touch ஸ்க்ரீன்
மொழியைப் பற்றியோ அல்லது கலை, கலாசார விஷயங்களைப் பற்றியோ குறிப்பான ஒரு விஷயத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் அது தொடர்பாக வெளியாகியிருக்கும் ஆய்வுகள் அல்லது புத்தகங்களை படிக்க வேண்டும்.


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
மொழியைப் பற்றியோ அல்லது கலை, கலாசார விஷயங்களைப் பற்றியோ குறிப்பான ஒரு விஷயத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால் அது தொடர்பாக வெளியாகியிருக்கும் ஆய்வுகள் அல்லது புத்தகங்களை படிக்க வேண்டும். ஆராய்ச்சி பரவலானதாக, பெரிதாக இருக்குமானால் ஒரு குழுவே சேர்ந்து பல புத்தகங்களைப் படிக்கலாம். ஆனால் எவ்வளவு காலம், எவ்வளவு பேர் சேர்ந்தாலும் எழுத்தின் சரித்திரத்தில் வெளியான எல்லா புத்தகங்களையும் சேர்த்துப் படித்துவிட முடியுமா... அல்லது பார்க்கத்தான் முடியுமா...
பதினைந்தாம் நூற்றாண்டில் குட்டன்பர்க் அச்சு யந்திரத்தைக் கண்டுபிடித்தது முதல் இன்றுவரை வெளியாகியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை பதின்மூன்று கோடி என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவும் தோராயமான ஒரு கணக்குதான். இவற்றையெல்லாம் படிக்க முடியவில்லை என்றாலும், சிறிதளவு பார்க்கவாவது சாத்தியம் இருக்கிறது- கூகுள் உதவியால்.
ஒன்பது வருடங்களுக்கு முன்பு கூகுள் ஒரு வேலையைத் தொடங்கியது. புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது என்று கூகுள் தீர்மானித்தபோது, வெளியீட்டாளர்களுக்கு பயங்கர எரிச்சல். புத்தக விற்பனை பற்றிய கவலை வெளியீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, எழுத்தாளர்களுக்கும் காப்புரிமை பிரச்னை எழுந்தது. எழுத்து மட்டுமே தொழில் என்று இருப்பவர்களுக்கு காப்புரிமை மிக முக்கியமான பிரச்னைதான்.
கூகுள் ஒரு சமரசத்துக்குத் தயாரானது. காப்புரிமை தொந்தரவில்லாத புத்தகங்களை மட்டும் முழுமையாக டிஜிட்டல் தேடலில் நாம் படிக்கும் விதமாக அளித்தது. பிற புத்தகங்களை முற்றிலும் ஸ்கேன் செய்து தனது ஆவணங்களிலும் வைத்திருந்தாலும் கூட, சில முக்கிய பகுதிகளை மட்டுமே வாசகர் காண முடியும் என்ற நிலைக்கு கூகுள் இறங்கி வந்தது.
இந்த திட்டத்தில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் சேர்ந்துகொண்டன. பல எதிர்ப்புகளும் வழக்குகளும் தொடர்கின்றன.
2004-ஆம் புத்தகங்களை ஸ்கேன் செய்யத் தொடங்கிய கூகுள் 2010-ஆம் ஆண்டு வரை சுமார் ஒன்றரை கோடி புத்தகங்களை "டிஜிட்டைஸ்' செய்திருக்கிறது. இன்னும் அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. இவற்றில் மிகப் பெரும்பான்மையானவை ஆங்கிலப் புத்தகங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
மேற்படி சர்ச்சைகள், கூகுள் புக்ஸ் திட்டத்தில் பல குறைகள் என்கிற புகார்கள் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
கூகுள் ஸ்கேன் செய்து வைத்த புத்தகங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு சிலர் வெவ்வேறு ஆராய்ச்சிகளில் இறங்கினர்.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக பண்டிதர்கள் சிலர் ஆங்கில மொழி ஆராய்ச்சியில் இறங்கினர். முழுமையான விவரங்கள் இருக்கும் ரகமாக ஐம்பது லட்சம் புத்தகங்களை அவர்கள் தனியே பிரித்தார்கள். அதிலும் 1800-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை வெளியான ஆங்கிலப் புத்தகங்களை மட்டும் தனியே பிரித்தார்கள்.
ஒரு ஃபார்முலா வகுத்து ஆங்கிலத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இந்த ஃபார்முலாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று: ஒரு சொல் கொண்ட வார்த்தைகள், பல சொல் கொண்ட வார்த்தைகளை அடையாளம் கண்டுபிடிப்பது. எந்த விதமான சொல் தொடர்களை ஒரு சொல்லாக அங்கீகரித்து சொல் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது ஒரு சவால்தான்.
ஒற்றைச் சொல் வார்த்தைகள் போலவே ஐக்கிய நாடுகள் போன்ற இரட்டைச் சொல் தொடர்கள் கூட ஒரு சொல் போலவே பயன்படுத்தப்படுவதும் சகஜமான விஷயம் என்பதால் அதுபோன்ற இரு சொல் வார்த்தைகளையும் வகை வகையாகப் பிரித்து எண்ணினார்கள்.
ஆங்கிலத்தில் உள்ள அரிதான ஐந்து சொல் வார்த்தைகள் (தி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா) எல்லாவற்றையும் கூட கவனமாக கணக்கிட்டார்கள்.
இந்த வகையில் எண்ணி முடித்தபோது, ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் பத்து லட்சம் சொற்கள் உள்ளன என்ற முடிவுக்கு வந்தார்கள் அந்த ஹார்வர்டு பண்டிதர்கள்.
ஆங்கில அகராதிகளில் முன்னணியில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் அதாவது முழுமையான அகராதியில் சுமார் ஏழரை லட்சம் ஆங்கில சொற்கள் உள்ளன. இவை தவிர 47 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்கொழிந்த அல்லது பரவலாக பயன்படுத்தப்படாத சொற்கள் வேறு. இதையெல்லாம் தொகுத்ததில் 20 தொகுதிகள் நிறைந்துவிட்டன. இது முழு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் இரண்டாம் பதிப்பு - 1989-இல் வெளியாகியது.
(இதனை பிரத்தியேகமாக ஆர்டர் செய்துதான் வாங்க வேண்டும். இன்றைய ரூபாய் மதிப்பில் அறுபதாயிரம் செலவாகும். வெளியான முதல் பத்து வருஷங்களில் முப்பதாயிரம் பிரதிகள் விற்றன. வருஷ சந்தா கட்டி ஆன்லைனிலும் பார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சுருக்கிய வடிவ ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதிகள் இருக்கின்றன. இவை கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளன என்பது வேறு விஷயம்.)
அறிவியல் சொற்கள், சில வகை சிறப்பு பயன்பாடுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால், எப்போதும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஆங்கிலச் சொற்களின் எண்ணிக்கை ஒன்றே முக்கால் லட்சம் என கணக்கிட்டுள்ளார்கள்.
ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ் அகராதி இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. 1950-ஆம் ஆண்டிலிருந்துதான் இப்போதுள்ள அளவில் 70 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. மூன்றாம் பதிப்பு வேலை நடைபெற்று வருகிறது.
தமிழில் இது போன்ற ஒரு சொல் ஆராய்ச்சி நடக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.
மனித காதுகளுக்கு எட்டாத சில அலைவரிசை ஒலிகளை கேட்கும் சக்தி வாய்ந்த ஒரு செயற்கை காதை பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
வெள்ளி நானோ துகள்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு சின்னஞ்சிறு ஆன்டெனா இதன் அடிப்படை என்றாலும் கன்றின் உயிரணுக்கள், பாலிமர் பிசின் ஆகியவற்றினால் ஒரு காது உருவத்தில் இதனை அமைத்திருப்பது புரட்சிகரமானது. வாழும் உயிரணுக்கள் கொண்டு இது போன்ற செயற்கையான கருவிகளை உருவாக்குவது சாதாரணமான விஷயமல்ல.
மனித காதுகளுக்கு எட்டாத அதிநுட்பமான ஒலிகளை இதன் மூலம் பெற முடியும். அதே சமயத்தில் இதில் உபரியாக சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு பகுதி மூலம் சாதாரண மனித காதுகள் கேட்கும் இசை போன்ற சமாசாரங்களையும் கேட்க முடியும்.
கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்த முடியுமா என்றால் முடியாது என்றுதான் இதை உருவாக்கியவர்கள் சொல்கிறார்கள்.
கருத்தளவில் இது சாத்தியம் என்றாலும் பிற உடல் உறுப்புகளை மருத்துவ ரீதியாக மாற்றிப் பொருத்துவது போல இதை ஒரு மாற்றுக் காதாக உருவாக்கும் உத்தேசம் இந்த விஞ்ஞானிகளுக்கு உடனடியாக இல்லை.
மனித யந்திரங்கள் உருவாவதற்கு முன்னோடியாக இதை எடுத்துக் கொள்ளலாம். அது போன்ற யந்திரங்கள் உருவாகும் முன்பே அவற்றுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் தயாராகி கொண்டிருக்கின்றன என்றும் சொல்லலாம். மனித உடல்களில் காதின் செயல்பாடு மிக நுட்பமானது. அதை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறோம். தேவைக்கேற்ப மனித உடல் உறுப்புகளை தயாரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
எலக்ட்ரானிக் சாதனங்கள் கடினமான பொருள்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஆனால் உயிரியல் சாதனங்கள் மென்மையாகவும் வளையக் கூடியதாகவும் இருக்கின்றன. இவற்றை இணைத்து ஒரு உயர் திறன் கொண்ட பொருளை உருவாக்குவது பெரிய சவால். அந்த வகையில் இதை முயற்சி செய்திருக்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதே ரீதியில் செயற்கை கண்களை உருவாக்குவதில் வேறு சிலர் முயன்று வருவதும் குறிப்பிடத் தகுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...