மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

'தரமானதொரு நாவல் எழுத ஆசை'

பள்ளிப் பாடங்கள், விளையாட்டு, அன்றாடச் செயல்பாடுகள் எனச் சிறுவர்களின் உலகம் பல திசைகளில் விரிந்து கிடக்கிறது.

Updated On :

பள்ளிப் பாடங்கள், விளையாட்டு, அன்றாடச் செயல்பாடுகள் எனச் சிறுவர்களின் உலகம் பல திசைகளில் விரிந்து கிடக்கிறது. அந்த உலகத்துக்குள் வாசிப்பையும் எழுத்தையும் இணைத்துக் கொண்டு பயணிக்கிறார் ச.ரா.ஸ்ரீயக்ஷா.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு அருகிலுள்ள அரவேனு பகுதியைச் சேர்ந்த இவர், அரவேனு ஆல்பா ஜி.கே. மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வருகிறார். வயதுக்கு மீறிய வாசிப்புத் திறனும் கற்பனை வளமும் கொண்ட இவர், தனது கற்பனை உலகத்தை எழுத்துகளால் விரிவுபடுத்தினார். இவர் ஐந்தாம் வகுப்பிலேயே தமிழில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இவர் இரு நூல்களை வெளியிட்டு, இரண்டுக்கும் விருதுகளைப் பெற்றுள்ளார். ரஷியாவைக் கதைக்களமாகக் கொண்டு நாவல் எழுதியுள்ள இவர், தற்போது கஜகஸ்தானை மையமாகக் கொண்ட மற்றொரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனது தந்தை சதாசிவம் கல்லூரிப் பேராசிரியர். தாய் ராதா, பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியவர். எனது அண்ணன் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். தாயார் சிறு வயதிலிருந்தே தினமும் கதைகளைச் சொல்லி, புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தார். அவர் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கும் அழைத்துச் செல்வார். அப்போது முதல் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

கேசலாடா அரசு ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்தபோது, படங்களைப் பார்த்துக் கற்பனையாகக் கதை சொல்வேன். பள்ளியில் வழங்கப்பட்ட சிறிய குறிப்புகளைக் கொண்டு கதைகள் எழுதும் பயிற்சியும் கிடைத்தது. ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போது முழுமையான சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஜெயசீலன் ஆலோசனைகளை வழங்கியதுடன், எழுத்துப் பயணத்திலும் உறுதுணையாக இருந்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளரும் எனது மாமாவுமான ராம் தங்கம் அளித்த ஊக்கமும் வழிகாட்டுதலும், எனது எழுத்துப் பயணத்துக்கு முக்கியமான அடித்தளம்.

நான் எழுதிய முதல் கதையைத் தாயார், தாத்தா ஆகியோரிடம் வாசிக்கக் கொடுத்து கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றேன்.

தொடர்ந்து எழுதிய பத்துச் சிறுகதைகளைத் தொகுத்து 2024 டிசம்பரில் 'மந்திரத்தொப்பி' என்ற எனது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டேன். தேவதைக் கதைகளின் கற்பனை உலகத்துடன், குழந்தைகளுக்கு நல்லறத்தையும் வாழ்க்கை நெறிகளையும் உணர்த்தும் நீதிக்கதைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படைப்புக்குப் படைப்புக் குழுமத்தின் விருது கிடைத்தது. முதல் நூலுக்கே விருது கிடைத்தது எழுதுவதற்கான உற்சாகத்தை அளித்தது.

முதல் சிறார் நாவலுக்கே பரிசு

குன்னூரில் உள்ள செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்தபோது எனது முதல் சிறார் நாவலான 'அல்தாயின் அற்புதம்' நூலை எழுதினேன். 2025 டிசம்பரில் ஆப்பிள் புக்ஸ் நிறுவனம் இந்த நூலை வெளியிட்டது. உதகையைப் போன்ற குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை கொண்ட ரஷிய நாட்டின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், அந்த நாட்டின் பின்னணியில் கதாபாத்திரங்களை உருவாக்கி நாவலை எழுதினேன். ஓர் அரச குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களால் வளர்க்கப்படுகிறார்கள். பல்வேறு குழப்பங்கள், திருப்பங்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றிணைவதே நாவலின் மையக்கரு.

இந்த நாவலுக்கும் படைப்புக் குழுமத்தின் அங்கீகாரம் கிடைத்ததோடு, 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறார் நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் பாபுராஜ் களம்பூர் இந்த நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பணியை முத்து பவித்ரா மேற்கொண்டுள்ளார்.

எழுத்துப் பணியில் தீவிரம்

நிறையப் புத்தகங்களை வாசித்தால்தான் புதிய கதைகளுக்கான சிந்தனைகள் உருவாகும் என்பதால் நிறைய படிக்கிறேன். எழுத்தாளர்களின் அறிவுரைகளையும் பின்பற்றி வருகிறேன்.

யூமா வாசுகி, எஸ். ராமகிருஷ்ணன், லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செக்காவ் ஆகியோரின் எழுத்துகள் எனக்குப் பிடித்தமானவை. அம்மை, ஜெயஸ்ரீ, சிற்பி, நாஞ்சில்நாடன், முகில், கவிஞர் மஞ்சுளா தேவி உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் எனது கதைகளை வாசித்துப் பாராட்டியுள்ளனர். எங்கள் குடும்ப நண்பர் பிரபாகரனும் மிகவும் பாராட்டுவார்.

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் 'டோட்டோ-சான்'. அந்த நூலில் இடம்பெறும் பள்ளிச் சூழல், ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் விதம், மாணவர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நான் படித்த பள்ளிச் சூழலுடன் அந்தப் புத்தகத்தில் வரும் அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

எதிர்கால இலக்கியக் கனவுகளும் பெரியவை. 'ஓநாய் குலச் சின்னம்' போன்ற தரமான நாவலை எழுத வேண்டும். முகலாயப் பேரரசின் வரலாற்றுப் பின்னணியில் ஒரு நாவலை உருவாக்க வேண்டும்'' என்றார் ஸ்ரீயக்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.