மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்டுக்குள்ளே கொண்டாட்டம்!-11

ராஜபாளையம் சஞ்சீவி மலை. சிறிது காலம் முன்புவரை நகரின் கிழக்கு எல்லையாக இருந்தது. இப்போது நகரின் மையத்துக்கு வந்துவிட்டது. தென்பகுதி மலையின் மேல்பகுதி இரண்டாக உள்ளது. கிழக்குப்பகுதியின் உச்சியில் குமரன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:27 am

கொ.மா.கோதண்டம்

ராஜபாளையம் சஞ்சீவி மலை. சிறிது காலம் முன்புவரை நகரின் கிழக்கு எல்லையாக இருந்தது. இப்போது நகரின் மையத்துக்கு வந்துவிட்டது. தென்பகுதி மலையின் மேல்பகுதி இரண்டாக உள்ளது. கிழக்குப்பகுதியின் உச்சியில் குமரன் கோவில் உள்ளது. அருகில் கேணி, துறவியர் மடம், கிருஷ்ணன் கோவில் இப்படியாக உள்ளன.

 மேல்பகுதி உச்சியில் ராமர் கல் என்ற பெரும் பாறை, பார்த்தாலே பயம் வரும் மிகப்பெரிய பாறை! அதில் பாதிப்பாறை தரையை ஒட்டியும் மீதிப்பாதி பாறை சுமார் ஒரு அடி தூக்கியும் இருக்கிறது. அதில் படுத்துத், தவழ்ந்து சென்று அடுத்த பக்கம் வரலாம். (அப்படிப் போகும்போது பயத்தில் பாதி உயிர் நம்மிடம் இருக்காது!) ஊரே தெரியும்! மேலே பெரும் தேனடைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

 ஆஞ்சநேயர் மலையை இலங்கைக்குத் தூக்கிச் செல்கையில் அவர் வால் தட்டி பெயர்ந்து விழுந்த மலை என்று வாய்மொழிக் கதை ஒன்று வழங்கி வருகிறது.

 ஓர் இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. அங்கிருந்து நீண்ட தூரம்வரை அவர் வால்பட்ட அடையாளம் பாறையில் தெரிகிறது. ராமர், லட்சுமணன், சீதை இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது, இந்த மலையில் தங்கினார்களாம். வெற்றிலை பாக்கு போட்டு மீதிச் சுண்ணாம்பை பாறையில் தடவினார்களாம். பாறையின் ஒரு பகுதி வெள்ளையாகத் தெரிகிறது.

 பெரிய கார்த்திகை தினத்தன்று கூட்டம் கூட்டமாகப் பலர் கிரிவலம் செய்வார்கள். மலைக்குமேல் பெருங்கூட்டம் போய் வரும். அடிவாரத்தில் ஒரு மைல் தூரத்துக்குப் புதிதாக மிட்டாய் கடைகள், விளையாட்டுப் பொருள்கள் கடைகள் முளைத்திருக்கும்.

 உச்சியில் விளக்கேற்றுவார்கள். ஊரெல்லாம் தெரியும்! இப்போதெல்லாம் அதுபோல கூட்டம் இல்லை.

 பச்சைப் பசேல் என்று வனம்போல மரங்களாக இருந்தது. எல்லாம் சுற்றிலுமுள்ள வீடுகளில் கட்டைகளாக, விறகாகப் புகுந்து கொண்டன.

 வடக்கில், மேற்குப்பகுதியில் கழுதைக் கடவு என்ற இடத்தில் மழைக்காலம் முழுவதும் அருவி விழும். கூட்டமாகக் குளிக்கச் செல்வார்கள். பெண்கள், அழுக்குத்துணி மூட்டைகளுடன் துவைக்கச் செல்வார்கள். ஒரு சமயம் மலையில் கழுதைப்புலி கூட இருந்ததாம். இப்போது நரி, முயல் மட்டுமே உள்ளன.

 ஒரு காலத்தில் ஊரில் மழை இல்லை என்றால் ஊர்மக்கள் மேளதாளத்துடன் மலையேறி உச்சியில் ஒரு பெரிய கல் வைத்து, பூஜை செய்வார்களாம். பின் அந்தக் கல்லை உச்சியிலிருந்து உருட்டிவிடுவார்களாம். கல் தரையைத் தொடுமுன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்!

 இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், ராஜபாளையம் நகரம் போராட்டத்தில் முன்னணியில் இருந்தது. பம்பாய், ஆந்திராவில் வார்தா, தமிழ்நாட்டில் ராஜபாளையம் ஆகியவற்றை "பயங்கரவாதிகளின் நகரங்கள்' என்று ஆங்கில அரசு அறிவித்தது.

 கொடிப்போர் நடந்த சமயம், நகரப் போராளிகள் குமாரசாமி ராஜா, அரங்கசாமி ராஜா, வசந்தன், காமாட்சி ராஜா சகோதரர்கள், ராமசாமித் தேவர், சுப்பிரமணிய மூப்பனார், இன்னும் சில போராளி இளைஞர்கள் எப்படியோ ராமர் கல்லில் ஏறி உச்சியில் மிகப் பெரிய கதர் கொடியை பறக்கவிட்டார்களாம்!

 அரசுப் படையினர் வந்து, பாறை ஏறி கொடியைக் கழற்ற முயன்றனர். அவர்களால்

 பாறையில் ஏற முடியவில்லை. அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி இதுவரை ராமர் கல்லில் யாராலும் ஏறமுடியவில்லை!

 படை வீரர்கள் நூறு பேர், பாறையைச் சுற்றி நின்று கொண்டு துப்பாக்கிகளால்

 சுட்டார்களாம். கொடித்துணியில் சிலச்சில துவாரங்கள் விழுந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

 நீண்ட காலம் வரை நகர இளைஞர்களின் தேச விடுதலைப் போராட்டத்தை

 நினைவுப்படுத்திக் கொண்டே, ஊருக்கெல்லாம் தெரிய கொடி பறந்து கொண்டிருந்தது.

 போராளிகளின் தலைமறைவு காலத்திலும் சஞ்சீவி மலை பெரிதும் உதவியுள்ளது.

 எனக்கு ராமர் கல்லையும் வடக்கிலுள்ள அடுக்குப் பாறையையும் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வருவது அமெரிக்கா ரஸ்மோர் மலையில் ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், தாமஸ் ஜபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர் சிலைகள்போல இந்தப்

 பாறைகளில் காந்தியடிகள் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் தம்மையே இழந்த போராளிகளின் சிலைகளை செதுக்கலாமே.... இதை வளரும் இளைஞர்கள் பார்க்கையில் அவர்களுக்கு நாட்டுப்பற்று ஏற்படுத்துமே... என்று!

 ஒரு தடவை ஆசான் பன்மொழிப் புலவர் ஜகந்நாத ராஜா நான், துளசிராஜா மூவரும் கலந்து பேசினோம். எல்லோருமே ராமர் கல் வரை ஏறிவிட்டு இறங்கி விடுகிறார்கள். தென்பகுதியிலிருந்து வடகடைசி வரை இரண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும் மலையின்

 உச்சி வழியாகவே நடந்து செல்லலாமே என்று.

 அவ்வாறே ஒரு நாள் மூவரும் நடந்து சென்றோம். மேற்கு மலையின் அடர்வனங்களிலாவது மிருகங்கள் வந்து போவதால் ஒற்றையடிப் பாதைகள் இருக்கும்..! சஞ்சீவி மலை உச்சியில் பாதையே இல்லை.

 கரடு முரடான கற்கள், முள் செடிகள், ஓணான்கள், பாம்புகள், நரிகள், முயல்கள் இவைதான் தென்பட்டன. எப்படியோ சிரமப்பட்டு நடந்தோம்.

 உச்சியின் மையப் பகுதியில் ஒரு பெரிய மைதானம்போல இடமுள்ளது. வன அதிகாரிகள் தவிர யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பெரிய விளையாட்டு மைதானம் அல்லது மாபெரும் கலையரங்கம் கட்டலாம். மலைதான் மேலும் மொட்டையாகிவிடும்.

 வடக்கு முனை உச்சியில் பெரும் பள்ளம்; தாமரை மலர்களுடன் கூடிய ஒரு குளம். இறங்க ஏற இயலாது. மேலிருந்து பார்த்துவிட்டு, இறங்கினோம்.

 முன்பு மலை முழுவதும் ரிளாச்சிக் காய்செடிகள் இருக்கும். காய்கள், புளிப்பு கலந்த இனிப்புச் சுவையுடன் இருக்கும். இப்போது அதுவுமில்லை. அடிவார வீட்டில் கூட்டமாக இருந்தது.

 "என்ன?' என்று கேட்டு உள்ளே சென்றோம்.

 குடிசை வீடு... ஒருவர் கொட்டாவி விட்டுள்ளார்; வாயின் மேல்தாடையும் கீழ்தாடையும் மூட முடியாமல் அப்படியே நின்றுவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. வசதியும் இல்லை. யாரோ ஆட்டோ அழைக்கப் போனார்களாம். இதெல்லாம் இங்கே சரி செய்ய

 முடியாது. மதுரைக்குப் போக வேண்டியிருக்கும் என்று பலவாறாக பேச்சுகள். நான் அவரைப் பார்த்தேன் வாய் திறந்தபடி இருந்தார். யாளியை நினைவூட்டியது.

 நான் அவர் மனைவியிடம்,""உளுந்து கோதுமை ஏதாவது இருக்கிறதா?'' என்றேன்.

 ""இல்லை'' என்றாள்.

 ""அரிசி இருக்கா?''

 ""ரேசன் அரிசிதான் இருக்கு'' என்றாள்.

 ""இருபது முப்பது அரிசியை கரண்டியில் வறுத்து எடுத்து வா'' என்றேன்.

 அவள் கொண்டு வந்த சூடான அரிசியை அந்த ஆளின் திறந்த வாயில் போட்டேன்.

 ஆ...வென்று அவறி அரிசியை துப்பினார். வாய் சரியாகிவிட்டது.

 ""தேன் நக்கவிடும் புண் ஆறும்'' என்று கூறிவிட்டு ஆட்டோவில் பஸ் ஸ்டாண்டுக்கு

 புறப்பட்டோம்.

 -தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.