விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் "ராஜா ராணி 2' தொடரும் ஒன்று. இந்தத் தொடரின் நாயகியாக, சந்தியா என்ற போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஆல்யா மானசா. தற்போது, அவர் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இந்தத் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். இதனால், ஆல்யாவுக்குப் பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் இந்தத் தொடரின் நாயகியாகி உள்ளார்.
ரியா விஸ்வநாதன் சின்னத்திரை உலகிற்கு புது வரவு. சென்னையைச் சேர்ந்த மாடலான இவருக்கு இந்தத் தொடர்தான் முதல் தொடர்.
இந்தத் தொடரின் கதை களம் போலீஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளதால், அந்தக் கேரக்டருக்கு ரியா பொருத்தமாக இருப்பார் என்று அவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தத் தொடரின் மூலம் மாடலான ரியாவுக்கு சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நாயகியாக வலம் வர வாய்ப்பு கிட்டலாம் என்று எதிர்பார்க்கிறார்.
இதற்கிடையில், ஆல்யா மானசா தொடரில் இருந்து விலகியிருந்தாலும், இது தற்காலிகம்தான் அவர், கண்டிப்பாக மீண்டும் தொடரில் இணைவார் என்கிறது சின்னத்திரை வட்டாரம். அவர் வரும் வரையில் அவருக்கு பதிலாக ரியா இனி சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் "மீரா'. இத் தொடரின் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் பூஜா. சின்னத்திரையில் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
தற்போது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வரும் இவர், ஜீ கன்னட தொலைக்காட்சியில் ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இது தவிர்த்து, அவருடைய சகோதரனுடன் இணைந்து நடத்தும் புரொடக்ஷன் ஹவுஸின் மூலமாக தயாரிக்கும் படங்களின் ஆர்ட்டிஸ்ட்களுக்கு காஸ்டியூம் டிசைனராகவும் இருக்கிறார்.
தற்போது தொடரில் ரீ- என்ட்ரி கொடுத்தது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் கேமராவிற்கு முன்பாக வருகிறேன். நான் மிகவும் விரும்பும் தமிழ் தொடரில் மீண்டும் நடிக்கிறேன். அதற்காக குஷ்புவிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 7 ஆண்டுகளில் சின்னத்திரையில் பல விஷயங்கள் மாறிவிட்டன. இந்த மாற்றத்தை எல்லாம் படிப்படியாக என்ஜாய் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்' என பதிவிட்டிருக்கிறார்.