்று கண்ணீர் சிந்தினேன்'' என்றாராம் மேஜர் ஜெனரல் விக்ரம் சிங்.

எண்பது வயது நிரம்பிய பரம்வீர் சக்ர விருது பெற்ற மேஜர் ஜெனரல் விக்ரம் சிங் மேடையில் ஏறிக் கொண்டிருந்தார்.

""விக்ரம் சிங்ஜிக்கு ஜே!'', ""இந்தியாவின் வீரமகனுக்கு ஜே!'' என்ற கோஷம் விண்ணைப் பிளந்துக் கொண்டு எழுந்தது.

சரியான தலைமை அதிகாரியாகத் தன் படையை வழி நடத்தி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மேஜர் ஜெனரல் விக்ரம் சிங் புகழ் என்றும் அழியாது, இந்தியச் சரித்திர வரலாற்றில் தன் சரியான வழிகாட்டுதலினால், அழியாத இடத்தை அவர் பெற்று விட்டார்.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

(குறள் எண்: 770)

பொருள் :

உறுதி வாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com