காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!-16
அடிவாரத்து அடர்வனம்! ஒற்றையாகவே சென்று கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் மலையேறினால் பிறகு வெட்டவெளிதான். உச்சிக்குப் போனால்தான் அடர்வனம். அடிவார அடர்வனமே அச்சம் தரும் விதமாக இருந்தது! விலங்குகளுக்கு ஒ


அடிவாரத்து அடர்வனம்! ஒற்றையாகவே சென்று கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் மலையேறினால் பிறகு வெட்டவெளிதான். உச்சிக்குப் போனால்தான் அடர்வனம். அடிவார அடர்வனமே அச்சம் தரும் விதமாக இருந்தது!
விலங்குகளுக்கு ஒதுங்கி, பாறைகளில் அமர்ந்து, சாவகாசமாகவே போய்க் கொண்டிருந்தேன்.
ஓர் இடத்தில் மாமரம் ஒன்றில், குரங்குக் கூட்டம் பழம் பறித்துத் தின்று கொண்டிருந்தன.
கீழே கிடந்த பழம் ஒன்றை எடுத்துக் கடித்தேன். ஒரே புளிப்பு! துப்பிவிட்டேன்.
தூரத்தில் யானைக் கூட்டம் வந்து கொண்டிருந்தது.
ஒரு பாறையில் ஏறிப் படுத்துக்கொண்டு பார்த்தேன். யானைகள் மரத்தின் கீழே வந்ததும், குரங்குகள் பழங்களைப் பறித்துக் கீழே போட்டன.
யானைகள் அவற்றை எடுத்துச் சாப்பிட்டன. யானைக் குட்டிகள் தும்பிக்கையை தூக்கி வாயை "ஆ' வென்று திறந்து வைக்க, குரங்குகள் குறி பார்த்து யானைக் குட்டிகளின் வாயில் போட, அவை பழத்தைத் தின்னும் காட்சி விந்தையாக இருந்தது.
இந்தக் குரங்குகள் புலி வருவதை மான்களுக்கு எச்சரிக்கை செய்கின்றன. பாபநாசம் ஆற்றங்கரை கோவில் அருகே உள்ள மரங்களில் கூட்டமாக வாழ்கின்றன.
கோவிலுக்கு முன் மூடை மூடையாக பொறிகடலை விற்கின்றனர். பொறிகடலை வாங்கி கையில் விரித்து வைத்துக் கொண்டால், கூட்டமாக வந்து நம் கைகளில் உள்ளதை எடுத்து வாயில் ஒதுக்கி வைக்கின்றது. முரட்டுக் குரங்கு அவற்றை விரட்டிவிட்டு, தான் மட்டும் இரண்டு கன்னங்களையும் மாம்பழம்போல உப்ப வைக்கிறது. பொறிகடலையை ஆற்றில் போட்டால் மீன்கள் கூட்டமாக வந்து தின்கின்றன.
குற்றாலத்தில் சிறுவர் கைகளில் உள்ள தின்பண்டங்களைக் குரங்குகள் பறித்துச் செல்கின்றன. கடைகளிலும் உள்ளதை எடுத்துச் சென்றுவிடும். பாறையில் அமர்ந்து மரங்களைப் பார்த்தேன். குரங்குகளின் சேட்டைகளைக் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.
ஆஸ்த்திரிய மொழியில் பெலிக்ஸ் ஜில்தேன் எழுதிய "பேம்பி' என்ற நாவல் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று. அதுபோலக் குரங்குகளைப்பற்றி ஒரு நாவல் எழுத எனக்கு ஆசை!
ஆஞ்சநேயர் துணைபுரிவாராக!
யானைகள் சென்ற உடன் எழுந்து நடந்தேன். பாதைகள் இல்லாத கருங்காடாக இருந்த பகுதி அது. எப்படிப்போவது எனத் தெரியாமல் உட்கார்ந்துவிட்டேன். ஏதோ பாட்டுச் சத்தம் கேட்டது:
""கருத்த சடை விரிச்சி
காடுமலை சுத்தி வந்து
கருவுக்கும் படியளக்கும்
காட்டம்மா மகராசி
சிறுத்த என் வயித்துக்கும்
தீனி கெடக்கலியே
வருத்தத்தைப் போக்கிட
வந்தெனக்கு உதவிடம்மா''
எழுந்து, சத்தம் வந்த பக்கம் சென்றேன். மரத்தடியில் இருந்த கருத்த கல் சாமியை ஒரு காட்டுவாசி வணங்கிப் பாடிக்கொண்டிருந்தான்.
அருகில் சென்று ""என்னப்பா...''என்றேன்.
""சாப்பிட்டு மூணு நாளாச்சி... காய்,கனி,கிழங்கு எதுவும் கிடைக்கல சாமி! பசி உசுரு போகுது சாமி''
நான் இருபது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். ""சாமி காட்டுக்குள்ளே இது எதுக்கு ஆகும்? இங்க என்ன காபிக்கடையா இருக்கு? வேண்டாம் சாமி'' என்றான்.
பணத்துக்கும் பயன்பாடு, மதிப்பில்லாத இடங்களும் இருப்பதை உணர்ந்தேன்.
அவனை அழைத்துக் கொண்டு போனேன். நான் வரும்போது ஒரு பலா மரத்து உச்சியில் பழம் தொங்குவதைப் பார்த்தேன்.
நான் காட்டியதும் வேகமாக மரமேறி இடுப்பில் சொருகி இருந்த கத்தியால் பழத்தின் காம்பை வெட்டி, அப்படியே கீழே கொண்டு வந்து, அறுத்துச் சுளை எடுத்துச் சாப்பிட்டான். நானும் சில சுளைகளைத் தின்றேன். நல்ல ருசிதான்!
""எங்கண்ணுக்கு தட்டுப்படலயே சாமி'' என்றவன், மீதிப் பழத்தைதி துண்டில் கட்டி தலையில் தூக்கிக் கொண்டான்.
""யப்பா... இந்த மரம் எவ்வளவு உயரம் இருக்கும்?''என்றேன்.
""நீங்க இந்த வெயில்ல வந்து நில்லுங்க''என்றுபடியே பழத்தை இறக்கினான். நின்ற என்னை விரலால் அளந்தான். என் நிழலையும் அளந்தான்.
""சாமி உங்க உயரம் 5 1/2 அடி, நிழல் 11 அடி. இந்த மர நிழல் 80 அடி. அப்ப மரம் 40 அடி உயரம் சாமி'' என்றான்.
நான் ஏதோ விளையாட்டாக உயரம் கேட்க, அவன் பெரிய தத்துவத்தையே உணர்த்திய விதம் வியக்க வைத்தது.
""சாமி அந்தப்பக்கம் போக வேண்டாம். இப்படியே இறங்கிடுவோம்.''
கீழே தோப்பு வந்ததும், ""இந்தப் பலாப்பழத்தை நீங்க கொண்டு போங்க சாமி''என்றான் அவன்.
""பழத்தை நீயே வச்சிக்கோப்பா எனக்கு வேண்டாம்'' என்றேன்.
தூரத்தில் கூட்டமாகத் தெரிந்தது.
""என்ன அங்கே'' என்றேன்.
""சாமி அங்க ஒரு சின்னக்கோவில் இருக்கு, பூஜை நடக்கும்போல''என்றான்.
""சரி வா பாத்துட்டு வரலாம்'' என்றேன்.
பழத்தை பாறைக்கிடையில் ஒளித்து வைத்துவிட்டு வந்தான். அருகே உள்ள
கிராமத்துக்காரர்கள் அங்கே இருந்தனர். பூஜை ஏற்பாடுகளும் சமையல் வேலையும் நடந்து கொண்டிருந்தன.
ஒரு பெண் குழந்தை காது வலியால் அழுதுகொண்டிருந்தது. மூலிகைச்சாறெல்லாம் போட்டுப்பார்த்தார்களாம்... வலி நிற்கவில்லை. ஊருக்கு அழைத்துப்போய் டாக்டரிடம் காட்ட ஏற்பாடு நடந்தது.
""அப்பா நீ என்னன்னு ஒருமுறை பாரேன்'' என்றேன்.
""இவன் என்ன பார்க்கப்போறான்'' என்றார் ஊர்ப் பெரியவர்.
""கொஞ்சம் இருங்க பார்க்கட்டும்''என்றேன். அவன் குழந்தையின் காதைப் பார்த்தான். ""பேட்டரி லைட் வேண்டும்''என்றான்.
கிடைத்ததும் அடித்துப் பார்த்தான். குழந்தையைப் படுக்க வைத்தான். கத்தியால் தன் காலில் கொஞ்சம் சதையை அறுத்தெடுத்து, கைக்குட்டை கேட்டான், கொடுத்தேன். பாதி கிழித்து அதில் சதையை வைத்துக் காதில் கட்டிவிட்டு மீதித்துணியால் தன் காலில் அறுத்த இடத்தில் ஏதோ இலையை வைத்துக் கட்டினான். எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து காதில் கட்டிய துணியை எடுத்தான். துணியில் ஏதோ பூச்சி இருந்தது, அதை எடுத்து எறிந்தான்.
""என்னப்பா'' என்றேன்.
""சாமி.. மாட்டுல ஒட்டியிருக்கும் உன்னிப்பூச்சி கீழே இருந்திருக்கு. குழந்தை படுத்து
விளையாடும்போது காதுக்குள்ள போயிடிச்சி. அது மாமிச வாடை இருந்தாத்தான் வெளியே வரும். அதனால்தான் சதையை அறுத்துக் காதுல வச்சேன். மாமிச வாடைக்கு அது வெளியே வந்துருச்சி.''
குழந்தையின் தந்தை சில நூறு ரூபாய் தாள்களை அவனிடம் தந்தார்.
பூஜை முடிந்ததும் எங்களையும் சாப்பிட வைத்தனர். அவர் தன் காரில் என்னை ஏற்றிக் கொண்டு பஸ் நிலையம் வரை வந்து இறக்கி விட்டார்.
-தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...