விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்

முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ், கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.
விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்
Published on
Updated on
2 min read

முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ், கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. காது கேட்கும் திறன் கணிசமாகக் குறைய, அன்றாட சவால்களை எதிர்கொள்ளவே நேரம் இல்லை.

வயதாகப் படிக்கும் ஆர்வம் குறையும். படித்தவற்றை நினைவில் இருத்திக் கொள்ளும் ஆற்றலும் குறையும். இத்தனை சிரமங்களுக்கு இடையில் 7-ஆவது முயற்சியில், 2024 சிவில் சர்வீஸ் தேர்வில் ஆயிரமாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஸா உன்னிராஜன்.

முதன்மை பொது கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாகப் பணிபுரியும் அவர் பள்ளிக்குச் செல்லும் தனது இரண்டு மகள்கள், குடும்பப் பொறுப்பு, நாற்பது வயது... என்பதையெல்லாம் கடந்து, சாதித்துள்ளார்.

அவர் கூறியது:

'விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம். எனது இரண்டாவது மகள் பிறந்தவுடன் மகப்பேறு விடுப்பின்போது திருப்புமுனை ஏற்பட்டது. வீட்டில் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, 'ஏன் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதாகக் கூடாது' என்ற கேள்வி எழ, லட்சியத்தை நனவாக்கும் காணொளிகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

நாம் விரும்புவதை நிறைவேற்ற முயற்சிக்காமல், ஏன் இறந்து போக வேண்டும். அரசு வேலை. நல்ல சம்பளம். இரண்டு மகள்கள். அமைதியான குடும்பம். அதில் நிறைவுப் பெறுவதை விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படிக்க வேண்டுமா? , குடும்பத்தைக் கவனிக்க வேண்டாமா? என்றெல்லாம் பேசினார்கள்.

இருந்தாலும் தேர்வுக்குத் தயாராகத் தீர்மானித்தேன். இரண்டு மகள்களைப் பராமரிக்கவும், பார்க்கும் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்துக்கும் நேரத்தை ஒதுக்கியே ஆக வேண்டும் என்பதால், தேர்வுக்கு என்னைத் தயார் செய்ய குறைந்த நேரமே என்னால் ஒதுக்க முடிந்தது. அதனால் முதல் ஆறு முயற்சிகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஏழாம் முயற்சியில் கிடைத்த நேரத்தில் படித்தேன். செய்தித்தாள்களை வாசிப்பதில் அதிகமான கவனம் செலுத்தினேன். குறிப்பாகத் தலையங்கங்களை வாசிப்பதும், நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதும் எனது தேர்ச்சிக்கு உதவின.

தனியார் பயிற்சி நிலையத்திலும் சேர்ந்து பயிற்சி பெற்றேன். செவித்திறன் குறைபாடு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது. ஆடியோ பாடங்களைக் கேட்பதில் சிரமங்கள் இருந்தன. அதனால் எனது ஏழாவது முயற்சியில் தர வரிசையில் ஆயிரமாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இருந்தாலும் எனது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எனது கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி.

எனது வெற்றிப் பயணத்துக்குப் பின்னால் உறுதியான பக்க பலம் அமைந்தது எனது அதிர்ஷ்டம். எனது பெற்றோர், தேர்வுக் காலங்களில் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துகொண்டனர். அவர்களின் உதவி இல்லாமல், நான் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது. மென்பொருள் பொறியாளரான கணவர், எனது சோர்ந்து போகாத ஆர்வத்தைக் கண்டு, தொடர்ந்து முயற்சி செய்ய உற்சாகம் கொடுத்தார்.

நான் ஆயிரமாவது ஆளாகத் தேர்வு பெற்றாலும், கேட்கும் திறன் குறைபாடு காரணமாக நான் மாற்றுத்திறனாளியாகக் கருதப்படுவேன். இட ஒதுக்கீடு காரணமாக எனக்கு ஐ.ஏ.எஸ். பதவி கிடைக்கும்'' என்கிறார் நிஸா உன்னிராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com