மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!
ரஷ்யாவில் பிறந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் தாஸ்தாயவ்ஸ்கி. மனம் சம்பந்தப்பட்ட நாவல்களை இதுவரை யாரும் எழுதாத புதிய கோணத்தில் எழுதிப் புகழ் பெற்றவர்.


தாஸ்தாயவ்ஸ்கி
ரஷ்யாவில் பிறந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் தாஸ்தாயவ்ஸ்கி. மனம் சம்பந்தப்பட்ட நாவல்களை இதுவரை யாரும் எழுதாத புதிய கோணத்தில் எழுதிப் புகழ் பெற்றவர். இவருடைய "க்ரைம் அண்ட் பனிஷ்மெண்ட்' (குற்றமும் தண்டனையும்) என்னும் நாவல் உலகின் சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
"தி கேம்ப்ளர்', "தி இடியட்' ஆகிய நாவல்களையும் சிறந்த பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
இவ்வளவு புகழ்பெற்ற படைப்புகளை எழுதிய
தாஸ்தாயவ்ஸ்கி, வாழ்நாள் முழுவதும் வலிப்பு நோயால் பெரிதும் அவதிப்பட்டவர் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆகவேண்டும்.
இவர் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 30-10-1821-இல் பிறந்தவர். பொறியியல் படித்தவர். ஆனால் அந்தத் துறையில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. படிக்கும்போதே எழுதுவதிலும் நூல்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, எழுத்தாளராக வேண்டும் என்ற உறுதி கொண்டார்.
மனிதனுடைய உள் மனதிற்கும் வெளி வாழ்க்கைக்கும் இடையில் காணப்படும் வேற்றுமைகளை, போராட்டங்களை மிகவும் கூர்ந்த பார்வையுடன் நுட்பமாக விவரிப்பதிலும் படிப்பவர்களின் மனதைத் தொடும் வண்ணம் எழுதுவதிலும் நிகரற்றவர். ஆழ்மனத்தில் தோன்றும் எண்ணங்கள் அவரது படைப்புகளில் வெளிப்படும்.
இவர் தன்னுடைய "க்ரைம் அண்ட் பனிஷ்மெண்ட்' நாவலில் தான் வலிப்பு நோயால் படும் துன்பங்களை ஒரு கதாபாத்திரத்தின் வழியாகச் சித்திரித்திருக்கிறார்.
இதைப் போல அவர் தனது வலிப்பு நோயால் பட்ட துன்பங்கள், தனக்கு ஏற்பட்ட உடல்,மனமாற்றங்கள், அப்போது தான் கண்ட காட்சிகள், மனதில் தோன்றிய கனவுகள், உறவினர்கள், நண்பர்கள் அவரிடம் நடந்து கொண்ட விதங்கள் போன்ற பல நிகழ்வுகள் இவரது நாவல்களில் விரிவாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
இவருடைய படைப்புகள் இவருக்குப் புகழைத் தேடித் தந்தனவே தவிர, பணத்தைத் தேடித் தரவில்லை. இவரது வாழ்க்கை அப்படி ஒன்றும் செழுமையாக இல்லை. சூதாட்டத்தில் விருப்பம் உள்ளவர். சிறையிலும் இருந்தவர். கடன் தொல்லைகளும் அதிகம்.
ஆனால், அந்தக் காலகட்டங்களிலும் தொடர்ந்து எழுதி, மிகச் சிறந்த படைப்புகளைத் தந்து கொண்டிருந்தார். எழுத்துத் துறையை இவர் தேர்ந்தெடுக்காமல் தான் படித்த பொறியியல் துறையைத் தனது வாழ்க்கைக்குப் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ செல்வத்துடன் வாழ்ந்திருப்பார். ஆனால், இலக்கிய உலகம் ஒரு சிறந்த படைப்பாளியை இழந்திருக்கும்.
குறிப்பாக "க்ரைம் அண்ட் பனிஷ்மெண்ட்' என்ற அவருடைய நாவலின் நாயகனான ஏஸ்கோல்நிகாவ் என்னும் பாத்திரத்தின் மூலம் வலிப்பு நோயால் ஏற்படும் பல அனுபவங்களைத் தத்ரூபமாக எழுதியிருப்பார்.
கதாநாயகன் சிறந்த அறிவாளி. அதே சமயம் வறுமையும் அவனை வாட்டி வதைக்கின்றது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு கொலையும் செய்து விடுகிறான். பல சமயங்களில் அவனது மனச்சாட்சி உறுத்துகிறது. வலிப்பு நோய் அவனைத் தாக்கும்போது அவன் முற்றிலும் மாறுபட்ட மனிதனாகத் தோன்றுவது போலப் படிப்பவர்கள் உணர்கிறார்கள். அவனுடைய அந்தரங்கம், ஏக்கங்கள், அவனது ஆத்மாவின் புனிதத் தோற்றம் அந்தச் சமயத்தில் வெளிப்படுகின்றது.
இந்த நாவலில் இரண்டு மனம் கொண்ட நாயகனைப் பார்க்கலாம். சாதாரணமாக இருக்கும் நேரங்களில் நாயகனிடம் காணப்படும் குணாதிசயங்கள், அவன் மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள், அவனது கனவில், கண்ணில் தோன்றும் காட்சிகள் ஆக இந்த நாவலில் சொல்லப்படும் கதையம்சத்திலும் சித்திரிக்கப்படும் பாத்திரங்களிலும் இந்த வலிப்பு நோய் பெரும் பங்கு வகிக்கின்றது.
வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட இந்த நாவல் மூலம் வலிப்பு நோயினால் மனிதனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஆனால், கற்பனை மிகுந்த எழுத்தாளரான தாஸ்தாயவ்ஸ்கி மிகச் சிறந்த நாவலை எழுதுவதற்கும் அதே வலிப்பு நோய் காரணமாக இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யமூட்டும் விஷயம்.
இப்படி இந்த நோய் தந்த துன்பத்தையும் தனக்கு அனுகூலமாக்கி உலகம் போற்றும் அழியா இலக்கியத்தைப் படைத்த தாஸ்தாயவ்ஸ்கி ஒரு விந்தை மனிதர்தான்!
-அடுத்த இதழில்: பாடகர் ரே சார்லஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...