எழுத்துப் பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல்! 

கதையோ கவிதையோ எது ஒன்றையும் எழுதுவது ஒரு சுகம். தான் எழுதியதை அச்சில், தன் பெயருடன் சேர்த்து, பார்ப்பது என்பது ஒரு வகையான தனி சுகம்.
எழுத்துப் பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல்! 
Published on
Updated on
1 min read

கதையோ கவிதையோ எது ஒன்றையும் எழுதுவது ஒரு சுகம். தான் எழுதியதை அச்சில், தன் பெயருடன் சேர்த்து, பார்ப்பது என்பது ஒரு வகையான தனி சுகம்.

பத்திரிகை ஒன்றில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல், தான் மட்டுமே எழுதிய படைப்புகள் ஒரு தனி நூலாக வெளிவருவதோ சுகமோ சுகம்.

தங்களின் படைப்புகள் மட்டுமே அடங்கிய தனி நூல் வெளியிட விரும்பாத எழுத்தாளரோ கவிஞரோ இவ்வுலகில் உண்டா என்ன ?

எழுத்துலகில் ஒரு தவழும் குழந்தையாக நுழைந்து தளர்நடை பயிலத் தொடங்கியிருக்கும் இளம் எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்களின் படைப்புகளைப் புத்தகமாக்க ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லையே ?

அதே நேரம், தங்கள் படைப்புகளை எப்படித் தொகுப்பது, யாரை அணுகுவது, பதிப்பக முதலாளிகள் தங்களை மதித்து ஓரிரு வார்த்தைகளாவது பேசுவார்களா, பத்திரிகைகளுக்கு என்று ஒரு "ஸ்டைல்' இருப்பது போன்று பதிப்பகங்களுக்கும் ஏதாவது இருக்கிறதா.

இவ்விதம் தங்கள் மனதில் தோன்றும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமல்,  சரி, இப்போதைக்குப் பத்திரிகைகளுக்கே தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்போம்  என்று முடிவு செய்து, அதே நேரம் நூல் வெளியிடும் ஆர்வத்தையும் விட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டக் காத்திருக்கிறது, "பாக்கிடெர்ம் டேல்ஸ்' என்ற பதிப்பகம்.

இளம் வயதிலேயே பல்வேறு நூல்களை ஆர்வமாகப் படிக்கத் தொடங்கி, எழுதுவதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட லட்சுமிப்பிரியா, தன்னைப் போன்ற எழுத்தார்வம் மிக்க இளைஞர்களின் புத்தகக் கனவை நனவாக்க விரும்பி இந்நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். லட்சுமிப்பிரியாவின் தாயார், எழுத்தாளர் உமா அபர்ணா இந்நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

கரோனா பரவத்தொடங்கிய 2020 -ஆம் வருடத்தில் மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கப்பட்ட பாக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் இந்தக் குறுகிய காலத்தில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளது.

எண்ணற்ற இளம் எழுத்தாளர்கள், குறிப்பாக எழுத்தார்வம் மிக்க இல்லத்தரசிகள் உட்பட பலருடைய படைப்புகளை நூல்வடிவில் கொண்டுவந்திருக்கும் பாக்கிடெர்ம்டேல்ஸ் பதிப்பகம் அந்நூல்களில் சிலவற்றுடன், பிரபல எழுத்தாளர்கள் சிலரது நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் பவா செல்லதுரையின் நூல் ஒன்றும் இவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவும் இந்தப் பதிப்பகம் வசதி செய்து தருகிறது.

தரமான கதைகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றைக் குறும்படமாகவோ, தொடர்நாடகங்களாகவோ தயாரித்துத் தரும் முன்னெடுப்புகளையும்  இவர்கள் வைத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com