மாரத்தான் மங்கை!

இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஸுஃபியா ஸுஃபி,   2018-இல்  மாரத்தான்  ஓடுதல் போட்டிகளில் அதிக  அளவில் பங்கேற்ற பெண்மணி என்பதற்காக  கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பிடித்துள்ளார்.
மாரத்தான் மங்கை!
Updated on
2 min read

இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஸுஃபியா ஸுஃபி,   2018-இல்  மாரத்தான்  ஓடுதல் போட்டிகளில் அதிக  அளவில் பங்கேற்ற பெண்மணி என்பதற்காக  கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பிடித்துள்ளார். தனது சாதனைகளைதானே முறியடிக்க  பயிற்சி  எடுத்தும் வரும் அவர் நான்கு  கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

அவரிடம் பேசியபோது:

''எனக்கு முப்பத்து ஏழு வயதாகிறது.  தில்லி விமான நிலையத்தில் பத்து ஆண்டுகள் வேலை பார்த்தேன். பகல்,  இரவு  என்று வேலை பார்த்ததால்  எனது உடல்நிலைப் பாதிப்புக்கு உள்ளானது. அதனால் உடல் நலத்தைப் பேண  ஓட   ஆரம்பித்தேன்.   உடல்நிலை முன்னேற்றம் கண்டதால், தொடர்ந்து ஓடுவது என்று முடிவு செய்து   விமான நிலைய வேலையை 2017-இல்   விட்டுவிட்டேன். 

 'ஓடுவதற்காக நல்ல வேலையை   யாராவது ராஜிநாமா செய்வார்களா'  என்று பெற்றோர் உள்பட பலரும் கேட்டனர்.  தினமும் ஓடுவது  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை வலுப்படுத்தியது.  வேலையைவிட்டதால் ஏற்படும்  பொருளாதார  வெற்றிடத்தை  உடனே ஈடு செய்ய முடியவில்லை என்றாலும், மனதுக்குப் பிடித்த ஓட்டத்தைத் தொடர்கிறேன்  என்கிற நிறைவும் சந்தோஷமும்  எனக்குப் பெரிதாக்கப்பட்டது. ஆக,   ஓடுதல்  எனது மூச்சாகியது. 

வேலையைவிட்ட சில மாதங்களில்  தில்லி - ஜெய்ப்பூர் - ஆக்ரா -  தில்லி  நகரங்களை  ஓட்டத்தால் தொட்டு வந்தேன்.  இந்த ஓட்டத்தில்  16 நாள்களில்  720 கி.மீ தூரத்தைக் கடந்திருக்கிறேன்,  2019-இல் காஷ்மீர் - கன்னியாகுமரி இடையே  சுமார் 4 ஆயிரம் கி.மீ.  தூரத்தை  87 நாள்களில்  கடந்தது,  2021-இல் தில்லி, கொல்கத்தா, மும்பை,  சென்னை  நகரங்களுக்கு  இடையே உள்ள தூரம்  6 ஆயிரத்து 2 கி.மீ  ஓட்டத்தால்   தொடும்  முயற்சியை 110 நாள்கள், 23 மணி நேரம்,  24 நிமிடங்களில் நிறைவு செய்தது, 2022-இல் மணாலியிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு  6 நாள்கள், 12 மணி,  6 நிமிடங்களில்  லே நகரை அடைந்தது ஆகிய மூன்று சாதனைகளை உலக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்   கத்தரில் நடைபெற்ற  மாரத்தான் போட்டியில். 200 கி.மீ தூரத்தை  30 மணி 34 நிமிடங்களுக்குள் கடந்து  நான்காவது கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினேன்.  இது இந்தியாவுக்கு வெளியே நான் கலந்துகொண்ட முதல் போட்டி. 

கடந்த செப்டம்பரில் மணாலி-  லே இடையே 427  கி.மீ  தூரத்தை  இரண்டாவது முயற்சியில்  97 மணி நேரத்தில்  ஓடிக்  கடந்தேன்.  முதல் முயற்சியில்  113 மணி நேரம் பிடித்தது. 100 மணிக்கும் குறைவான  நேரத்தில்  ஓடிக் கடக்க வேண்டும் என்பதால்,  மூன்றாம்   முயற்சியில்,   ஓட்ட   நேரத்தில் 16 மணி நேரம்  குறைத்து 97 மணி நேரத்தில்  லேயை  அடைய  முடிந்தது. அதுவும் கின்னஸ் சாதனையானது. 

2025-இல்  உலகை  சுற்றி  சுமார் 30 ஆயிரம் கி.மீ தூரத்தை  680 நாள்ட்களில் கடக்க  தீர்மானித்துள்ளேன்.  இத்தனை நீண்ட தொலைவை எந்த பெண்ணும் ஓடவில்லை.  

விமான நிலைய வேலையைவிட்டு  ஓட்டத்தை  முழு நேரத் தொழிலாக  மாற்றி நான்கு  ஆண்டுகள்தான் ஆகின்றன. இத்தனை  சாதனைகளைச்  சாதிக்க முடிந்ததற்கு  எனது கடினமான பயிற்சியும், சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும்தான் காரணம். 

ஓட்டத்தின்போது  வெயில்  அதிகமாக இருக்கும் மதிய வேளைகளில் ஓய்வு எடுப்பேன்.  அதிகாலை நாலரைக்கு  ஓட  ஆரம்பிப்பேன். முற்பகல் பாதி தூரம் பிற்பகல் பாதி தூரம்  என்று  உத்தேசமாக 60 கி.மீ. வரை ஓடி  முடிப்பேன்.  சூரத் அருகே  நான் ஓடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரியவர்  என்னை காரில் பின்தொடரும் கணவர் விகாஷிடம், 'இந்தப் பெண் தப்பு ஏதும் செய்து விட்டாரா?  அதனால் அவரை ஓடச் சொல்லிவிட்டு  காரில் நீங்கள் பின் தொடர்கிறீர்களே? அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக் கொள்ளலாமே?' என்றார். கணவர்  சாதனை நிகழ்த்த  நான் ஓடுவதாகச் சொல்லவே, அந்தப் பெரியவர் என்னை ஆசிர்வதித்தார்'' என்றார்.

- பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com