மன உறுதியும் லட்சியதாகமும் அதனை அடைவதற்கான விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒருவர் உலகம் போற்றும் தலைவராகலாம் என்பதற்குத் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் ஃப்ராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட். போலியோ நோயினால் வலுவிழந்த கால்களைக் கொண்டவர்.
அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நாட்டின் வரலாற்றில் புதிய சாதனை படைத்தவர். மக்களிடையே அளப்பரிய செல்வாக்குப் பெற்றவர். அமெரிக்காவின் அனைத்து தரப்பினரும் ஒருசேர அவரை மிகவும் விரும்பினர்.
1932-ஆம் ஆண்டு அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான காலகட்டம். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்தது. எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவித்து வரும் நிலை. வங்கிகள் கடன் வசதியை நிறுத்தியிருந்தன. 1929-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியிலிருந்து பலரும் மீண்டு வரமுடியாது தவித்துக்கொண்டிருந்தார்கள். கடுமையான வறட்சியால் நாடெங்கிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் வேறு வேலைகளைத் தேடி சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள்.
இத்தகைய மோசமான காலகட்டத்தில் ஏராளமான பொறுப்புகளையும் சவால்களையும் ஏற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவரானார் ரூஸ்வெல்ட்.
ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களே இத்தகைய சூழ்நிலையில் அதிகமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதால் மிகவும் களைத்துப் போய்விடுவர்.
அப்படிப்பட்ட நிலையில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்த தனது கால்களுடன், கடுமையான பொறுப்புகளை ஏற்று, ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வறுமையால் வாடி நின்ற அமெரிக்காவை வளம் கொழிக்கும் நாடாக மாற்றிய சாதனையாளர் ரூஸ்வெல்ட்.
30.01.1882-இல் நியூயார்க் நகரிலுள்ள ஹைட்பார்க் என்னுமிடத்தில் பிறந்தார். படிக்கும் காலத்திலேயே அவருக்கு அரசியலில் ஆர்வம் அதிகமானது. சட்டப்படிப்பை ஆர்வத்துடன் படித்தார்.
அந்தச் சமயத்தில் அவருடைய உறவினர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு பல உயர்பதவிகளில் இருந்து வந்தனர்.
ரூஸ்வெல்ட், 1910-ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு பதவிகளில் இருந்து வந்தார்.
1921-ஆம் ஆண்டு, தன்னுடைய 39-வது வயதில் தனது குடும்பத்தினருடன் படகில் பயணம் செய்தபோது கால் தடுமாறிக் கடுங்குளிர் நீரில் விழுந்து விட்டார். ஆனால் உடனே காப்பாற்றப்பட்டார்.
மறுநாள் காலையில் படுக்கையிலிருந்து எழ முயன்றார்.
அவரால் முடியவில்லை. கால்கள் மிகவும் வலுவிழந்து காணப்பட்டன. இது தாற்காலிகமானதுதான், ஓரிரு நாட்களில் சரியாகி விடும் என்றுதான் நினைத்தார். ஆனால் மாதங்கள் கடந்தும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தான் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்டார். இனி இதுதான் தனது நிலை என்பது உறுதியானதும் சோகத்தில் தவித்துப் போனார்.
அரசியலில் ஏராளமான சாதனைகள் படைக்க வேண்டுமென்ற கனவில் ரூஸ்வெல்ட் இருந்தார். அவருடைய நோய் காரணமாக, அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என்று பலரும் பேசத் தொடங்கினார்கள்.
ஆனால், ரூஸ்வெல்ட் தனது நெருங்கிய நண்பர்களிடம் "அரசியலில் நிச்சயம் சாதனை படைப்பேன்' என்று உறுதிபடக் கூறிக்கொண்டிருந்தார்.
வலுவிழந்த கால்களுக்கு வலுவேற்ற, டாக்டர்களின் ஆலோசனைப்படி தினமும் தன் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் பல மணிநேரங்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். கால்களின் வலுவில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
வலுவிழந்துவிட்ட கால்கள் என்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க அவர் விரும்பவில்லை. மீண்டும் அரசியலில் முன்பைவிட புதிய உற்சாகம், வேகத்துடன் ஈடுபடத் தொடங்கினார். அதற்கு அவருடைய மனைவி மிகுந்த ஆர்வத்துடன் ஊக்கமளித்து நம்பிக்கையூட்டினார்.
தான் நினைத்ததை சாதித்தே தீரவேண்டும் என்று உறுதி கொண்டார் ரூஸ்வெல்ட். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
1928-ஆம் ஆண்டு நியூயார்க் நகர ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1932-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரானார். வலுவிழந்த கால்களுடன் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்கள் மனதைக் கவரும் வகையில் பேசுவதில் வல்லவரானார். அவருடைய மனைவி எலினார் ரூஸ்வெல்ட்டும் மக்கள் மனதை ஈர்க்கும் வகையில் பேசுவதில் வல்லவர்.
தனது கால்களால் தனது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மிகுந்த வலியையும் பொறுத்துக்கொண்டு இயல்பாக நடப்பது போலவும் நிற்பது போலவும் செய்துகாட்ட முற்பட்டார். அவரைச் சுற்றி மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் காணப்படுவார்கள். அவர்களின் தோள்கள் மீது கையைப் போட்டுக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் பேசிக்கொண்டே நடந்து செல்வது போல முகத்தில் புன்னகையுடன் நடந்து செல்வார். நீண்ட நேரம் நின்று உரையாற்றுவார்.
மக்கள் அவருடைய உடல் குறைபாட்டைப் பற்றி நினைக்கவே இல்லை. எந்தத் திட்டத்தையும் அதிவிரைவாகச் செயல்படுத்தி வந்தார். மக்கள் அவருடைய செயல்பாட்டைத்தான் கவனித்தார்கள். அதனால்தான் அவர் தொடர்ந்து நான்கு முறை அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரூஸ்வெல்ட்டின் பதவிக்காலத்தில்தான் முதன்முதலாக தொழிலாளர்கள் உரிமை குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்கள் தங்கள் நலன்களுக்காக சங்கங்கள் அமைத்துக் கொள்ளவும் அவற்றில் சேருவதற்கு முதலாளிகள் அவர்களைத் தடை செய்யக்கூடாது என்றும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க
எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன. வேளாண்மைத் தொழில் மீண்டும் செழிப்பும் சிறப்பும் அடைய ஏராளமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. பசி, பட்டினி அடியோடு விரட்டப்பட்டது. மக்கள் உழைத்துப் பொருளீட்டி கெüரவமாக வாழும் வகையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. பொருளாதார வளர்ச்சி ஏற்பட மிகுந்த கவனத்துடன் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
கருப்பின மக்களுக்கு ரூஸ்வெல்ட் ஏராளமான சலுகைகள் காட்டினார். அவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இனவேற்றுமைகளைக் களைய அரும்பாடுபட்டு வந்த இவரை அமெரிக்கர்கள் தெய்வமாகப் போற்றியதில் வியப்பேதும் இல்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கப் பாடுபட்டவர்
களில் இவரும் ஒருவர்.
12.04.1945 அன்று காலமானார்.
உடல் ஊனம் கண்டு மனம் தளராமல் மன உறுதி, இலட்சிய வெறி, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் இருந்தால் நாடும் உலகமும் போற்றும் தலைவராக மீண்டும் மீண்டும் வரலாம் என்பதற்கு ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
-அடுத்த இதழில் : டெர்ரி ஃபாக்ஸ்
செவல்குளம் "ஆச்சா'