பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கதை சொல்லும் குறள் - 72: அவை அறிந்து பேசுதல்!

"ஸ்ரீ முத்ரா பன்முக சிறப்பு மருத்துவமனை" என்ற பெயர் பலகையைத் தாங்கிப் பிரம்மாண்டமாக எழும்பி நின்றது அந்த மருத்துவமனை.

News image
Updated On :23 மார்ச் 2022, 12:30 am

கணேஷ் சுந்தரமூர்த்தி

"ஸ்ரீ முத்ரா பன்முக சிறப்பு மருத்துவமனை" என்ற பெயர் பலகையைத் தாங்கிப் பிரம்மாண்டமாக எழும்பி நின்றது அந்த மருத்துவமனை.

தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகிய மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் ஜெயவேல்.

அவர் கண்முன்னே கடந்த காலக் காட்சி ஒன்று நிழல் படமாக ஓடியது. முல்லைப்பட்டி கிராமத்தின் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் நான்காம் வகுப்பு மாணவனாக ஜெயவேல் அமர்ந்திருக்கிறான்.

புதிய வகுப்பு, ஆனால் ஒரே ஆசிரியர். மொத்தமே இருபது மாணவர்கள்தான் அங்கே படித்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் அப்படியே நான்காவது வகுப்புக்கு மாற்றப்படுவார்கள். 

ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் என்றால் டவுனுக்குத்தான் செல்ல 
வேண்டும்.

அன்று ஆசிரியர் முதல் நாள் என்பதினால், எதிர்காலத்தில் மாணவர்கள் என்ன படிக்க ஆசைப்படுகிறார்கள் என்று ஒவ்வொரு மாணவனையும் எழுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். அதில் ஒரு குறும்புக்கார மாணவன்,  ""ஐயா என் அப்பாரு என்னை டவுனுக்கு எல்லாம் அனுப்பிப் படிக்க வைக்க மாட்டாரு, என் எதிர்காலம் எருமை மாடுகளை மேய்ப்பதுதான்'' என்று கூற வகுப்பே சிரிப்பில் ஆழ்ந்தது.

ஜெயவேலுவின் முறை வந்தது. 

""ஐயா நான் பெரிய டாக்டராக வருவேன்'' என்றான்.

""ஐயா இவன் அப்பாரு வயல்ல கூலி வேலை செய்யறவரு; இவன் பெரிய டாக்டராக வருவானாம்'' என்று சக மாணவன் ஒருவன் கத்திச் சொல்ல மீண்டும் அங்கே சிரிப்பலை எழுந்தது.

""ஆமாம், உண்மைதான்''.

முல்லைப்பட்டியிலிருந்து இருபது மைல் தொலைவில் இருந்த டவுனுக்கு அனுப்பி ஜெயவேலைப் படிக்க வைக்க அவனுடைய அப்பாவுக்கு வசதியும் இல்லை, மனமும் இல்லை. ஜெயவேலுவுக்கு அடுத்து மூன்று பெண் பிள்ளைகள் அவர்களைக் கரையேத்த வேண்டுமே.

ஜெயவேலுவின் டாக்டர் ஆசைக்கு மூடுவிழா நடந்தேறியது. வீட்டின் தலைமகன் அதுவும் ஆண்மகன் வெறும் ஐந்தாம் வகுப்புப் படிப்பறிவோடு சென்னை மாநகரத்துக்கு வந்தான் வேலை வாய்ப்பைத் தேடி. அந்தச் சமயத்தில் ஜெயவேலுவுக்கு வயது இருபது முடிந்திருந்தது.

வேலையில் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று இனம் பிரிக்காத குணமும், அயராத உழைப்பும், உண்மையும், நேர்மையும் அவனைப் படிப்படியாக இமாலய உயரத்திற்கு இட்டுச் சென்றது.

டீ சப்ளையர், டீக்கடை, மளிகைக்கடை இன்று பலகோடி வருமானத்தை ஈட்டித் தரும் ஜெயவேலு ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்ட ஸ்டோர்கள். இங்கே கிடைக்காத பொருட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் கிடைப்பதைப் பட்டியலிட முடியாது.

ஜெயவேலுவுக்கு ஒரு மகன் முத்ரா, ஒரே மகள் தாமரை. முத்ரா பிறந்த பிறகுதான் அதிர்ஷ்ட தேவதை, ஜெயவேலுவின் பக்கம் தன் கடைவிழிப் பார்வையைத் திருப்பினாள் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. 

ஒரு சிறந்த மருத்துவராகத் தன்னால் ஆக முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தன்னுடைய மகன், மகள் மூலமாக ஜெயவேல் தீர்த்துக் கொண்டார். டாக்டர் முத்ரா இருதய நோய் நிபுணர் என்றால் டாக்டர் தாமரை மகப்பேறு மருத்துவராக வலம் வருகிறார்.

மருமகள் ஜானகியும் மருத்துவர்தான். தோல் மருத்துவரான அவளுக்குச் சென்னையில் பல பணக்காரக் குடும்பங்களின் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும் தங்களுடைய தோலை மெருகேற்றிக் கொள்ளவும் கியூவில் நிற்கிறார்கள்.

டாக்டர் தாமரையின் கணவன் கண்ணன் ஒரு காஸ்ட்ரோ எண்டிராலஜிஸ்ட். இரைப்பை, குடல் சம்பந்தமான நோய்களுக்கு மருத்துவர்.

இப்படி முழுக் குடும்பமே மருத்துவத் துறையைச் சார்ந்திருந்ததினால், “ஸ்ரீ முத்ரா பன்முக சிறப்பு மருத்துவமனையை” மூன்று ஆண்டு காலங்கள், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கைதேர்ந்த கட்டட நிபுணர்களை வைத்து ஜெயவேல் கட்டி முடித்து விட்டார்.

நாளைக்குச் சரியாகக் காலை எட்டு மணிக்கு மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தேற இருந்தது. சென்னை மாநகரத்தின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் மேடையை அலங்கரிக்க இருந்தனர். சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஷண்முகநாதன் மருத்துவமனையைத் திறந்து உரையாற்ற இருந்தார். எவ்வளவோ சொல்லியும் கேளாமல் முத்ரா தன் தந்தையை வரவேற்பு உரை நிகழ்த்தி, பேசச் சொல்லியிருந்தான்.

பொழுது விடிந்தது. எல்லோரும் பரபரப்பாக விழாவுக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஜெயவேல் கோட்டையும், சூட்டையும் தவிர்த்து பட்டு வேஷ்டி, சட்டையில் கிளம்பி விட்டார்.

விழா தொடங்கியது. ஜெயவேலுவின் கையில் மகன் முத்ரா மருத்துவத் துறையைப் பற்றிக் கொடுத்த உரை டைப் செய்யப்பட்டு இருந்தது. அந்தத் தாள்களை நூறாவது முறையாகப் படித்துப் பார்த்தார். தன் முன்னே அமர்ந்திருந்த அறிஞர் பெருமக்களைப் பார்த்தார்.

குழுமியிருந்தவர்கள் எழுபத்து ஐந்து சதவிகிதத்திற்கு மேல் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முன் ஐந்தாவது வரை படித்த நான் மருத்துவத்தைப் பற்றிப் பேசுவது பொருந்தாது என்று முடிவு செய்தார்.

அவருடைய முறை வந்தது மகன் எழுதிக் கொடுத்ததை மடித்துத் தன் கைப்பையில் வைத்துவிட்டு மேடையில் இருந்த மைக்கின் முன் நின்றார்.

ஐந்து நிமிடங்கள் எல்லோரையும் வாழ்த்தி, வந்தமைக்கு நன்றி சொல்லித் தன்னுடைய மருத்துவராகும் ஆசை நிறைவேறாமல் போனதையும் இப்பொழுது மருத்துவமனையைக் கட்டி இருப்பது பல நோயாளிகளுக்கு நன்மையைப் பயக்கும் என்பதையும் பொதுவாகச் சொல்லி அமர்ந்துவிட்டார்.

ஐந்தாவது வரை மட்டும்தான் படித்தவர், ஆனால் வாழ்க்கைப் பாடத்தைக் கரைத்துக் குடித்த அறிஞர்; வார்த்தைகளை அளந்து பேசி, அவையோரின் தன்மையை கருத்தில் கொண்டு அதிமேதாவியாகப் பேசாமல், உண்மையைச் சுருக்கமாகக் கூறி எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

(குறள் எண் : 711)

பொருள் : ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.