மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!: 15

நானும், இரண்டு மாணவர்களும், மாமா குருசாமி ராஜாவும் சேத்தூருக்கு மேலிருந்த மலைப் பகுதியில் உள்ள ஏலத்தோட்டத்தில் தங்கியிருந்தோம். அங்கிருந்து உச்சிமலை, வழியாக ராஜபாளையம் மலைப்பகுதிக்கு வந்து, இறங்கி அய்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:54 pm

கொ.மா.கோதண்டம்

நானும், இரண்டு மாணவர்களும், மாமா குருசாமி ராஜாவும் சேத்தூருக்கு மேலிருந்த மலைப் பகுதியில் உள்ள ஏலத்தோட்டத்தில் தங்கியிருந்தோம்.

அங்கிருந்து உச்சிமலை, வழியாக ராஜபாளையம் மலைப்பகுதிக்கு வந்து, இறங்கி அய்யனார் கோவில் பகுதிக்கு வர வேண்டும். அப்படியே ஊருக்குப் போகத்திட்டம்! அழைத்துப்போக நீலனும் வந்துவிட்டான்.

பாதையில்லாத கரடு முரடான பாறைகளின் வழியே நடக்க வேண்டும். புறப்பட்டோம்.

ஓரிடத்தில் நீலன் தாகத்திற்காக, செந்தண்டுக்கொடிகளை பறித்தான். மெல்லிய கொடிதான்... விரல் நீளத்திற்கு ஒரு கணுவாக இருந்தது, ஒடித்து, ஒடித்து வாயில் வைத்து உறிஞ்சினால் சுவையான தண்ணீர்.

""எங்க சனங்க உள்காட்டுக்கு வந்திட்டா, இதைத்தான் குடிக்க எடுத்துக்குவாங்க''

""ரொம்ப நல்லா, இளநீர் மாதிரியே இருக்கே'' மாணவர்கள் பாராட்டினர்.

ஓரிடத்திலிருந்து பார்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம், வைத்தியநாதர் கோபுரங்கள் தெரிந்தன.

ராஜபாளையத்தின் காந்தி கலை மன்றம், கல்லூரிக் கட்டடங்கள் மிகச்சிறியதாகத் தெரிந்தன.

""சாமி இங்க இருந்து ரெண்டு கல்லு தூரம், ரெண்டடி அகலப்பாதைதான்... ரெண்டு பக்கமும் பயங்கரமான பள்ளச்சரிவு... கவனமா நடக்கனும்! வழுக்கினா உருண்டு கீழே போயிடுவோம். உடலக் கண்டு பிடிக்கமுடியாது!'' என்றான் நீலன்.

பார்க்கவே பயமாக இருந்தது. நீலனும் பயமுறுத்திவிட்டான்.

மெல்லப் பத்திரமாக நடந்து சென்றோம். சரிவுகளில் அதிகமாக மரங்களும் இல்லை வெறும் முள்

புதர்கள்தான்.

""சாமி தூரத்துல ஒரு கரடி வருது. இந்த ரெண்டடி பாதையிலதான் அதுவும் வரணும். நாம மெல்ல கொஞ்சம் இறங்கி அந்தப் பக்கமா, புதர்ல ஒளிஞ்சிக்கிடலாம். கரடி போன பிறகு வரலாம்.. இது ஒரு வித்தியாசமான கரடி வகை. இங்க மட்டும்தான் இருக்கு. கவுத்தல கரடி (கவிழ்த்தலை கரடி) அல்லது சடைக்கரடின்னு சொல்லுவோம். பெரிய உருவம்தான், தலையைக் கவிழ்த்துக்கிட்டுதான் வரும். நெற்றி மயிர் முகத்துல விழுந்து பார்வையை மறைக்கும். அதனால எதிர்ல உள்ளது அதுக்குத் தெரியாது. பக்கவாட்டுலதான் பார்க்கும். முரட்டு மிருகம்!''

""ஏம்ப்பா, பையங்க இருக்காங்க. ரொம்ப பயமுறுத்துறயே'' என்றார் மாமா.

கரடி அருகே வந்துவிட்டது. நாங்க புதர் பக்கம் ஒளிந்திருந்தோம். பையன்கள் நடுங்கினார்கள்.

மனிதவாடையோ, எதுவோ? அதற்குச் சந்தேகம் ஏற்பட, திரும்பிப் பார்த்தது. ஒரு பையன் தும்மல் போட்டான். கரடி எங்கள் பக்கம் வர இறங்கியது. அப்போது கால் வழுக்கி கரடி எங்கள் அருகாமையிலேயே உருண்டது. மிக முரடுதான். தூரத்தில் புதர் தடுக்கி, எழுந்து அப்படியே போய்விட்டது கரடி.

எங்களுக்கு உயிர் வந்தது, உச்சிக்கு நடந்தோம்.

""அது உருளாம மட்டும் இருந்தா நம்மை அடிக்காம விட்டுருக்காது'' என்றான் நீலன்.

""பெரிய கரடியில்ல, இன்னும் பயமாத்தான் இருக்கு'' மாணவர்கள் கூறினார்கள்.

""தம்பிகளா, இது புதுவிதமான கரடி. இதைப் பார்த்தது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு சமயம் நீலன் எனக்கு செங்கரடிகளைக் காட்டினான்'' என்றேன்.

""செங்கரடியா? அப்படி எங்கேயும் இல்லையே'' மாமா கூறினார்.

""பெரிய மழை வரும்போது, செம்மண்ணுல புரண்ட கரடிக்குட்டிகள்... உடம்பெல்லாம் செம்மண் நிறம்.. நான் கூட இப்படி இருக்குமான்னு தடுமாறிட்டேன். அப்புறந்தான் தெரிந்தது அது மண்ணின் கலர் என்று.''

""மாப்ள, நான் ஒன்னு சொல்றேன். ஒரு சமயம் நம்மூர் மாரியம்மன் கோவிலில், பத்து நாள் திருவிழா. தினமும் சப்பரத்துக்கு முன்னால யானை வரும். வளர்ப்பு யானை! பகலெல்லாம் முன்னால உள்ள மரத்துலதான் கட்டி வச்சிருப்பாங்க. பக்கத்துல கண்மாய், அடுத்து வயலெங்கும் கரும்புத் தோட்டம்.

வயலப்பாத்த யானைக்கு வாயெல்லாம் ஊறியது. இரவு நேரமா, பாகன் அடுத்த மரத்தடியில தூங்கியிருக்கான். யானை எப்படியோ கட்டிய சங்கிலியை உருவிக்கிட்டு, கண்மாய் களிமண்ணைப் பிசைஞ்சி, கழுத்து மணியில் அழுத்தி வச்சிக்கிட்டு (மணி சத்தம் கேட்காமல் இருக்க) கரும்புக்காட்டுக்குப் போய், ஆசை தீர மேஞ்சிரிச்சு!

அப்புறம் காவலாளி பார்த்துட்டு, பாகனை எழுப்பி, எல்லோரும் போய் யானையைக் கூட்டி வந்தாங்க!''

மாமா கூறிய செய்தி புதுமையாக இருந்தது!

""யானைக்குக் கழுத்து மணி சத்தம் கேட்காம மண்ணெடுத்து பூசுற அளவுக்கு அறிவு இருக்குமா?'' ஒரு மாணவன் கேட்டான்.

""மனுசனைவிட அறிவாளி உயிரினங்கள் எத்தனையோ இருக்கு தம்பி'' என்றார் மாமா.

அப்போது ஏதோ ஒரு குருவி "ட்ரிக்கியா ட்ரிக்கியா' என்று சத்தமிட்டது.

""இப்ப சத்தம் கொடுத்ததில்லே இது மூக்கச்சான்குருவி சாமி.

இது டிர்க்கு, டிர்க்குன்னு சத்தம் குடுத்தா கொஞ்ச நேரத்துல பெரிய மழை பெய்யும்''

""என்னப்பா மழை பெய்யப் போவது குருவிக்கு எப்படித் தெரியும்? அப்ப வானிலை ஆராய்ச்சி நிலையங்கள்ள விஞ்ஞானிங்களுக்குப் பதிலா இந்தக் குருவிகளை வச்சிடலாமே'' இது ஒரு மாணவன்.

""தம்பிகளா, பூகம்பம் வருவதை முன்கூட்டியே நம்ம விஞ்ஞானிகளாலேயே இப்ப சொல்ல முடியலே. ஆனா தவளை, நாய் போல சில மிருகங்க அதை முன்கூட்டியே தெரிஞ்சி பெருசா சத்தம்போட்டு ரகளை பண்ணுதாம், தெரியுமா?'' என்றார் மாமா.

""நீலா நேத்து அய்யனார் கோவில் பக்கம் ஏதோ நடந்ததுன்னு சொல்லிக்கிட்டிருந்தியே என்னது?''

""சாமி பொம்பளப்புள்ளைங்க குளிக்க வந்திருக்காங்க. வேலியில ஆமணக்கு வெளஞ்சிருக்கு. அதன் காய்களைப் பறிச்சி என்னன்னே தெரியாம தின்னுட்டாங்க. நாலஞ்சி புள்ளைகளுக்கு வயித்தால போயிடிச்சி. டீச்சர்மார் எல்லாம் என்ன செய்யன்னு தெரியாம அழுதிருக்காங்க.

யாரோ என்கிட்ட வந்து சொன்னாங்க. நான் உடனே ஜாதிக்காய் பறிச்சி, அடிச்சி,

தூளாக்கி தண்ணியில போட்டுக் காய்ச்சி ஆளுக்கு ஒரு குவளை தந்தேன். கொஞ்ச நேரத்துல சரியாப்போச்சி... இல்லாட்டி மயங்கி விழுந்திருப்பாங்க... பிறகு டாக்டர்கிட்ட

ஓடியிருப்பாங்க.''

""நல்ல வேளப்பா வெளியூர் பெண் பிள்ளைங்களைக் காப்பாத்திட்ட!'' இறங்க வேண்டிய இடம் வந்தது.

ஒரு பாறையில் அமர்ந்து டிபன் சாப்பிட்டு, ஓடையில் தண்ணீர் குடித்து ஓய்வெடுத்தோம்.

""இந்த மூலிகை தாவரங்கள் இருக்கே... எல்லா நோய்களையும் போக்கும் சக்தி படைத்தவை. சங்க இலக்கியத்தில் மரங்களைத் தாயாகவும்,சகோதரியாகவும் சித்தரித்துள்ளார்கள். அய்யனார் கோவில் அருகே இரண்டு மரங்களை அம்மையாய் அப்பனாய் கடவுளாக வணங்குகிறார்கள்'' என்றேன் நான்.

உடனே மாமா ""அது மட்டுமா? யானை விநாயகர், மூஞ்சுரு அவருக்கு வாகனம். புலி-ஐயப்பன் வாகனம், காளை-சிவன் வாகனம், நாய்-கருப்பசாமி வாகனம், சிங்கம்-காளியின் வாகனம், மயில்-முருகன் வாகனம், குரங்கு ஆஞ்சநேயர் வம்சம், இப்படி எத்தனையோ... எல்லாக் கோவில்லேயும் ஸ்தல விருட்சம் என்று மரங்களை இறைவனுக்குச் சமமாக வணங்குகிறார்கள்!''

""ஆமா, ஆமா, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள் இவற்றை நாம் அலட்சியம் செய்யாமல் உதவ வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார்கள்.''

நான் கூறியதும் நீலன், ""சாமி அஞ்சரப் புளின்னு ஒரு மரம். அதன் பழம் எடுத்து, கொஞ்சம் சாம்பல் கலந்து தின்னுட்டா, ரெண்டு நாள் பசிக்காது. புளியந்துவரைன்னு ஒரு மரம் அதன் நிழல்ல நின்னா உடல் வீங்கிடும். தட்டுப்பவா செடி இலை நம் மேலே பட்டா உடனே காய்ச்சல் வந்துடும், யானை செந்தட்டி இலை பட்டாலும் உடல் அரிப்பெடுத்திடும்.''

""சரிதாம்பா! வனங்கல்ல தொன்னூறு சதவீதம் நல்லதும், பத்து சதவீதம் கெட்டதும் இருக்கு, ஆனா, பெரும்பாலும் மனிதர்களுக்கு உதவவே எல்லாவற்றையும் இயற்கை படைச்சிருக்கு. அதனால நாம் வன அன்னையை வணங்க வேண்டும்''என்று சொன்னதும் மற்றவர்கள் ""ஆமா.. ஆமா.. நிஜம்'' என்றார்கள்.

கீழே வந்துவிட்டோம்... அருவியில் குளித்துப் புறப்பட வேண்டும்!

-தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.