திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

எனது இரு நண்பர்கள்

நான் சிறுமியாக இருந்தபோது, என் நண்பர்கள் அனைவரும் நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது விளையாடுவதற்கு எனக்கு எந்த நண்பர்களும் இல்லை. ஒருநாள் என் தந்தை ஆச்சரியப்படும் செய்தி ஒன்றைச் சொன்னார். "உனக்கா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:40 am

நான் சிறுமியாக இருந்தபோது, என் நண்பர்கள் அனைவரும் நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது விளையாடுவதற்கு எனக்கு எந்த நண்பர்களும் இல்லை. ஒருநாள் என் தந்தை ஆச்சரியப்படும் செய்தி ஒன்றைச் சொன்னார். "உனக்காக ஒரு சிறந்த நண்பனைக் கொண்டு வந்துள்ளேன்' என்பதுதான் அந்தச் செய்தி. அந்த நண்பன் வேறு யாரும் இல்லை. இதோ இந்த நாய்க்குட்டிதான். அந்த நாய்க்குட்டிக்கு "ரெட்' என்று பெயர் வைத்தேன்.

எனக்கு ரெட்டை மிகவும் பிடித்திருந்தது. நான் அவனை அன்போடு தழுவி அணைத்துக் கொள்வேன். நான் அவனிடம் "எனக்கு ஒரு நண்பன் வேண்டும் அந்த நண்பனாக நீயே இரு' என்றேன். இதற்கு ரெட் தலையாட்டியது. "நீ இங்கே இருக்கப் போவதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் உனக்காக கம்பளி இழையிலான துணியை வைத்துள்ளேன்' என்றேன்.

விரைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். இருவரும் தினசரி நீண்டதூரம் நடைப்பயிற்சி செய்வோம். மலைகளின் மீது ஏறினோம். ஏரிக்குச் சென்றோம். இப்படி நாங்கள் சென்று கொண்டிருக்கும் போது, ரெட்டிற்கு தன் கால்களால் பந்தைப் பிடிப்பது மிகவும் பிடித்திருந்தது.

ஒருநாள் நாங்கள் ஏரிக்குச் சென்றோம். அங்கு ஒரு சிறிய பூனையைப் பார்த்தோம். ரெட் அந்தப் பூனையைத் துரத்திச் சென்றது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடும் கோபத்தோடும் பார்த்துக் கொண்டனர். உடனே இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தனர். சிறிது நேரம் கழித்து, அந்தப் பூனை பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி உச்சிக்குச் சென்றுவிட்டது.

பூனை மரத்தின் மீது ஏறியவுடன் நானும் ரெட்டும் எங்கள் வீட்டிற்குச் சென்றோம். ஏனெனில் அப்போது பனி அதிகமாகப் பொழிந்து கொண்டிருந்தது. என் நினைவுகள் எல்லாம் அந்தப் பூனையின் மீதே இருந்தது. எனக்கும் ரெட்டிற்கும் இருக்கும் வீடு போல அந்தப் பூனைக்கு நல்ல வீடு கிடையாது. நான் ரெட்டிடம் "அந்தப் பூனையிடம் நீ சண்டைக்குப் போனது தவறு' என்றேன். அவன் அதற்கு ஒன்றும் பேசாமல் தலை குனிந்தான்.

இதன்பிறகு நானும் அவனும் என் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தோம். இருவரும் சன்னல் வழியே பொழியும் பனியை பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னும் நான் அந்தப் பூனையை நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய அப்பா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார். அந்தச் சமயத்தில் ரெட் வெளியில் சென்றான். அவன் ரொம்ப நேரமாகியும் திரும்பிவரவில்லை. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நான் தூங்கச் சென்றேன்.

நான் எழுந்து என் அம்மாவிடம் "ரெட் எங்கே?' என்று கேட்டபோது, "அவன் நேற்று இரவு வீட்டிற்கு வரவில்லை' என்றார். "அவன் ஏதாவது ஆபத்தில் சிக்கி இருப்பானா?' என்று மீண்டும் அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா பதில் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு நான் ரெட்டைத் தேடிச் சென்றேன்.

நான் "ரெட்! ரெட்!' என்று சத்தமாகக் கூப்பிட்டேன். "எங்கு இருக்கிறாய் ரெட்... இங்கே வா..' என்றேன். ஆனால் அவன் வரவில்லை. அவன் எங்கு இருப்பான் என்றும் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

நான் பக்கத்திலிருந்த பெரிய மலையின் மீது ஏறி உச்சிக்குச் சென்றேன். அங்கிருந்து என் வீட்டைக் காணமுடிந்தது. திரும்பவும் நான் "ரெட்...! ரெட்...! இங்கே வா..' என்று சப்தமிட்டேன். ஆனாலும் ரெட்டைப் பார்க்க முடியவில்லை.

நான் மலையிலிருந்து இறங்கி ஏரிக்குச் சென்றேன். ஏரியின் பக்கத்தில் எங்களது படகு கவிழ்ந்து இருப்பதைப் பார்த்தேன். எனது சக்தி முழுவதையும் திரட்டிப் படகை மேலாக உயர்த்திப் பார்த்தேன். நான் யாரைப் பார்த்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அங்கே என் நண்பன் ரெட்டைக் கண்டேன். இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? ரெட்டிற்கு அருகில் அந்தப் பூனையும் இருந்தது.

நான் "உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் ரெட்..' என்றேன். மேலும், "நீ அந்தப் பூனையையும் கண்டுபிடித்துவிட்டாய், நீ நல்ல நாய்க்குட்டி. நீதான் என் நண்பன் ரெட்.. ' என்று சத்தமாகப் பேசினேன். இதற்குப் பிறகு அந்தப் பூனையும் ரெட்டும் நானும் எங்கள் வீட்டிற்குச் சென்றோம்.

என் அம்மாவும் அப்பாவும் அந்தப் பூனையை என்னுடனேயே வைத்துக் கொள்ள அனுமதி தந்தார்கள்.  நான் என் பூனைக்கு "ஸ்னோபால்' என்று பெயர் வைத்தேன். இதற்குப் பிறகு நானும் ரெட்டும் ஸ்னோபாலும் எப்பொழுதும் பிரியாத நண்பர்களாக இருந்தோம்.

ய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.