ரம்மியமான சூழலில் ராமக்கல்மேடு

ராமர் கால் பதித்த இடம் மலைப்பிரதேசமான 'ராமக் கால் மேடு' என்கிற ராமக்கல்மேடு.

Updated On :

ராமர் கால் பதித்த இடம் மலைப்பிரதேசமான 'ராமக் கால் மேடு' என்கிற ராமக்கல்மேடு. தமிழ்நாடு - கேரள எல்லையில், இடுக்கி மாவட்டத்தில் பசுமைப் பொங்கி வழியும் மலை உச்சியில் கலாசார முக்கியத்துவம் பெற்ற 'ராமக்கல் மேடு' அமைந்துள்ளது. இயற்கையை நேசிப்பவர்களுக்கும், மலையேற்றம் செல்பவர்களுக்கும் மிகச்சிறந்த தலம்.

தென்னாட்டில் ஸ்ரீராமன் சீதாதேவியைத் தேடி வந்தபோது இம்மலையின் உச்சிக்கும் வந்திருப்பதாக நம்பப்படுகிறது. அதனாலே இந்த இடம் 'ராமக்கல் மேடு' என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது. அதனை நினைவுபடுத்தும் விதமாக இம்மலையின் அடிவாரத்தில் திருமலை ராயர் பெருமாள் கோயில் நுழைவு வாசல் அருகே 'ஸ்ரீராமர் பாதம்' அமைந்துள்ளது.

இருபது படிகள் கடந்து உயரமான மலைக்குன்றை ஏறிச்செல்லும்போது காற்று நம்மை தள்ளுகிறது. எங்கும் பசுமைப் போர்த்திய புல்வெளிகள் உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கிறது.

மேலே ஏறிச்சென்றதும், சுமார் நாற்பதடி உயரத்தில் சிமென்ட்டினால் உருவாக்கப்பட்டிருக்கும், வயதான தோற்றத்தில் 'குறவன்-குறத்தி சிலைகள்' நம்மை வரவேற்கிறது. பழங்குடியினரின் நாட்டுப்புறக் கலைகள், கதைகளை மட்டுமில்லாது ராமக்கல் மேட்டின் அடையாளத்தையும் இவை பிரதிபலிக்கின்றன. சுற்றுலாவுக்கு வந்த மாணவர்கள் உள்பட பலரும் போட்டி போட்டுக் கொண்டு குறவன், குறத்தி சிலை முன்பு குழுவாக போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

அதற்குப் பின்னால் உள்ள பிரம்மாண்ட 'கழுகு சிலை', ஒருவித மரத்தினாலானது. அதனுள் படிகள் இருக்கின்றது. அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து (ஏரியல் வியூ) வெளியே பார்க்கலாம். பொழுதைப் போக்குவதற்கு சிறந்த இடம்.

மேலேயிருந்து பார்க்கும்போது திரும்பிய பக்கமெல்லாம் மலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் பசுமையான விவசாய நிலங்களின் அழகிய காட்சி கிடைக்கும்.

ஆற அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்க நேரம் போவதே தெரியவில்லை.

ராமக்கல் மேட்டுக்குச் செல்ல தேனி மாவட்டம், கம்பம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநில நெடுங்கண்டம் செல்லும் பேருந்தில் ஏறி, தூக்குப் பாலம் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஜீப் வாகனம் மூலம் செல்ல வேண்டும். காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.