touch ஸ்க்ரீன்
நம் தினசரி வாழ்க்கையில் இந்தக் காட்சியைப் பார்த்திருப்போம்: சில பேர் வெட்டவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
வல்கன்
நம் தினசரி வாழ்க்கையில் இந்தக் காட்சியைப் பார்த்திருப்போம்: சில பேர் வெட்டவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை நாம் வேறு விதமாக அழைப்பதுண்டு. ஆனால் வான்வெளியை பார்த்துக் கொண்டிருப்பதையே தங்களின் தொழிலாகக் கொண்டவர்களை விண்வெளி ஆராய்ச்சியாளர் அல்லது விண்வெளி விஞ்ஞானி என்கிறோம்.
விண்வெளி விஞ்ஞானிகள் விசித்திரமான ஆசாமிகள். சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படாத பல விண்வெளி உலகங்களை, மனதுக்கு எட்டாத தொலைவுகளில் சதா தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஏன் இப்படித் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்? இப்படித் தேட அவர்களைத் தூண்டிக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி - "நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா?' என்பதுதான்!
ஒரு மனித ஆயுள் முழுவதும் விண்ணில் பயணம் செய்தாவது வேறு ஏதாவது நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தைக் காண முடியுமா? அதில் ஜீவராசிகளையும் காண முடியுமா? என்றுதான் இப்படி சதா தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேற்றுக் கிரகத்தில் உள்ள நமது பிரபஞ்ச உறவினர்களைப் பார்க்க முடிவதன் நிஜமான சாத்தியத்தை விட்டுவிடுவோம். அப்படிப்பட்ட உலகங்கள் இருக்கின்றனவா என்ற தேடல் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய முக்கிய கருவியான, சக்தி வாய்ந்த டெலஸ்கோப்புகள் - தொலைநோக்கிகள் மூலம் காண்பனவற்றுக்கெல்லாம் ஒரு பெயரைக் கொடுத்துவிடுவார்கள்.
பெயர் என்றால் அதில் ஒரு விநோத முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். விண்வெளியில் காணும் சிலவற்றுக்குப் பெயராக வைப்பார்கள். வேறு சில பொருள்களுக்கு வெறும் எண்களையும் ஓரிரண்டு எழுத்துகளையும்தான் பெயர்களாகச் சூட்டுவார்கள்.
சூரிய குடும்பத்தின் எல்லையில் இருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டிக்கு 2003 யுபி 313 என்று பெயர் வைத்திருந்தனர். பின்னர் இந்த ஐஸ் கட்டியை, சூரிய குடும்பத்தின் ஒரு கிரகமாகவே கருதத் தொடங்கினர். அப்போது எரிஸ் என்று பெயரை மாற்றி வைத்தனர். இதை பத்தாவது கிரகம் என்றனர் சில விஞ்ஞானிகள்.
ஆனால் ஒன்பதாவதாக இருந்த புளூட்டோவுக்கே சூரியக் குடும்பத்தில் இடம் உண்டா என்கிற கேள்வி சில வருஷங்களுக்கு முன்பு எழுந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கக் கூடும்.
பெயர் சூட்டல் விஷயத்துக்கு வருவோம். ஃபிராங்க் ஸôப்பா என்கிற அமெரிக்க ராக்-ஜாஸ் இசைக்காரர் பெயரில் "3834 ஸôப்பா ஃபிராங்க்' என்கிற விண்கல் ஒன்று விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறது.
ஃபிராங்க் ஸôப்பா பெயரை ஸôப்பா ஃபிராங்க் என்று திரித்து வைக்கக் காரணம் - ஃபிராங்க் என்று தொடங்குகிற வேறு நாலைந்து கிரகங்களும் விண்கற்களும் ஏற்கெனவே இருக்கின்றன. லெனன், மெக்கார்ட்னி என்கிற பிரபல பாப் சங்கீதக்காரர்களின் பெயர்களிலும் விண்வெளியில் கற்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
மேற்கத்திய விஞ்ஞானிகள் முதலில் புராணங்களிலிருந்து கடவுள்களின் பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 150 வருஷ காலமாக புராணப் பெயர்களை சூட்டி சூட்டி, புராணங்களில் பெயர்கள் காலியாகிவிட்டன.
பிறகு புதுசு புதுசான வழிகளில் பெயர்கள் வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு முக்கியமான நிபந்தனை. ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கும் விண் பொருளுக்குத் தன் பெயரையே சூட்டக் கூடாது. ஆனால் வேறு பிரபலங்கள் பெயரை சிபாரிசு செய்யலாம். தன்னுடைய சொந்தக்காரர் பெயரைக் கூட சூட்டலாம் என்ற சலுகைகள் உண்டு.
இப்படி சூட்டப்படும் பெயர்களை எல்லோரும் ஏற்றுக்கொள்வதற்கு நிறைய நிபந்தனைகள் எல்லாம் உள்ளன. முறையான சர்வதேசக் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
சூரியக் குடும்பத்துக்கு வெளியே வேற்று சூரியன்களை (நட்சத்திரங்களை) சுற்றி வரும் கிரகங்களுக்குப் பெயர் வைக்கும்போது, அந்த நட்சத்திரத்தின் பெயர் - மேலும் அதனுடன் கூட ஒரு எழுத்து, மட்டும் வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
அமெரிக்க விண்கலமான கெப்லர் மூலம் அறிய வந்துள்ள ஒரு கிரகம் "கெப்லர் 10-பி'. அவசரத்துக்கு, தாற்காலிகமாக சூட்டிய பெயர் இது. சூரியக் குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய கிரகம் இந்த "கெப்லர் 10-பி'தான்.
இந்த கிரகம் சுற்றிவரும் நட்சத்திரத்துக்கு "கெப்லர்-10' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கெப்லர்-10 நட்சத்திரத்தை கெப்லர் 10-பி கிரகம் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 20 மணி நேரம்.
நமது அண்டை கிரகமான புதன், சூரியனைச் சுற்றி வரும் பாதையின் அளவில் இருபதில் ஒரு பங்குதான் இந்த கெப்லர்-10-பியின் பாதை இருக்கும்.
நாம் இருக்கும் பூமியைவிட சற்றே பெரிது. இந்த கிரகத்தின் குறுக்களவு, நமது பூமியைவிட 1.4 மடங்கு அதிகம். அதனால் அதன் கனம் பூமிப் பருமனைவிட 4.6 மடங்கு அதிகம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
இது குட்டியாக இருந்தாலும் கனமாக இருப்பதற்குக் காரணம், இந்த கிரகம் பெரும்பாலும் இரும்பு நிறைந்ததாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இந்த கிரகத்துக்கு "வல்கன்' என்று பெயரிடலாம் என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் அபிப்பிராயப்படுகிறார்கள்.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தின் பாதைக்கு இடையே இன்னொரு கிரகம் இருக்கிறது என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு விண்வெளி விஞ்ஞானிகள் வெகுநாட்களாகத் தேடி வந்தனர். ஆனால் பலன் கிட்டவில்லை.
சூரியனை புதன் வட்டமிடும் பாதையை நோக்கும்போது வேறொரு கிரகம் அல்லது பெரும் விண்கல் ஒன்று அங்கு இருப்பது போலப் பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்குத் தோன்றியது. பலர் இந்த மாய கிரகத்தை தேடியபடி இருந்தனர்.
அதிலும் கணித மேதையான அர்பெய்ன் லெ-வெரியர் மிகத் தீவிரமாக இருந்தார். அதைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அந்த கற்பனை கிரகத்துக்கு "வல்கன்' என்று ஆசையாகப் பெயர் சூட்டினார் அவர்.
வல்கன் ஒரு ரோமானிய புராணக் கடவுள். எரிமலை உள்ளிட்ட தீயின் கடவுள் அவர். இவருக்கு இணையான கிரேக்க கடவுள் ஹெஃபஸ்டஸ். இவர் தீயின் கடவுளாகவும் ஆயுதங்களைச் செய்யும் கொல்லராகவும் குறிப்பிடப்படுகிறார். கிரேக்க புராணக் கதைகள் குறித்த சிற்பங்களிலும் ஓவியங்களிலும் இவருடைய உருவத்தை வடிக்கும்போது, எப்போதும் அவர் கையில் சுத்தியல் ஒன்று இருப்பதன் காரணம் இதுவே.
இருபதாம் நூற்றாண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பு நிலை தத்துவம் வெளியான பின்பு, புதன் அருகே "வல்கன்' கிரகம் இருப்பதற்கான சாத்தியங்கள் மங்கிப் போயின. ஐன்ஸ்டைனின் அறிவியல் கருத்துப்படி, சூரியனின் ஈர்ப்பு விசை புதனின் பாதைக்கு ஒரு கோணத்தைக் கொடுக்கிறது என்று தெரிந்ததும், புதன் அருகே இருப்பதாகக் கருதிய வல்கன் கிரகம் பற்றிய சிந்தனையைக் கைவிட்டார்கள்.
ஆனால் வல்கன் என்ற பெயரை கைவிட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் "கெப்லர் 10-பி' கிரகத்தை "வல்கன்' என்று அழைக்கலாமென இப்போது சொல்கிறார்கள்.
இங்கே இருக்கும் படத்தில் இருப்பது வல்கன். கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் - பென்சில்வேனியாவில் வைக்கப்பட்டுள்ள பன்னிரண்டு அடி உயர வல்கன் சிலை இது. இதன் எடை 544 கிலோகிராம். இந்தக் கல்வி நிறுவனத்தின் அடையாளமாக இது உள்ளது.
எப்புடி?
உலகம் பூராவும் இப்போது மனிதர்கள் இடையே காணப்படும் முக்கிய தொந்தரவு அதிக எடை. உடல் பருமனுக்கு விதவிதமான, விசித்திரமான காரணங்கள் சொல்கிறார்கள். வேலையில் மன அழுத்தம், பூமியின் ஒட்டுமொத்த பருவ நிலை மாறுதல் அடைந்து வருவது, இரவில் மின்சக்தியால் நாம் செயற்கையாக உருவாக்கிக் கொள்ளும் வெளிச்சம் - இதெல்லாம் கூட நமது உடல் விரிவடைந்து பருமனாவதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
மனிதர்களின் உடற்பருமன் அதிகரிப்பதற்கு கூறப்படும் காரணங்களில் சில நமது வீட்டு மிருகங்களுக்கும் பொருந்தும் என்பதால் அந்தக் காரணங்கள் உண்மையா அல்லது வெறும் கருத்துதானா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.
பூனை, நாய், எலி, குரங்குகள் என எட்டு வித இனங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விலங்குகளை வைத்து ஒரு சோதனை நடத்தப்பட்டது. விலங்குகளும் மனிதர்களைப் போலவே வெயிட் போடுகின்றன என்று இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது. ஆனாலும் பருமன் கூடுவது உறுதியாகியிருக்கிறதே தவிர, குறிப்பாக எதனால் அப்படி நேர்கிறது என்பது இன்னும் முடிவாகத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...