மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!-20

அன்பு இளம் உள்ளங்களே! வனங்கள், பறவை, விலங்கினங்களை காக்கின்றன. பறவைகளும், விலங்குகளும் வனங்களைப் பாதுகாத்துக் காக்கின்றன. அவை யாவும் மனித இனத்தையே மழையாலும், தாவரங்களாலும் காக்கின்றன. ஆக மனிதகுலம் வாழ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:30 pm

கொ.மா.கோதண்டம்

அன்பு இளம் உள்ளங்களே!

வனங்கள், பறவை, விலங்கினங்களை காக்கின்றன. பறவைகளும், விலங்குகளும் வனங்களைப் பாதுகாத்துக் காக்கின்றன. அவை யாவும் மனித இனத்தையே மழையாலும், தாவரங்களாலும் காக்கின்றன. ஆக மனிதகுலம் வாழ, தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவை வாழும் வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நமது அரசு இதற்காக வனங்களில் புலிகள் காப்பகம், பறவைகள் காப்பகம். யானைகள் காப்பகம் மற்றும் பொதுவான வனவிலங்குகள் காப்பகம் என்று ஏற்படுத்தி அவற்றை பாதுகாத்து வருகிறது.

எங்கள் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நிறமலை அணில் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம் ஆகியவை முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளன. அதற்குத் தென் பகுதி சிவகிரி, தேவதானம் மலைகளுக்கு மேற்குப் பகுதி கேரள வனப் பகுதியில் யானைகள் காப்பகம். கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம், தட்டைக்காடு பறவைகள் சரணாலயம் (கேரளா), ரெங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் (கர்நாடகா), கோடியக்கரை பறவைகள் சரணாலயம் (வேதாரண்யம்), ஆனைமலை இந்திராகாந்தி வனவிலங்கு காப்பகம் (பொள்ளாச்சி பரப்பிக்குளம் செல்லும் பாதையில் உள்ளது), முதுமலை வனவிலங்கு சரணாலயம் (ஊட்டி-மைசூர் சாலை), பரம்பிக்குளம் வனலிலங்கு சரணாலயம் (உடுமலைப்பேட்டை-மூணாறு சாலை). இவை போக தமிழ்நாட்டில் சில ஏரி குளங்கள் பகுதியிலும் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

பொதுவாக, சரணாலயங்களில் எல்லா விலங்குகளும் இருக்கும். புலிகள் அதிகம் இருந்தால் புலிகள் காப்பகம் இருக்கும். இதுபோலத்தான் யானைகள் காப்பகங்களும்.

வட மாநிலங்களிலும் அதிகமாக சரணாலயங்கள் உள்ளன. இந்திய நாட்டில் வன விலங்குகளும் பறவைகளும் அதிகமே! உலகில் மொத்தம் 8,600 பறவை இனங்கள் உள்ளனவாம். இந்திய நாட்டில் 1,200 வகைப் பறவை இனங்கள் உள்ளனவாம். 600 வகை பாலூட்டும் விலங்கு வகைகளில் 350 இனங்கள் இந்தியாவில் உள்ளனவாம்.

வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அசோக மன்னர் காலத்தில் உருவானது. வன விலங்குகளை வேட்டையாடினால் தண்டனை என்ற சட்டத்தை முதலில் இயற்றியவர் அசோக மன்னர்தான். இந்திய விடுதலைக்குப் பின்னர்தான் இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

நமது நாட்டில் 400-க்கும் மேல் சரணாலயங்கள், 90 பூங்காக்கள் உள்ளன. வேங்கைப் புலிகள் பாதுகாப்புக்காக 26 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

1940-இல் நம் நாட்டில் 40 ஆயிரம் வேங்கைப் புலிகள் இருந்தன. 1970-இல் அவை 2,000 ஆகக் குறைந்துவிட்டன (20 மடங்கு குறைந்தது). இப்போது மூவாயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது.

உலகில் தற்போது 50 ஆயிரம் யானைகள் உள்ளனவாம். இதில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளனவாம். நமது நாட்டின் பண்டைய அரசர்கள் யானைகளைப் படையாகவும் வைத்து போரிட்டார்கள்.

யானை உருவத்தால் பெரியதும், கம்பீரமானதும், அழகானதுமான விலங்கு. நினைவாற்றல் அதிகமுள்ள உயிரினம். இன்றும்கூட, பாதையில் யானையைக் கண்டால் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வியந்து பார்த்துக்கொண்டேதானே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் உயிரினமல்லவா யானை!

அழகிய மான்கள் உலவும் இடங்கள் வனங்கள். கண்கள், காதுகள், முகம், பார்க்க மிக அழகானவைதான் மான்கள். மான்கள் கூட்டம் அதிகரித்துவிட்டால் வனத்தைத் தின்றே அழித்துவிடும். அதனைக் கட்டுப்படுத்தவே இயற்கை, புலிகளை வனத்தில் வாழவிட்டுள்ளது.

புல், பூண்டு, புதர், முள்செடிகள், செடி, கொடி மரங்கள் இலைகளால், காய், கனி, கிழங்குகளால் மரக்கட்டைகளால் மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

அதுபோலப் பறவைகள் வனங்களைப் பெருக்க உதவுகின்றன. தானியங்களைச் சேதப்படுத்தும் புழு, பூச்சி, எலி முதலியவைகளை இந்தப் பறவைகள் கட்டுப்படுத்தி மனிதர் வாழ உதவுகின்றன.

மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழலாம்; தாவரங்கள் வாழலாம்; விலங்குகளும் வாழலாம்!

ஆனால் தாவரங்கள் இல்லாமல், பறவைகள் இல்லாமல், விலங்குகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது!

ஆகவே வனங்களை, வன உயிரினங்களை அன்பாக, சகோதர உணர்வோடு பாதுகாக்க வேண்டும். இதைத்தான் மகாகவி பாரதியார்,

""காக்கைக் குருவி எங்கள் ஜாதி-நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்''

என்றும்

""வண்டி இழுக்கும் நல்ல குதிரை-நெல்

வயலில் உழுவதும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு-இதை

ஆதரிக்க வேண்டுமடி பாப்பா''

என்றும் பாடி மகிழ்ந்தார்.

வனங்களில் உள்ள மூலிகைகள் எல்லா உயிரினங்களின் நோய்களையும் தீர்க்கும் அபூர்வ மருத்துவ குணம் உடையவை. ஆகவே தாவரங்களைக் காப்பதும் நமது கடமை என்று உணர்வோம்.

வனங்களுக்கு சுற்றுலா செல்லும்போது பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு செல்லக்கூடாது. அந்தப் பைகளில் மசாலா கலந்த உணவுப் பொருள்களைக் கொண்டுபோய் நாம் சாப்பிட்டதும் பைகளை அங்கே எறிந்து விடுகிறோம்.

அந்த உணவுப் பொருள்கள் வாசனைக்கு விலங்குகள் அவற்றை சாப்பிட்டுவிடுகின்றன. அந்தப் பைகள் விலங்குகளின் குடலில் தங்கி மரணத்தை விளைவித்துவிடுகின்றன.

குளிப்பதற்கு கண்ணாடி பாட்டில்களில் எண்ணெய் கொண்டு செல்கிறவர்கள் பாட்டில்களை தூர எறிந்துவிடுகிறார்கள். அவை உடைந்து மற்றவர்கள் கால்களை அறுத்துக் காயங்களை உண்டாக்கிவிடுகின்றன.

வனங்களில் உள்ள சருகுகளில் தீ வைப்பதும் ஆபத்தானது. வனக்காடுகள் நமக்குச் சொந்தமானவை அல்ல. காட்டு உயிரினங்களுக்கே உரிமையானவை. நாம் அங்கே விருந்தாளிகளே!

தூய பளபளக்கும் வெள்ளை உடை விலங்குகளுக்கு பிடிக்காது! வெள்ளை நிறத்தைக் கண்டால் அவற்றுக்குக் கோபம் வரும். பச்சை, கருப்பு, காக்கி, மஞ்சள் உடைகள் ஏற்றவை.

பறவைக் கூடுகளைக் கண்டு அருகில் சென்றால் அவை கலவரமடையும்; அவற்றின் முட்டைகள் சேதமாகும். விலங்குகள் அருகிலும் செல்லக்கூடாது. கேமரா கொண்டு சென்று படமெடுக்கலாம். நமது உதவிக்கு வரும் வன அலுவலரோ, காட்டுவாசி நண்பர்களோ கூறுவதையும், நீங்கள் பார்ப்பதையும் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். அவை பின்னர் உங்களுக்கு உதவக்கூடும்.

இயற்கையின் அதிசயங்கள், வனச்சூழலின் அற்புதங்கள், அருவிகள், ஆறுகள் தரும் அழகின் சிரிப்பொலிகள், மலர்கள் இலைகளின் வடிவங்கள், வண்ணங்கள் ஆகியவை அழகின் ரகசியங்கள்.

அவற்றைப் பார்த்து அனுபவித்து மகிழ்ந்து வரலாம். மன நிம்மதி அடையலாம். உடல் பலம் பெறலாம். மூலிகைகளை உரசி வரும் காற்று நம்மைத் தழுவுகையில் நம் நோய்கள் கூட விலகிவிடும்.

செயற்கைக் கட்டடங்கள், வெறும் அழகுகளைக் காண பத்து ஊர்களுக்குச் செல்வதைவிட ஒரு வனத்திற்குச் சென்று வந்தாலே போதும்! அதுவே பேரின்பம்!

-முற்றும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.