டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பதக்கம் கனவாகிவிட்ட நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இரண்டு வெண்கலப் பதக்கத்துடன் இன்னொரு போட்டியில் நான்காம் இடத்தில் இடம்பிடித்த மனு பாக்கர் கண்ட கனவுகள் நனவாகிவருகின்றன.
"எப்போதும் விளையாட்டு உடை, வீட்டிலும் முழு கால்சட்டை டீ ஷர்ட்..' என்றிருப்பார் மனு பாக்கர். "கோன் பனேங்கா கொரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் மும்பைக்கு வந்தபோது, முதலில் சச்சின் இல்லத்துக்குச் சென்ற மனு பாராட்டுகளைப் பெற்று, சச்சினின் குடும்பத்தாருடன் தனித்தனியே படங்கள் பிடித்து பிரியாவிடை பெற்றார்.
பின்னர், "கோன் பனேங்கா கொரோர்பதி' நிகழ்ச்சியில் 58, 500 ரூபாய் மதிப்பிலான வெளிர் சந்தன நிறத்திலான ஸ்லீவ் லெஸ் பிளெளஸ் சேலையை அணிந்து, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். அடுத்தது நடிகர் அமிதாப் பச்சனுடன் அறிமுகமும், பாராட்டுகளையும் பெற்றார். அமிதாப் நடத்திய நிகழ்ச்சியை தனது தாய்க்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியாகவே மனு மாற்றிவிட்டார்.
'அம்மாவுக்கு இளமையில் ஸ்போர்ட்ஸ் வீராங்கனையாக மாற வேண்டும் என்ற அதீத ஆசை இருந்தது. ஆனால் அவருக்கு உற்சாகம் தந்து வழிகாட்ட யாரும் இல்லை. வீட்டில் வசதியும் இல்லை. அவரால் முடியாததை என்னைக் கொண்டு சாதிக்க வைத்தார். விளையாட்டுகளில் பங்கெடுக்க ஊக்குவித்தார். பல விளையாட்டுகளில் பங்கு பெற்று கடைசியில் கைத் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதைத் தேர்ந்தெடுத்தேன். "எந்தப் பிரிவானால் என்ன? உன் திறமையை அற்புதமாகக் காட்டு' என்று எனக்குத் துணையாக நின்றார்.
வீட்டில் சின்னத்திரையில் மேரி கோம், பி.வி.சிந்து போட்டி நிகழ்ச்சிகளைத் பார்க்கச் சொல்வார். எனக்குள் ஒலிம்பிக்ஸ் பதக்கம் குறித்த கனவை நிறைவேற ஊன்றுகோலாய் இருந்தார். எனது பயிற்சியாளரும், என் அம்மாவும்தான் பதக்கம் பெற காரணம்'' என்று மனு பாக்கர் பேசி அசத்தினார்.
அவருக்கு இனி நனவாக வேண்டிய கனவு ஒன்றே ஒன்றுதான்! அது "அடுத்த ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம்!'