அரங்கம்

அரங்கம்

காட்சி-1

மாந்தர்-அன்பு, அறிவு, கதிர், தும்பை(அன்பின் அம்மா)

இடம்- பள்ளி வளாக வெளிப்புறம், திறந்த வெளிக் கடை.

(கதிர் அந்தக் கடையில் வடை வாங்கித் தின்று கொண்டிருக்கிறான்)

அன்பு: கதிர், என்னடா ஈ மொய்க்கும் வடையை வாங்கித் திங்கறே! உடல் நலம் கெடும்னு ஆசிரியர் இன்றுதான் பாடம் எடுத்தார்...,வடையைத் தூக்கி எறிடா!

அறிவு: ஆமாம், அன்பு சொல்றது சரிதான். வடையை தூக்கி எறிஞ்சுடுடா!

கதிர்: நான் தினமும்தான் இங்க வடை வாங்கித் திங்கறேன். என்ன ஆயிடுச்சி? போய் ஒங்க வேலையைப் பாருங்க.

(கதிர் கைகளில் இருந்த வடைகளை அன்பு பிடுங்கி எறிந்தான். கதிருக்குக் கோபம் பொங்கியது. அன்பை புரட்டி எடுத்துவிட்டான். அத்தோடு அன்பின் பையில் இருந்த காசை எடுத்து மீண்டும் வடை வாங்கிச் சாப்பிட்டான்.

அன்பு: அறிவு, இங்கு நடந்ததை வீட்டுல சொல்லிடாதே.

அறிவு: அது சரி, சட்டையெல்லாம் மண்ணாயிடுச்சே! அம்மா கேட்டா என்ன் சொல்றது?

அன்பு: அதை நான் பார்த்துக்கறேன். நீ எதுவும் சொல்லாம இருந்தா அதுவே போதும்.

(மூவரும் பக்கத்து பக்கத்து வீடு. எப்போதும் ஒன்றாகவே பள்ளிக்குச் சென்று வருவர். இன்று கதிர் மட்டும் பயந்து பயந்து சற்று விலகியே வந்தான்)

தும்பை: (பதறியபடி) அன்பு! சட்டையெல்லாம் மண்ணா இருக்கே...,என்ன நடந்தது? எவனாவது அடிச்சுட்டானா? சொல்லுடா...,யாருடா அது? உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்.

அன்பு: ஒண்ணும்ல்லேம்மா! வேகமா ஒடி வரும்போது தவறி கீழே விழுந்துட்டேன்...,கதிர்தான் தூக்கிவிட்டான். கதிர்! சொல்லேன்டா..

கதிர்: (ஒருவாறு சமாளித்துக்கொண்டு) ஆமாம்மா! கீழேதான் விழுந்துட்டான்.

தும்பை: சரி, சரி, சீக்கிரம் வா. காயத்துக்கு மருந்து தடவணும்.

அன்பு: சரி அம்மா.

காட்சி-2

மாந்தர்-அன்பு, அறிவு, கட்டட ஒப்பந்தக்காரர், பொன்னாத்தாள்,முனுசாமி.

இடம்: கட்டுமானப் பணி நடைபெறும் புதிய கட்டிடம்.

(கதிருக்கு உடல் நிலை மோசமாகி ஆசிரியர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தகவல் சொல்ல அன்பும், அறிவும் கதிரின் அம்மா பொன்னாத்தாள் கட்டிட வேலை செய்யும் இடத்திற்கு விரைகிறார்கள்)

ஒப்பந்தக்காரர்: தம்பிகளா! இப்படி மூச்சு இறைக்க ஓடி வர்ரீங்களே! என்ன சேதி?

அன்பு: (மூச்சு வாங்க) ஐயா! நாங்க கதிர் அம்மாவைப் பார்க்கணும்...

அறிவு: பேரு பொன்னாத்தா.

ஒப்பந்தக்காரர்: ஆமா, அந்த அம்மா இங்கேதான் வேலை செய்யறாங்க...டேய் முனுசாமி பொன்னாத்தாவைக் கூப்பிடு!

முனுசாமி: இதோ கூப்பிடுறேங்க...,பொன்னாத்தா! பொன்னாத்தா!

(பொன்னாத்தா கீழே இறங்கி வருகிறாள்)

பொன்னாத்தாள்: அன்பு, என்னப்பா?

அன்பு, அறிவு: (இருவரும் ஒருசேர) ஒண்ணுமில்லே பயப்படாதீங்க..., கதிருக்கு உடம்பு சரியில்லே வயித்துப் போக்கு! ஆசிரியர் மருத்துவமனையில் சேர்த்திருக்காரு. உங்களுக்கு சேதி சொல்லத்தான் ஒடி வந்தோம்!

பொன்னாத்தாள்: அய்யய்யோ! நான் என்னா பண்ணுவேன்? என் புள்ளைக்கு என்ன ஆச்சோ? (வாய் விட்டுக் கதறிக்கொண்டே விரைந்து மருத்துவ மனையை அடைகிறாள்)

காட்சி-3

மாந்தர்: பண்பாளன், தும்பை (இருவரும் அன்பின் பெற்றோர்கள்), அன்பு.

இடம்: அன்பின் வீடு.

அன்பு: அம்மா! அப்பா! கதிருக்கு உடம்பு சரியில்லே. மருத்துவமனையிலே சேர்த்திருக்காங்க!

தும்பை, பண்பாளன்: (இருவரும்) என்ன ஆச்சு அவனுக்கு?

அன்பு: வாந்தி...,வயிற்றுப்போக்கு! அவன் ரொம்ப பாவம்பா. அப்பா இல்லாத புள்ள...,"நலம்' மருத்துவ மனையிலதான் சேர்த்திருக்காங்க..., மருத்துவர் உங்க நண்பர்தானே! அவரோட பேசுங்க...,கொஞ்சம் அக்கறையோட கவனிக்கச் சொல்லுங்க.

பண்பாளன்: சரி...,சரி, சொல்றேன். அவனுக்கு வயிற்றுப்போக்கு ஏன் வந்தது?

அன்பு: அதுவா இப்ப முக்கியம்? செயலுக்கு வாங்க...,குழந்தை மாதிரி கதை சொல்லச் சொல்றீங்க.

தும்பை: அந்தக் கதை முழுவதும் எங்களுக்குத் தெரியும்! அவன் வடை வாங்கிச் சாப்பிட்டதும்...,நீ தடுத்ததும்...,அவன் அடித்ததும், கட்டிப் புரண்டதும்...,ஒண்ணு விடாம தெரியும்.

அன்பு: என்னம்மா சொல்றே?

பண்பாளன்: நடந்ததை எல்லாம் அந்தக் கடைக்காரரே என்னிடம் சொன்னார். போதுமா? அவன் உன்னை அடிச்சுட்டான்னு கேள்விப்பட்டதும் நாங்க துடியாத் துடிச்சுப் போயிட்டோம்! நீ என்னடான்னா அவனைப் பார்க்க மருத்துவ மனைக்குப் போகணும்...,நன்கு கவனிக்க ஏற்பாடு செய்யணுமிங்கிறே! இது சரியா சொல்லு!

அன்பு: அப்பா! நீங்களா இப்படிப் பேசறீங்க? கையிலே இருக்கிற உணவைப் பிடுங்கி எறிஞ்சா யாருக்குத்தான் கோபம் வராது? அவன் நல்லவன் அப்பா! அப்படிக் கெட்டவனாவே இருந்தாலும், "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே!' ன்னு சொல்லியிருக்காங்களே! இதை நீங்க அப்படிப் பார்க்கக் கூடாதா?

பண்பாளன்: (நெகிழ்ச்சியுடன்) அன்பு நான் பெயரில்தான் பண்பாளன்...,நீ உண்மையிலேயே பண்பாளன்! ரொம்ப பெருமையா இருக்கு. வெள்ளை மனசு உனக்கு! "பாசத்தால் மனித நேயத்தை இழந்து விடக்கூடாது'ன்னு உணர்த்திட்டே...,இப்பவே மருத்துவ மனைக்குப் போகலாம்...,சரியா?

அன்பு: சரிப்பா! வீட்டுல இருக்கிற ஹார்லிக்ஸ்,பழங்கள் எல்லாத்தையும் எடுத்துக்கறேன்...கதிருக்குக் குடுக்கணும்பா!

காட்சி-4

மாந்தர்- அன்பு, பண்பாளன், தும்பை, கதிர், பொன்னாத்தாள், மருத்துவர், செவிலி.

இடம் - நலம் மருத்துவமனை.

அன்பு: கதிர்! இப்ப உடம்பு எப்படி இருக்கு?

கதிர்: (கண்ணீர் பெருக்குடன்...அன்பின் கைகளைக் கதிர் பிடித்துக்கொண்டு)

மருத்துவர் நல்லா கவனிச்சுக்கிட்டாரு...,உன் அப்பா நன்கு கவனிக்கச் சொன்னதா மருத்துவர் சொன்னாரு. இப்போது நான் முழுதும் நலம். இனி ஒருக்காலும் ஈ மொய்க்கும் பண்டத்தைத் தொடமாட்டேன். உன்னைத் துன்புறுத்தினேன். அதெயெல்லாம் மறந்துட்டு என்னைப் பார்க்க வந்திருக்கே. உன் அப்பா, அம்மாவை வேற அழைச்சுட்டு வந்திருக்கே. அது உன் பெருந்தன்மை! என்னை மன்னிச்சுடு!

பண்பாளன்: (மருத்துவரிடம்) என்ன டாக்டர், கதிரை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போகலாமா? அவன் முழு நலமா?

மருத்துவர்: முழு நலம். எப்போ வேண்டுமானாலும் அழைச்சுக்கிட்டுப் போகலாம். சரியான நேரத்தில் வந்ததால் நோயின் தீவிரம் கட்டுக்குள் வந்துவிட்டது.

பண்பாளன்: பொன்னாத்தா...,நீங்க என்ன சொல்றீங்க? உங்க முடிவு என்ன?

பொன்னாத்தாள்: எதுக்கும் இரவு தங்கி காலையிலே வர்றோம் ஐயா! எங்களுக்கும் அச்சம் இல்லாம இருக்கும்.

தும்பை: பொன்னாத்தா, செலவுக்கெல்லாம் பணம் வச்சிருக்கீங்களா?

(பொன்னாத்தாள் பதில் சொல்லுமுன்)

பண்பாளன்: (மருத்துவரிடம்) எவ்வளவு பணம் கட்டணும்?

மருத்துவர்: இருங்க, கேட்டுச் சொல்றேன்.

செவிலி: ரூ 5750 ஆகிறது.

பண்பாளன்: இந்தாங்க...,இதில் முழு தொகையும் இருக்கு.

அன்பு: (இடை மறித்து) அப்பா! எங்கிட்டே 6115ரூபா இருக்கு. நீங்களும் அம்மாவும் அப்பப்ப கொடுத்த பணத்தைச் சேமித்து வெச்சுருக்கேன். இந்தாங்க மருத்துவர் ஐயா...,(முழுத்தைகையையும் செலுத்திவிட்டு எஞ்சிய தொகையை கதிர் அம்மா கையில் கொடுத்தான்...அன்பின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்)

கதிர்: "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

      நன்னயம் செய்து விடல்.' என்ற குறளுக்கு நீதான் எடுத்துக்காட்டு அன்பு! உன் உதவியையும், பெருந்தன்மையையும் என் உயிருள்ளவரை மறக்க மாட்டேன். (வணக்கம் சொல்லி விடை கொடுத்தான் கதிர்)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com